தமிழன் வாயில் .. … வேண்டாத வடநாட்டு  ‘ஜி’

ஆர் எசு எசு-இன் சூழ்ச்சியை உணர்ந்து தமிழ்நெறியைக் காப்பீர்!

இக்கால் அடிக்கடி ‘ஜி’ எனும் சொல்லினைப் பல இடங்களில் கேட்க முடிகிறது. வடநாட்டில் வடவர்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடு அழைத்துக்கொள்ளப் பயன்படுத்துகின்ற ‘ஜி’யை இன்று தமிழர் சிலரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சுவாமி’ஜி’, குரு’ஜி’, குமார்’ஜி’, இராதா’ஜி’, இராமா’ஜி’… என ‘ஜீ’…நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் குட்டிப் போட்டு வருகின்றது..

இந்தியாவின் ஆர் எசு எசு( RSS) … இந்தியாவில் மட்டும் தன் கைவரிசையைக் காட்டவில்லை . தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியாவிலும் தன் சித்து வேலையைத் தொடங்கியிருக்கிறது..

அதற்கு இங்குள்ள இந்து அமைப்புகள் வழியமைத்துக் கொடுத்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளில் சமயப் பாடம் எனும் போர்வையில் ஆர் எசு எசின் உச்சிக்கொண்டை தெளிவாகத் தெரிந்தாலும் அதைத் தெளிவாக அறியக் கூடிய நிலையில் தமிழர்கள் இல்லை. அதற்கு அவர்கள் தமிழர்கள் என்பதை விட இந்துவாக எண்ணிக் கொண்டிருப்பதே கரணியமாகும். தமிழர்கள் என எண்ணினால் தமிழ்வழி தமிழிய வழிச் சிந்தனை வாழ்வு இருக்கும். இந்துவாக எண்ணுவதால்..ஆரிய இந்துத்துவ சிந்தனை வழியே மேலோங்கி இருக்கிறது. எனவே தான் ‘ஜீ’க்களும் ‘ஶ்ரீல ஶ்ரீ’க்களும் முகத்தை மிகத் துணிச்சலாகக் காட்டுகின்றன.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர் ஒருவர், இந்த இந்துவப் பயிற்சியாளரிடம் ஏன் வேண்டாத, எங்களுக்குப் புரியாத சமற்கிருதத்தைத் திணிக்கிறீர்கள் என்று கேட்க, உங்களுக்குச் சங்க இலக்கியப் பாடல் புரிகிறதா , புரியாத சங்க இலக்கியத்தை ஏற்றுகொள்ளும் போது சமசுகிருதத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் என்றாராம்.. அட கெடுமதியாளர்களே! கழக இலக்கியப் பாடல்கள், எங்கள் தாய்மொழிப் பாடல்கள்; அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது என்றால் தமிழனே தமிழை விட்டு அகன்று அயல்மொழியின் தாக்கம் கொண்டதுதான் கரணியம். அதுவும் இந்தக் கேடுகெட்ட சமசுகிருதத் தாக்கத்தால்தான். சமசுகிருதம் தமிழருக்கு அயல்மொழி . அயல் மொழி நமக்குப் புரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லையே. கழக இலக்கியங்கள் முழுக்க முழுக்கத் தமிழில் எழுதபட்டவை தமிழரின் தாய்மொழி. கொஞ்சம் முயன்றால் இயல்பாக விளங்கி விடுமே.

யாதும் ஊரே யாவரும் கேளிர்”  கழக இலக்கியப் பாடல்தானே .. விளங்கவில்லையா. எனவே கழக இலக்கியத்தோடு சமசுகிருதத்தை ஒப்பிடலாமா? சமசுகிருதம் நமக்கு விளங்கினால் என்ன விளங்காமல் போனால்தான் என்ன ? அந்த மொழியை ஏன் எங்களிடத்துத் திணிக்க வேண்டும்?

தமிழில் அத்தன் என்பது முதன்மையான அப்பனுக்கு உள்ள மற்றொரு சொல்லாகும். அத்தன் திரிபுற்று அச்சன் என்றாகும். இதுவே மலையாளத்தில் வழங்குகின்றது. அத்தன் அச்சனாகி அச்சன் அச்சியாகி அச்சி சீயாகிச் சிதைந்து இறுதியில் வடமொழியில் ‘ஜீ’ யாகியது என்பார்.. பன்மொழிப்புலவர் பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்கள்.

