தமிழிடம் கடன் வாங்கியுள்ள வேதமும் நாட்டிய சாத்திரமும்- ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 56 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
57 / 69
வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)
நிறைநிலையாக இரு கட்டுரைகளையும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார். ஒன்று, ‘தமிழும் சமற்கிருதமும் : வேதநூல் வல்லுநரின் தீர்வு’.இரண்டாவது கட்டுரை ‘பரத முனிவரின் நாட்டிய சாத்திரம்’.
இருக்குவேத ஆய்வுகள் (Rig Vedic Studies) என்னும் நூலை வேத விற்பன்னர் சுர்தரராசு 7 தொகுதிகளாக எழுதியுள்ளார்.தம் ஆய்வு முடிவுகள் சிலவற்றை இணைப்பாக(Rig Vedic Studies: Addendum)அவர் தொகுத்துத் தந்துள்ளார். அச்சிறுநூல் நான்கு கட்டுரைகளை உள்ளடக்கியது. அன்னார் நிறுவும் ஆய்வு முடிவுகள் வருமாறு:
ஒள(ஓம்) என்பது தூய சமற்கிருதச்சொல் என்றும் தமிழ்ப்பண்பாட்டிற்குள் ஊடுருவி விட்டது என்றும் தவறாக நம்புகின்றனர். ‘ஒளம்ன்’ என்பதன் முதல் எழுத்தாகிய ‘ஒள’தமிழிலேயே முதலில் தோற்றம் பெற்றது. கிறித்துக்குப் பின் சில நூற்றாண்டுகள் வரையிலும் கூட சமற்கிருதத்திற்கு எழுத்துகள் உருவாக்கப்படவில்லை.
தமிழ் எழுத்து வழக்கானது தொன்மையானது.
முதல் இரண்டு சங்கங்கள் இருந்திருக்க வேண்டுமென்பதை நம்புவதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
பிராமிக்கு மூலம் பழந்தமிழ் எழுத்தே.
கி.பி. ஒன்பது,பத்தாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமற்கிருத ஒலியனியலுக்கேற்றவாறு தமிழ் சிதைக்கப்பட்டு வட்டெழுத்து உருவாக்கப்பட்டது. ஆனால், இம்முயற்சி தோல்வியடைந்து வட்டெழுத்து மறைந்தது.
ஒள என்பது மூலத்தமிழ் எழுத்தே.
இவ்வாறு முதல் பிரிவில் விளக்கம் அளித்துள்ளார்.
இரண்டாம் பிரிவில் பின்வருவன சொல்லப்படுகின்றன.
இருக்கு வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்களின் பெயர்கள் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பெறப்பட்டவை என்பதை வேர்ச்சொல்லாய்வு மூலம் அறியலாம்.
இருக்குவேதத் தொன்மங்களில் சில இன்று தமிழகத்தில் கொண்டாடப்படும் விழாக்கள், திராவிட மக்கள் பேணும் சடங்குகள் ஆகியவற்றின் மறைமுக வருணனைகளே.
விட்ணு, விருத்திரன், அதிதி, அசுவின், சுரோனா,கிரித்திகா, சதபிசக்கு, சியேசத, உரோகினி, மூலா, மது, திரியம்பிகா போன்ற பெயர்களுக்கெல்லாம் வேர்களைத் தமிழ் மொழியிலேயே காணமுடியும். இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் அவற்றைக் காணும் முயற்சி வீணானது.
தமிழகத்துக் கோட்பாடுகள் சிந்துவெளியின் மூலம் இருக்குவேதத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.
எனவே,சமற்கிருதத்திற்கும் தாயாகத் தமிழே உள்ளதைப்புரிந்து கொள்ளலாம்.
“கலைகள், சமயம்,மொழி, தத்துவம் ஆகிய எல்லாத் துறைகளிலும் சமற்கிருதத்தில் தோற்றம் பெறுவதற்குத் தமிழ்ப்பண்பாடே தூண்டுகோலாகவும் அடித்தளமாகவும் அமைந்தது. வேர்ச்சொற்களில் மட்டுமல்லாமல் கட்டமைப்பிலும் சமற்கிருதம் தமிழை ஒத்தே காணப்படுகிறது. எனவே, ஆரியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே மூலத்தமிழ்ப்பண்பாடு மிகவும் வளர்ச்சியுற்றதாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறாகச், சமற்கிருதத்திலிருந்து தமிழ் தோன்றி வளர்ந்ததென்னும் கூற்று ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியதாகும்.”
முப்பத்து மூன்று தமிழ் எழுத்துகள் இருக்கு வேதத்தில் முப்பத்து மூன்று தெய்வங்களாகின்றன.
தமிழில் சொல்லைத் தொடங்கக்கூடாத மெய்யெழுத்துகள் எட்டு. இதைப்போல வசுக்கள் எட்டு.
சொல்லைத் தொடங்கக்கூடிய 10 மெய்யெழுத்துகளுடன் ஆயுதத்தைச் சேர்த்தால் 11. இவை 11 உருத்திரர்களோடு பொருந்தும்.
