(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 54 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

 55 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

பதினெட்டாம் கட்டுரை தமிழ்-வடமொழி உறவு குறித்தது.

தமிழ்-சமற்கிருத உறவு நீண்ட நெடுங்காலமாக விருப்பும் வெறுப்பும் கலந்து பகையும் நட்பும் இணைந்து இருந்துவரும் வியப்புக்குரிய தொடர்பாகும். இவற்றிற்குரிய கொள்ளலும் கொடுத்தலும் தொடர்ந்து  நிகழ்ந்து வந்திருப்பினும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அறிஞர்கள் உண்மையாகவும் நேர்மை உணர்வுடனும் செயல்பட்டிருக்க, சமற்கிருதச் சார்புடையார் வஞ்ச நெஞ்சினராய்த் தமிழ் இனம்,மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்துத் தாழ்த்தி சமற்கிருதமும் இலக்கியமும் மேம்படுவதற்கான நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும்  மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

இக்கட்டுரை ஒன்பது உட்பிரிவுகளை உடையது.

சமற்கிருதச் சார்புடையார் தமிழுக்கு இழைத்த கேடுகளைத் தேவநேயப்பாவாணர் அரிய பட்டியலாகத் தந்துள்ளார். இரண்டாம் பிரிவில் சமற்கிருத எதிர்ப்பு என்பது பல நூறாண்டுகளாக இருந்து வருவது என்றும் அது சமற்கிருத மொழியினர் செய்து வந்த அடாவடிச் செயல்களுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையே என்றும் அறிஞர்கள் கூறு்ம் உண்மையைப்  பேரா.ப.ம.நா. தெரிவித்துள்ளார்.

சமற்கிருதத்தைத் தேவமொழியென்றும் தமிழை நீசமொழியென்றும் இழித்து வருவதையே தொடர்பணியாகக் கொண்டிருப்பதால் இறைநெறிப் பாவலர்களும் இறைவனின் மொழி தமிழ் என வலியுறுத்தி வந்துள்ளனர் என்பதைப் பல சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சமற்கிருதச் சார்புடையார் தமிழுக்கு எதிராக என்னென்ன செய்தார்கள் என்னும் வரலாற்றுச் செய்திகளைத், திராட்டுமன்(Trautmann) தம் இரு நூல்களில்(Dravidian Proof, Madras School of Orientalism) தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ் மேம்பாட்டிற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளை எல்லாம் அவர்களுக்கு நெருக்கமான பிராமணர்கள் அவற்றை எதிர்த்துத் தடுத்து வந்துள்ளனர் என்ற செய்திகள் தெரிகின்றன. பிராமணர்களின் அடாவடிச்செயற்பாட்டைக் கூறும் வரலாற்றுச் செய்திகளில் ஒன்று;  வெங்கையா என்பவர், தமிழ்-சமற்கிருத அகராதி ஒன்றைத் தொகுக்க நிதியுதவி கேட்டிருந்தார். அவர் பிராமணர் அல்லர் என்பதால் நிதியுதவி தரக்கூடாது என்றதுடன்அவருக்கு எதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டு அவரைத்தாக்கி அவர் வீட்டை இருமுறை இடித்துள்ளனர். இத்தகைய செயல்களுக்கு எதிர்வினையாகத்தான் தமிழறிஞர்கள் சமற்கிருதஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட நேர்ந்தது.

சமற்கிருத எதிர்ப்பு என்பது தமிழ் நிலத்தில் மட்டுமல்லாமல் பிற மொழி நிலங்களிலும் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது. இராசசேகரின் காவிய மீமாமுசா என்னும் சமற்கிருத நூலில், “குசராத்தியரே சமற்கிருதத்திற்கு முதல் பகைவர்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். சமற்கிருதம் தவளை கத்துவதுபோன்ற இனிமையற்ற ஓசைகளைக் கொண்டதென்றும், உயர்ந்த காப்பியங்கள் எழுதுவதற்குத் தகுதியற்ற மொழி யென்றும் பிராகிருத மொழியினர் பலமுறை கூறியுள்ளனர். இந்தி மொழிக் கவிஞர் கபீர்தாசு, “சமற்கிருதம் தேங்கிய குட்டை. இந்தி மொழியே நீர் ஓடும் ஆறு” என்று கூறி அதனால்தான் தம் காவியத்தை இந்தி மொழியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழியில் உள்ள சொற்களின் சிறப்பு வேறு எம்மொழியிலும் இல்லை என்னும் மேலை அறிஞர்களின் கருத்துகளையும் இக்கட்டுரை மேற்கோளாகத் தருகிறது.

