(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 53 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

54 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 பதினாலாவது கட்டுரை பாகவத புராணம் குறித்து ஆய்வு முடிவுகளை வழங்குகிறது.

ஃபிரீதம் ஆருடி என்னும் அறிஞர் ‘விரகபத்தி’ என்னும் ஆங்கில நூலில் பாதவதபுராணத்தில் ஆழ்வார்கள் பாடல்களின் தாக்கம் மிகுதியாக இருப்பதாகச் சான்றுடன் அறிவிக்கிறார். எனினும் இவர் நப்பின்னையைக் கிருட்டிணனின் உடன்பிறப்பாகிய சுபத்திராவாகத் தவறாகக் கூறியுள்ளார். பாகவதபுராணம் ஆழ்வார்களின் பாடல்களுக்குக் கடன்பட்டிருப்பதாக 45 பாடல்களின்பட்டியலைத் தருகிறார்.

சகந்நாத பண்டிதரின் ‘பாமினி விலாசம்’ குறித்துப் பதினைந்தாவது கட்டுரை விளக்கம் அளிக்கிறது.

பாமினி விலாசத்தின் நான்காம் பகுதியாகிய ‘சாந்த விலாசம்’ திருமாலையும் கண்ணனையும் போற்றும் பாடல்கள் பாகவதத்திற்குச் சென்ற ஆழ்வார்களின் தமிழ்ப்பாசுரங்கள் என எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்பேரா.ப.ம.நா. மேலும் அவர், “சமற்கிருத நூல்களில் பெரிதும் பாராட்டப்பெறும் ‘பாமினி விலாசம்’ படைக்கும் இயற்கைக் காட்சிகளில் சங்க இலக்கியச் செல்வாக்கையும் அது கூறும் அறக்கருத்துகளில் திருக்குறள், நாலடியார் போன்ற அற இலக்கியங்களின் செல்வாக்கையும் அது திருமாலைப் போற்றும் பாடல்களில் ஆழ்வார் பாடல்களின் செல்வாக்கையும் தெளிவாகக் காணலாம்” என்கிறார்.

புள்ளின் துயர் தீர்த்த தமிழ் மன்னன்: வரலாறும் புராணமும் என்பது அடுத்து வரும் பதினாறாவது கட்டுரை.

தேரூர்ந்த முறைசெய்த தமிழ் மன்னனின் வரலாறு பிற்காலச் சோழர்காலத்தில் ஆரியத் தொன்மமாக மாற்றப்பட்டதைப் போலவே புறநானூறு சுட்டும் புறாவின் புன்கண் தீர்த்த தமிழ் மன்னின் வரலாறும் பிற்காலச் சோழர் காலத்தில் நம்பகத்தன்மை யிழந்த ஆரியத் தொன்மமாக உருமாற்றம் செய்யப் பெற்றது. மன்னனின் பெயரைக் குறிப்பிடாமல் புறநானூற்றுப் பாடலடிகள் சொல்லும் செய்தி பின்னர் வந்த இலக்கியங்களிலும் செப்பேடுகளிலும்  சிற்பங்களிலும் இடம் பெறுவதோடு சமற்கிருத மகாபாரதத்திற்கும் சென்றுள்ளது. வியாசபாரதம் சொல்லும் கதையே மூலம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இஃது இடைச்செருகலாகப் பின்னாட்களில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகப் புலப்படுகிறது.

கிள்ளிவளவனைப் பாராட்டும் பொழுது அவனின் முன்னோன் ஒருவன் புள்ளின் துயர் தீர்த்த செய்தி  ஒரே அடியில்

புள்ளுறு புன்கண் தீர்த்த வெவ்வேல் (புறநானூறு 37)

என மாறோக்கத்து நப்பசலையாரால் பாராட்டப் பெறுகிறது.

ஆவூர் மூலங்கிழார் (புறநானூறு 39), மாவளத்தான் தாமப்பல் கண்ணனார்(புறநானூறு 43), கோவூர் கிழார்(புறநானூறு 46), இளங்கோ அடிகள்(சிலப்பதிகாரம்: வழக்குரை காதை, கட்டுரைக் காதை, நீர்ப்படைக் காதை, வாழ்த்துக் காதை), கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழனுலா, கம்பர், பரிமேலழகர் ஆகியோர் பாடல்கள், நூல்களில் இருந்து தமிழ் மன்னரின் வரலாற்றுச்செய்தியாகப் புறவின் துயர் தீர்த்த நிகழ்வு கூறப்படுகிறது. உதயேந்திரம் தொகுதியில் உள்ள சமற்கிருதச் சுலோகத்தில் (கி.பி.922) புறாவைக் காத்த மன்னனுக்கும் அவன் முன்னே்ார்களுக்கும் சமற்கிருதப்பெயர்கள் தரப்படுகின்றன.

