தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

1/ 69

 

தமிழ்ப்பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், ஆய்வாளர், மொழியியலறிஞர், ஒப்பிலக்கிய அறிஞர், திருக்குறளறிஞர், சங்க இலக்கிய அறிஞர், பன்னாட்டு இலக்கிய அறிஞர், தமிழின் செம்மொழி அறிந்தேற்பிற்குப் பின்புலமாக இருந்தவர், செம்மொழி இலக்கியச் சொற்பொழிவாளர், செம்மொழிச் செம்மல் எனப் போற்றப்படும் பன்முகச்சிறப்பாளர் பேரா.முனைவர் ப.மருதநாயகம் நானிலம் போற்றும் நல்லறிஞர்.

பேரா.ப.மருதநாயகம் உறையூரில் மூ.பரமசிவம் – வள்ளியம்மை இணையருக்குப் பிறந்தார். பதிவேடுகளின்படி இவர் பிறந்த நாள் வைகாசி 20, 1970 இல் 03.06.1939. ஆனால், பிறப்புக் குறிப்பின்படி ஆவணி 03, 1970/19.08.1939 இல் பிறந்துள்ளார்.

இவரது தாய்வழி உறவினரான நாகராசர் என்பார் ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய இருப்பூர்தித்துறையில் தலைமை அறிவுரைஞராக உயர் பதவி வகித்தவர்.  அவர் நினைவாக இவருக்குப் பிறப்பின்பொழுது நாகராசன் எனப் பெயர் சூட்டினர். அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் வரை இந்தப் பெயர்தான் இவருக்கு இருந்தது. எனினும் சேச ஐயங்கார் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட பொழுது இவரது முப்பாட்டனார் பெயரான மருதநாயகம் என்பதைப் பெயராக இவர் தந்தை பதிந்துவிட்டார். பழைய பெயர் மறைந்து மருதநாயகம் பெயரே நிலைத்துத் தமிழ் வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது.

 

கல்வி

பள்ளிக்கல்வியில் நூலாசிரியர்களாகவும் மொழி பெயர்ப்பாளர்களாகவும் திகழ்ந்த தகுதியில் சிறந்தவர்கள் இவருக்கு ஆசிரியராக அமைந்தனர். எனவே, தமிழார்வமும் ஆங்கில ஆர்வமும் இயல்பாய் அமைந்து, இருமொழிக்கல்வியிலும் சிறப்புற்றார். பள்ளியிறுதி வகுப்பில் மயிலை சிவமுத்துவின் தமிழ் மாணவர் மன்றம் நடத்திய மானில அளவிலான பொதுத்தமிழ்த்தேர்வு, சிறப்புத் தமிழ்த் தேர்வு இரண்டிலும் மாநில முதன்மை பெற்றார்.

திருச்சி தேசியக்கல்லூரியில் புகுமுக வகுப்பும் திருச்சி தூயவளனார் கல்லூரியில் கணக்கை முதன்மைப்பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். அப்பொழுது தந்தையார் மறைந்ததால் இவரின் மேற்கல்வியும் இவரை அணுகாமல் போயிற்று. எனினும் இவரின் சிறப்பான தேர்ச்சியால் அங்கேயே ஆங்கிலப் பயிற்றுநராகச் சேர்ந்தார்.

ஆங்கில ஆசிரியப் பணியால் இவரது கணித நாட்டம் ஆங்கிலத்திற்கு மாறியது. நிலையான பணிக்கு இவர் முயன்றதால் திருச்சியில் உள்ள தொடரிப்பெட்டித் தொழிற்சாலைக்கு எழுத்தர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியப்பணியில் விடுவிப்பு பெற்றார். ஆனால், சீனப்போரால் புதிய பணியமர்த்தங்களுக்கு மத்தியஅரசு தடை விதித்தது. எனவே, தேர்வில் வெற்றி பெற்றும் பணியில் சேர இயலவில்லை. கல்விப்பணிக்கும் அதனால் தமிழ்ப்பணிக்கும் இவர் திரும்புவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இதன்பின்னர் சில திங்கள் கழித்துத் தஞ்சாவூர் சரபோசி கல்லூரியில் ஆங்கிலப்பயிற்றுநராகச் சேர்ந்தார். ஓராண்டுப் பணிக்குப் பின்னர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் புதியதாகத் தொடங்கப்பட்ட ஆங்கில முதுகலை இலக்கிய வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற்றார்(1965-67).

இக்காலத்தில் இவரின்மொழியியல் ஆய்வியல் கட்டுரைகளாலும் முதலாமாண்டிலேயே புதியதாக நிறுவப்பட்ட தாத்தாச்சாரியார் நினைவுப் பரிசைப் பெற்றதாலும் ஆசிரியர்கள், மாணாக்கர்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் உரியவரானார்.

இங்கே ஆய்வுப்பணிக்கும் பதவி உயர்விற்கும் வாய்ப்பின்மையால் 1974 இல் விருதுநகர் செந்திற்குமார(நாடார்) கல்லூரியில் ஆங்கில இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார்.