சீவன் எனும் சொல்லின் சிதை வடிவம் என்று கூறுவார் உளர்.

ji

/dʒi/

combining form INDIAN

suffix: -ji

                1              used with names and titles to show respect.”Lalitaji”



Origin

via Hindi from Sanskrit jīva, 2nd singular imperative of jīv- ‘to live’, from an Indo-European root shared by Latin vivere ‘to live’.

என இதற்கு விளக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிவணுதல் என்பது இயைதல், பொருந்துதல் எனப் பொருள் விளக்கம் தரும். உடலோடு சிவணி, சிவ்வியிருப்பதே சீவனாயிற்று. எனவே உயிரைக் குறிக்கும் சமற்கிருதச் சொல்லாகக் கருதப்படும் சீவனும் தமிழ்ச் சிவணின் மருவலே. இவ்வுண்மை அறியாமலும், உணராமலும் இச்சொல்லுக்கு மூலம் சமசுகிருதம் என்பது நுணுகி ஆராயாததே கரணியமாகும். தமிழ் வேரினை மூலமாகக் கொண்டிருப்பினும் மொழிமாறி சிதைவுற்ற ஒரு சொல்லினை அப்படியே் தமிழில் ஏற்கக் கூடாது… அவ்வாறே ஒரு சிதைவடிவத்தைத் தமிழில் பயன்படுத்துவது தமிழின் கேட்டிற்கே வழிவகுக்கும் .

தமிழ்ச்சொல்லை மூலமாகப் பெற்று சமற்கிருதச் சொல்லாகவோ அயற்சொல்லாகவோ திரிந்த திரி சிதைச்சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்பது தெளிந்த நீரில் நஞ்சு கலப்பது போலாகி விடும்.

எடுத்துக்காட்டாக,

பூ > புஷ்பம்

அரசன் > ராஜா

திரு > ஶ்ரீ

காயம்> ஆகாஷ்

மாந்தன்> மனுஷ்யன்

கண்ணன்> கிருஷ்ணன்

தேயம்> தேஷ்

கயம்> கம்

இப்படிப் பல சொற்கள் தமிழில் வழங்கப்பட்டன. இன்றும் வழங்கப்படுகின்றன. தனித்தமிழியக்கத்தாரின் பேருழைப்பால் பல கலைந்தெறியப்பட்டன.

இருப்பினும்.. வடவாரிய சிந்தனைகளையும் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் புகுத்தித் தமிழரை, தமிழைச் சமசுகிருத மயப்படுத்தும் நோக்கில்  இம்முயற்சி மேலும் வலுப்படுத்தப்பட்டு தமிழில் புகுத்தப்பட்டு வருகின்றது.

இராட்டிரிய சேவா சங்கத்தில் (RSS) பயிற்சி பெற்றார் மலேசியாவிலும் இயங்குகின்றனர். ஆர் எசு எசு எனத் தெரியக்கூடாது என்பதற்காக… பல்வேறு இரவல்  முகங்களில் அவர்கள் இயங்குகின்றனர் . அவர்களால் செயற்படுத்தப்படும் செயல்களில் ஒன்றுதான் ‘ஜி’… இதை ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ‘ஜி’ யை இணைத்துக்கொள்வர்.

தமிழியத்தைச் சாகடித்து தமிழ் அடையாளத்தை இழந்து வேறு வேறு அடையாளங்களுடன் தமிழினத்தின் பெரும்பகுதி சிதைந்து கொண்டிருக்கிறது.. தமிழன் எந்தெந்த அயல் தாக்கத்தைப் பெறுகிறானோ அந்தந்த அயல் வடிவமாக மாறிக்கொண்டிருக்கிறான். தமிழனின் முதல் தாக்கம் ஆரியம் என்பதால் ஆரியத்தின் வாயிலாகவே கடுஞ்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன என்பதை வரலாற்றால் தெளிவாக அறிமுடிகிறது. ஆரியத் தாக்கத்தின் விளைவே திரவிட மொழிகளின் பிறப்புகள்.. தமிழினம் இதன் வாயிலாக தனக்குள் தானே அயலினமாக மாறியது.. இன்று வேறுபட்டு கிடக்கின்றது.

இத்தகு கேடுகளைத் தமிழுக்கும் தமிழர்க்கும் விளைத்த சமசுகிருதவாக்கத்தையும் ஆரிய சனாதன வெறியையும் தமிழர்கள் ஒட்டுமொத்தமாகத் தூக்கிய எறிய கிஞ்சிற்றும் தயங்கிடல் கூடாது. தமிழர்க்கு வாழ்வியல் தமிழ்நெறியே அன்றி ஆரிய நெறியன்று.

இரா. திருமாவளவன்