வேளஞ்சேரிச்செப்பேட்டிலுள்ள சமற்கிருதச் சுலோகம் இந்நிகழ்வில் அக்கினியை நுழைக்கிறது.

அன்பில் செப்பேட்டுத் தொகுதியில் உள்ள சமற்கிருதச் சுலோகம்சோழ மன்னனின் தந்தைக்கு உசீநரன் என்னும் சமற்கிருதப் பெயரைச் சூட்டுகிறது. மேலும் அச்சுலோகத்தில் புறா, புறவின்மகவு எனக் குறிக்கப்பெறுகிறது. திருவாலங்காட்டிலுள்ள சமற்கிருதச் சுலோகம், சிபிக்கு மருத்தன் என்பான் மகனாகப் பிறந்ததாகவும் அவன் வேள்விகள் செய்தபிறகு எஞ்சியிருந்த செல்வத்தைக் கொண்டே பாண்டவர்கள் வேள்வி செய்தனர் என்றும் புதிய கதையைச் சேர்க்கிறது. ஆணைமங்கலம் செப்பேட்டுத் தொகுதியில் உள்ள சமற்கிருதப் பாடல் தமிழ் மன்னனின் வரலாற்றைச் சமற்கிருத இதிகாசமாகிய மகாபாரதத்திற்கு இழுத்துச் செல்கிறது. இதே செய்தியும் மேலும் இரு சுலோகமும் புத்தூர் செப்பேட்டுத் தொகுதியிலும் காணக்கிடக்கின்றன.

புறநானூற்றுப்  பாடல்களில் தொடங்கி, சிலப்பதிகாரம்,பரிமேலழகர் உரை, கலிங்கத்துப் பரணி, மூவருலா, கம்பராமாயணம், சங்கர சோழனுலா ஆகிய இலக்கியங்களிலும் பிற்காலச் சோழர்கள் வெளியிட்ட ஆறு செப்பேட்டுச் சாசனங்களிலும் மகாபாரதத்திலும் தமிழ் மன்னன் புறாவின் துன்பத்தைத் தீர்க்கத் தன் உடற்சதையை அரிந்து கொடுக்க  முன்வந்த அருஞ்செயல் பேசப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் மிகச் சுருக்கமாகப் பேசப்படும் நிகழ்ச்சி மகாபாரதத்தில் மிக விரிவாக நம்பகத்தன்மை யிழந்த புராணமாக உருப்பெறுகிறது. தமிழ்ப்பெயர் ஏதும் சுட்டப்படாமல் சமற்கிருதப் பெயர்கள் முதலிடம் பெறுகின்றன. மன்னன் தமிழனா, வடபுலத்தவனா, என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வகையிலும் அவன் வரலாறு புறநானூற்றுக் காலத்திற்கு முன்பே மகாபாரதத்தில் இடம் பெற்றிருந்தது என்று தவறான முடிவுக்கு வரும் வகையிலும் வரலாறு புராணமாக மாற்றப்பட்டுள்ளது.

பதினேழாவது கட்டுரையின் தலைப்பு ‘தேரூர்ந்த தமிழ் மன்னன்: இலக்கியத்திலும் பிற கலைகளிலும்’ என்பதாகும்.

 ஒரு முறை, சோழமன்னன் ஒருவன் கோயிலின் முன்புறத்தே கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை ஆட்டி ஒலி எழுப்பியது பசு ஒன்று. பசுவின் கண்ணீர் மன்னனின் நெஞ்சத்தை வருத்தியது. அதற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்குக் காரணமான தன் மைந்தனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றான். வெவ்வேறு காலங்களில் படைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தில் வழக்குரைகாதையிலும் வாழ்த்துக்காதையிலும், மணிமேகலையில் சிறை செய் காதையிலும் பழமொழிப் பாடல் ஒன்றிலும் பரிமேலழகர் உரையிலும் கலிங்கத்துப்பரணியிலும் விக்கிரம சோழன் உலாவிலும் குலோத்துங்க சோழன் உலாவிலும் இராசராச சோழன் உலாவிலும் சங்கர சோழன் உலாவிலும் அரியசமய தீபன் என்னும் நூலிலும் மன்னனின் பெயரை ஏழாரன் எனக் குறிப்பிட்டு ஈழநாட்டு மகாவம்சத்திலும் பெரியபுராணம், மனுநீதிச் சோழன் புராணம், திருத்தொண்டத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி, தியாகேசர் குறவஞ்சி, போற்றி பஃறொடை, தேரூர்ந்த சோழபுராணம், தேரூர்ந்த சோழன் கதை, மனுநெறி கண்ட வாசகம், பிற நூல்களிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா., மேலைநாடுகளில் இலக்கியங்களுடன், இசை,நடனம், ஓவியம், சிற்பம் முதலான கவின்கலைகளையும் ஒப்பிட்டு ஆயும் ஒப்பிலக்கிய ஆய்வு நடைபெறுவதாகவும் தாமும் அவ்வாறு இதனைச் செய்ய முயல்வதாகவும் தெரிவிக்கிறார்.