அமெரிக்க அரசு இந்தியாவில் உள்ள பல்துறை ஆசியர்களுக்கும் கிழக்கு மேற்குப்பண்பாட்டு மையம் மூலமாகக் கல்வி உதவித்தொகை அளித்து வருகிறது. இதற்கான தேர்வில் வெற்றி பெற்று, அமெரிக்க அவாய் பல்கலைக்கழகத்தில் சனவரி முதல் திசம்பர் வரை பயின்று அமெரிக்க இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 12 பாடங்கள் உள்ள இதில் முதலிடத் தேர்ச்சி பெற்றார்.  மூவாண்டு முனைவர் பட்டம் பெற வாய்ப்பிருந்தாலும் அதைக் கைவிட்டுக் குடும்பத்தாருடன் இருக்க விரும்பித் தமிழகம் திரும்பினார். மதுரை காமராசர் பல்கலைககழகத்தில் ஆங்கில இணைப்பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்(1977-1986)

அமெரிக்காவில் பயின்ற பொழுது ஆய்வுக்கட்டுரைகளும் ஆய்வுரைகளும் வழங்கினார். அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று ‘தமிழ்க்கவிதையின் சிறப்பு’ என்பதாகும். இவரது கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தமையால் மதுரைக்கு வந்ததும் இவர் அனுப்பிய கட்டுரைகள் அமெரிக்க இதழ்களில் வெளிவந்தன. அமெரிக்காவில் வெளியிட்ட ‘எழுத்தாளர்களும் திறனாய்வாளர்களும்(Writers and Critics)’ என்னும் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றது.

இதுவரை விளக்க முடியாத பகுதிகளுக்கான விளக்கங்களை மட்டும் அமெரிக்காவில் ஓரிதழ் வெளியிட்டு வந்தது. அதில் இவர் கட்டுரைகளும் இடம் பெற்றன. சங்க இலக்கியங்களில் தேர்ச்சி உடையவர்களால் ஆங்கில நாடகங்களுக்கு ஆங்கில அறிஞர்களால் விளக்கம் தர முடியாத பகுதிகளுக்கும் விளக்கம் தரமுடியும் என்பதை உணர்ந்து கொண்டதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்(1980-82) தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப்  பட்டம் பெற்றார். தொன்மத்திறனாய்வு குறித்த ஆங்கில ஆய்வேட்டிற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம்(1982) வழங்கியது. அங்கேயே பிரெஞ்சு மொழிப்பட்டயம் 1986இல் பெற்றார். அதே பல்கலைக்கழகம் தெ.பொ.மீ.பற்றிய தமிழ் ஆய்வேட்டிற்காக முனைவர் பட்டம்(1996) வழங்கியது. ‘

1986இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மாலைக்கல்லூரியின் இயக்குநராகக் கூடுதல் பொறுப்பேற்றார். ஆங்கிலம், கணிதம், வணிகவியல் துறைகளில் ஆய்வியல்(எம்ஃபில்) பட்ட வகுப்பை அறிமுகம் செய்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அப்பொழுது நடுவணரசின் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிவாய்ப்பு வந்தது..  அதே நேரம், (தஞ்சாவூர்) தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியத் துறைப் பேராசிரியராகவும் பதவி ஆணை வந்தது. மதுரையிலேயே தொடருமாறு அங்குள்ளோர் வலியுறுத்தினர். இருப்பினும் நடுவணரசின் புதிய பல்கலைக்கழகம் என்பதால் புதுச்சேரியில் பணியில் சேர்ந்தார். இப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்டங்களுக்கு ஒப்பிலக்கியத் தலைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து ஆய்வாளர்களை ஒப்பிலக்கியத்திற்கு ஆயத்தப்படுத்தினார். நாடு முழுவதிலும் உள்ளவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆங்கிலத்துறையை மாற்றிச் சிறப்பான புகழ் பெற்றார்.

துணைவேந்தர் வற்புறுத்தலால் பதிவாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். இருப்பினும் இதில் ஈடுபாடில்லாமையால் உடல்நிலை சரியில்லை யென்று கூறி ஐந்து மாதப் பொறுப்பிலிருந்து விலகினார்(25.10.1999 – 20.3.2000). மீளவும் ஆங்கிலத்துறைக்கே சென்றுவிட்டார்.

‘தமிழ்ச்செவ்விலக்கியங்கள் – ஒப்பியல் பார்வை’  என்னும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுதிக்காக நடுவண் அரசின் பாண்டிச்சேரி  பல்கலைக்கழகம்  முதல் முதுமுனைவர் பட்டத்தை இவருக்கு வழங்கியது(2000). அதுவரை மதிப்புநிலை முதுமுனைவர் பட்டம்தான் வழங்கப்பெற்று வந்தது.

30.06.2001 இல் ஈராண்டு பணி நீட்டிப்பு கிடைத்தது. இருப்பினும் புதுவை மாநில முதல்வர் இரங்கசாமி அவர்களின் வேண்டுகோளால் புதுவை மொழியியல் பண்பாட்டுக் கழகத்தின் இயக்குநராகச் சேர்ந்தார். ஆய்வுரைகள், உரையரங்கங்கள், கருத்தரங்கங்கள், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், பயிற்சிப்பட்டறைகள் முதலியவற்றைத் திறம்பட நடத்தி இந்நிறுவனத்தை உயர்நிலைக்குக் கொணர்ந்தார்.

(தொடரும்)

– – இலக்குவனார் திருவள்ளுவன்

 

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி  பேராசிரியர் ப. மருதநாயகம்  2/ 69 ]