செருமானிய அறிஞர்கள் ஆரிய இனப்பற்று காரணமாகச் சமற்கிருதத்திலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையும் அம்மொழியையும் அளவுக்கு மீறிப் பாராட்டி எழுதியும் பேசியும் வந்தனர். மனுநூலைப் படிக்காமலேயே நீட்சே என்னும் பேரறிஞர் அது பெண்களின் பெருமையைப்பேசும் அரிய நூலென்று எழுதினார். சமற்கிருத நூல்களின் காலவரையறை செய்யாததால் அவற்றைத் தொன்மையானவை எனத் தவறாகக் கருதி ஏமாந்தனர். பின் மறு ஆய்வுகள் காரணமாக அவைஎல்லாம் தவறென உணர்ந்தனர். கிரேக்க, உரோமத் தொன்மங்கள், காப்பியங்கள், நாடகங்கள் தழுவலாகச்சமற்கிருத இதிகாசங்களும் பிறவும் உள்ளமையை உணர்ந்தனர்.

சங்க இலக்கியங்களிலிருந்து அரிய பல உவமைகளையும் உத்திகளையும் கருத்துகளையும் வடநூலார் பெற்றிருக்கிறார்கள்;  மனுநூல், அருத்த சாத்திரம், காமசூத்திரம் ஆகியவற்றிற்குத் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பாலிலிருந்து பல கருத்துகளைச் சேர்த்துக் கொண்டனர்;

கம்பரது இராமாயணத்திலிருந்து வால்மீகி இராமாயணத்திற்கு அரிய பாடல்களை எடுத்துச் சென்றனர் என்பதை உணர்ந்தனர். தொல்காப்பியத்தை அறியாத நிலையில் பாணினீயத்தை உயர்ந்த நூலாகக் கருதிய தவற்றினை உணர்ந்தனர்; அறிவியல் கருவிகள் இல்லாத காலத்திலேயே தமிழ்ப்பேச்சொலிகளைத் துல்லியமாகக் காட்டும் சிறப்பு மிக்க தொல்காப்பியத்தை உணர்ந்து போற்றினர். இவ்வாறான இரு மொழித் தொடர்புகளையும் தமிழின் மீஉயர் சிறப்புகளையும் நான்காம் பிரிவில் ஆய்ந்து எழுதியுள்ளார்.

ஏ.சி.பருனல்(A.C.Burnell) தம் ஐந்திரக் கருத்தாளரின் இலக்கணவாதிகள் (The Aindra School of Sanskrit Grammarians,1875) என்னும் சிறு ஆய்வேட்டில் தவறாகவும் சரியாகவும் தெரிவித்துள்ள கருத்துகள்பற்றி ஐந்தாம் பிரிவில் ஆராய்கிறார்.

தமிழ் மொழியானது சமற்கிருத மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது; தமிழ் எழுத்துகள் சமற்கிருத மொழி இலக்கணக்காரர்கள் அம்மொழியை ஆராயத் தொடங்கிய காலத்திற்கு முன்னதாகவே வேறு எம்மொழிக்கும் கடன்படாது உருவாக்கப்பட்டிருந்தன என்பதற்கு  வலுவான ஆதாரங்கள் உண்டு; இடைச்செருகல்கள் மூலம் சமற்கிருத நூல்களில் இந்தியர்கள் செய்த மோசடிகள் வெளிப்படையாகக் கண்டு கொள்ளக்கூடியவை; சமற்கிருத நூல்களைக் கொண்டுகால வரையறை செய்ய இயலாது; அவ்வாறு கால ஆராய்ச்சி செய்தால் அது பெருந்தீங்கை விளைவிக்கும்;கிரேக்கப் பெயரகளைச் சமற்கிருதப் பெயர்களாகக் காட்டி உள்ளனர்;சமற்கிருதத்தில் உயர்தர இலக்கண நூல்களாகக் காட்டப்படுவன யாவும் கற்பனையான தவறான வேர்ச்சொற்களைத் தருவன; வேற்றுமொழிச்சொற்களை எல்லாம் சமற்கிருதச் சொற்களாகக் காட்டுவன; என்பனபோல் பல ஆய்வுரைகளை ஏ.சி.பருனல்(A.C.Burnell) தந்துள்ளதை நமக்கு எடுத்துரைக்கிறார்.