விக்கிரமன் சோழன் காலத்தில் கி.பி.1123, மே 31இல்கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுத் திருவாரூர்க் கோயில் தென்புறச் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்ப்பெயர்களெல்லாம் சமற்கிருதப்பெயர்களாக மாற்றப்பட்டுள்ளன. கற்பனைச்செய்திகளும் பொய்யுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இந்நிகழ்வு மெய்யோ, பொய்யோ என்று குழம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்திலேயே தமிழர் வரலாறு ஆரியத் தொன்மமாக மாற்றப்பட்டுள்ளது என்னும் உண்மையை இதன் மூலம் உணர்த்துகிறார்.

மன்னனின் பெயர் மனு, மகனின் பெயர் பிரிய விருத்தன், அமைச்சன் பெயர் உபயகுலாமலன் என ஆரியப்பெயர்களும் ஆரியத் தொன்மக் கூறுகளும் சேர்க்கப்பட்டுத் தமிழ் மன்னனின் வரலாற்றுப் பெருமை மிக்க செயல் நம்ப முடியாத ஆரியத் தொன்மக் கதைகளில் ஒன்றெனக் கருதுமாறு மாற்றம் செய்யப்பெற்றுள்ளது.  

காத்தையார்    வாயாடியார் என்பாரின் முன்னோரால் காக்கப்பட்டது மனுநீதிச் சோழ மகாராச நாடகம்.  இது தஞ்சாவூரில் உள்ள ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூரில் ஐந்து நாட்கள் நாடகமாக நடிக்கப்படுகிறது. இதில் கதைபற்றிய நாட்டார் பாடல்களும் இடம் பெறுகின்றன.

மனுநீதிச்சோழன் புராணம் விக்கிரமசோழன் காலத்தில் கற்சிப்பக் காட்சிகளாக வடிக்கப்பட்டுள்ளன. திருவாரூர்க்கோயிலில் கோபுரங்கள், குளம், மணிமண்டபம் முதலான பல இடங்களிலும்  கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

திருவிடைமருதூர்க்கு அருகில் உள்ள திரிபுவன வீரேச்சரம் எனும் பெருங்கோயிலில் சோழமன்னன் வரலாறு கூறும் ஏழு சிற்பங்கள் உள்ளன. திருக்கோடிகா என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலிலும் சிற்பங்கள் உள்ளன. திருக்கழுக்குன்றத்து மலையடிவாரத்திலுள்ள பத்தவச்சலேசுவரர் கோயிலிலும் சிற்பத் தொகுப்பு உள்ளது.

ஆந்திர மாநிலம் இலெபாட்சி என்னும் ஊரில் வீரபத்திரசாமி கோயி்ல் மண்டப விதானத்தில் எழுபது அடி நீளமும் மூன்றரை அடி அகலமும் உள்ள கதைக்காட்சிகளை விளக்கும் ஓவியம் உள்ளது. இது பதினாறாம் நூற்றாண்டு ஓவியம்.

இவ்வாறு கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாற்றுச் செய்தி, கி.பி.இரண்டாம் நூற்றாடிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நூல்களிலும் கூத்துகளிலும் நாட்டார் பாடல்களிலும் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் இடம் பெற்று வந்துள்ளது. இந்த உண்மை நிகழ்வை நம்பகத்தன்மை இழந்த கட்டுக்கதையாகத் தமிழினப்பகைவர்கள் மாற்றியுள்ளனர். தமிழ் மன்னனின் பெயரை வடபுலப் பெயராக மாற்றியும் வடவருடைய தொன்மக் கூறுகளாகிய மூடநம்பிக்கைகள், இயற்கையிகந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளன.  குடவாயில் மு.பாலசுப்பிரமணியன் ‘செம்மொழித்தமிழ் நூல்களில் தொன்மக் கூற்றுகளும் அவற்றின் கலை வடிவங்களும்’ என்னும் நூலில் இச் செய்திகளைத் தொகுத்துத் தருகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 55/69  )