சமற்கிருதத்தில் ஏழாவது எழுத்தான ‘க்ரு’ தமிழ்க் குற்றியலுகரத்திலிருந்து பெறப்பட்டது.
இவ்வாறு ஆரியத் தெய்வங்களை தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார்.
நான்காவது பிரிவில் சமற்கிருதத்திற்கு மூலமாகத் தமிழ் இருப்பதை விளக்குகிறார்.தருமா, ஆரியா, தாசா, இருக்கு, அரி எனப்பலசொற்களும் தமிழில் இருந்து பிறந்தனவே என விளக்கியுரைக்கிறார்.
இருக்குவேத சமற்கிருதத்தைக்காட்டிலும் தமிழ்மொழி தொன்மையும் உயர்வும் உடையதென்பதும் அதற்கான மொழியியல் பண்பாட்டுக்கூறுகளைத் தமிழே தந்ததென்பதும் நாம் ஏற்றுக் கொள்ளற்குரியவை.
மொழியியல் தேவைக்கேற்றவாறு தமிழ் எழுத்து முறையும் இலக்கண விதிகளும் அமைந்துள்ளன. தமிழ்ச்சந்திவிதிகள் எளிமையானவை.
தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும் இருக்குவேதத்திற்கும் வேத சமற்கிருதத்திற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே பெருவளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; முன்னதிலிருந்து பின்னது பேரளவிற்குக்கடன் பெற்றிருக்க வேண்டும்.
தொல்காப்பியம் கூறும் இலக்கண விதிகள் பல இருக்கு வேதத்தில் இடம் பெறுகின்றன.
வேதங்களும் இருக்குவேத சமற்கிருதமும் பெரும்பாலும் தமிழ்ப்பண்பாட்டாலேயே உருவாக்கம் பெற்றுள்ளன.
பேரா.பரோ இருக்குவேதத்தில் ஏறக்குறைய 20 திராவிடமொழிச் சொற்கள் காணப்படுகின்றன என்ற தவறான முடிவில் இருந்தார். பல இருக்குவேதச் சொற்களுக்குத் திராவிட வேர்களே பொருந்துவதையும் இந்தோ ஐரோப்பிய வேர்கள் சற்றும் பொருந்தாமையையும் காணலாம்.
ஊர் ஊராகச் சுற்றித்திரிந்த வலிவுடைய ஆரியர்கள் உயர்ந்த நிலையிலிருந்த திராவிட நாகரிகத்தின் முதல் தாக்கத்தினால் சமற்கிருத மொழியையும் சமற்கிருத இலக்கிய மரபுகளையும் உருவாக்கிக் கொண்டனர். எனவே, நாம் சமற்கிருதம் என்று அழைக்கின்ற கலப்பு மொழி உருவானது வெகுகாலத்திற்குப் பின்தான். அதன்பின்னே வேதங்கள் தோன்றின.
இவ்வாறு வேத விற்பன்னர் சுந்தரராசு ஆராய்ந்து சமற்கிருதத்திற்கு எழுத்திலும் சொல்லிலும் மூலமாகத் தமிழ் உள்ளமையைத் தெரிவிப்பதை நமக்குத் தெரியச் செய்கிறார்.
பிற்சேர்க்கை இரண்டாவதாகப் பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் பற்றிய கட்டுரை இடம் பெறுகிறது.
தொல்காப்பியத்தின் மூலம் நாட்டிய சாத்திரம் அன்று என்பதற்கு அது காலத்தால் பிந்தியது என்பது மட்டுமல்லாமல் வேறு காரணங்களும் உண்டு என என அவற்றைத் தொகுத்துத் தருகிறார்.
நாட்டிய சாத்திரத்தின் முதன்மையான முதலில் எழுதப்பெற்ற 6,7 போன்ற அத்தியாயங்கள் கி.பி.மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாதென்றும் மற்ற இடைச்செருகல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டாம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டன வென்றும் கீத்து(Keith) போன்ற மேலை விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நாட்டிய சாத்திரத்தின் தொடக்க அத்தியாயங்களின் முதல் தோற்றமே தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த தென்பது தேற்றம்.
மெய்ப்பாட்டியலின் சிறப்பையும் நாட்டிய சாத்திரத்தின் கட்டுப்பாடற்ற அமைப்பையும் தெளிவற்ற விளக்கத்தையும் ஒப்பிட்டுத் தொல்காப்பியமே மூல முதல் நூல் என விளக்கியுள்ளார்
சமற்கிருதக் கல்வியியலைப்பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர் கேரளபுரக் கிருட்டிணமூர்த்தி. இவர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மெய்ப்பாட்டியல் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பரத முனிவர் இரசக்கோட்பாட்டை அமைக்க முயன்றுள்ளமையையும் பின் வந்தவர்கள் தத்தம் விருப்பு வெறுப்பிற்கேற்பப் பல கருத்துகளைப் பொறுப்பில்லாமல் சேர்த்து நாட்டிய சாத்திரத்தை விரிவு படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார். எனவே, கடன் வாங்கிய பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தைத் தொல்காப்பியத்தின் மூலமாகக் காட்டும் வரலாற்றுப் பிழையை இனியும் செய்யக் கூடாது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 58/69)
Leave a Reply