ஆறாம் பிரிவில் பாணினியின் ஏமாற்றுவேலைகளைக் குறிப்பிட்டுள்ளார். 1884இல் விட்டினி(Whitney), எட்கிரன்(Edgren) ஆகிய மேலை மொழியியல் வல்லார், பாணினியின் தாது பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1750 வேர்களுள் பெரும்பாலானவை கற்பனையானவை என வெளிப்படுத்திய உண்மையை நமக்கு உணர்த்துகிறார். பாணினி குறிப்பிடும் வேர்ச்சொற்கள் பாதிக்கு மேற்பட்டவை எந்தச்சமற்கிருத நூலிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று பாணினியின் புரட்டை அம்பலப்படுத்தும் விசுவநாத காய்ரே தரும் ஆய்வு முடிவையும்(2003) நாம் அறியத் தருகிறார்.

இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வேர்கள் என ஊகிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்; திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ளவை; வேர்ச்சொல்லாய்வு என்னும் ஏமாற்றுவேலை தவிரப் பாணினியின் இலக்கணம் வேறு பல குறைபாடுகளையும் உடையது எனப் பேரா.ப.ம.நா. தெரிவிக்கிறார்.

ஏழாம் பிரிவில் வேதவிற்பன்னர் சுந்தர் இராசு தமது இருக்குவேத ஆய்வுகள்(Rig Vedic Studies) என்னும் நூலில் தமிழ்-சமற்கிருத உறவு குறித்துக் கூறுவதை எடுத்துரைக்கிறார்.

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; வேதங்களில் தமிழின் தாக்கம் பெரிது; இருக்கு வேதத்தில் கையாளப் பெற்றுள்ளசமற்கிருதம் தமிழர்களின் மொழியால்தான்  உருப்பெற்றது;வேதத்தின் மொழியைப் படைத்த பிருகற்பதி, பழந்தமிழிலிருந்து  எழுத்துகளை எடுத்துக் கொண்டு சில மாற்றங்களைச் செய்து சமற்கிருத எழுத்துகளை உருவாக்கினார்; கி.பி.முதல் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமற்கிருத எழுத்துகள் உருவாக்கப்பட்டன; தமிழ் எழுத்துகளோ கிறித்துவிற்குப் பல நூற்றாண்டுகள் முன்னமேயே வழக்கில் இருந்தன; இவ்வாறான நடுநிலைக் கருத்துகளைத் தந்து தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் உள்ள உண்மையான உறவை வெளிப்படுத்தி உள்ளார்.

சட்டம்பி அடிகளார் வேறு எம்மொழியுடனும் ஒப்பிட இயலா நிலையுடைய தமிழின் சிறப்புகளைக் கூறுகிறார்.

பிராகிருதம் காலத்தால் சமற்கிருதத்தைவிட  முந்தையது, தமிழைவிடப் பிந்தையது; தமிழ் இலக்கணம், சமற்கிருத இலக்கணப் பாங்கைப் பின்பற்றவில்லை; சமற்கிருதத்தில் உள்ள பால் வேறுபாடுகள் பிழைபாடு கொண்டவை; இதுகுறித்த பதஞ்சலி முனிவர் விளக்கம் நகைப்பிற்குரியது; சமற்கிருதத்தில் வேறுபாட்டு அணிநயங்கள் இல்லை; “அம்” ஈறு தமிழிலிருந்து சமற்கிருதத்திற்குச் சென்றுள்ளது..

கால்டுவெல், ஈராசு அடிகளார், அசுகோ பார்ப்போலா, இலவிட்டு, திக்குசன், திராட்டுமென், ஆந்தரே சோபெருக்கு முதலான அறிஞர்களின் கருத்துகளின் அடிப்படையில் தமிழின் தொன்மைச்சிறப்பை எட்டாவது பிரிவில் விளக்கியுள்ளார். 

சமற்கிருத நூல்களோ பிறப்பால் வேறுபாடு காட்டி, வருணஅடிப்படையில் கடமைகளையும் உரிமைகளையும் வற்புறுத்தும்; சங்க இலக்கியங்களோ சமற்கிருத இலக்கியங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டவையாய், வெற்று ஆரவாரம் செய்யாதவையாய், பெண்ணிழிவு பேசாதவையாய், எல்லாக் குமுகாய அடுக்குகளிலும் அக்கறை கொண்டவையாய் விளங்குகின்றன என ஏ.கே.இராமானுசன் ஆய்வு அடிப்படையில் 9 ஆம் கட்டுரையில் விளக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 56/69 )