(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

16/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

17/ 69

மனுவும் கீதையும் பொதுவான அறநூல்கள் அல்ல; ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் நெறியற்ற நூல்கள்;பெண்களை இழிவு படுத்தும் நூல்கள்; மக்களைப் பிறப்பிலேயே உயர்ந்தோராகவும் தாழ்ந்தோராகவும் வகைப்படுத்தும் இழிந்த நூல்கள்; மிக உயர்ந்த நூல்களாகப் பொய்யுரைகள் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட நூல்கள் என அயோத்திதாசர் விளக்கியமையை மூன்றாம் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

‘வடநூல்களில் வள்ளுவம்’ என்னும் நான்காவது கட்டுரை மூலம், எந்தெந்த சமற்கிருத நூல்களில் என்னென்ன திருக்குறள் கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன என அயோத்திதாச பண்டிதர் விளக்கியுள்ளதை எடுத்துரைக்கிறார்.

திருவள்ளுவர் தம் நூலை வியாழன், வெள்ளி ஆகியோரின் நூற்களை ஆதாரமாகக் கொண்டு எழுதியுள்ளார் என்னும் கூற்றை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே அடியோடு மறுத்தவர் அயோத்திதாசர்.

வடநூல் மதம்’, ‘வட நூலார் அறம்’ பற்றி அடிக்கடி பேசும் பரிமேலழகர் குறள் கூறும் கருத்தில் வருணாசிரம தர்மத்தை வலிந்து திணிப்பதை மறுத்து விளக்கியுள்ளார். திருக்குறளை மூலமாகக் கொண்டே வட நூல்களாகிய சுக்கிரநீதி, கெளடலீயம், அருத்தசாத்திரம் ஆகியவை தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பண்டிதர் தெளிவுபடுத்தியுள்ளார்.

குறள் காட்டும் வாழ்வே உயர்ந்த வாழ்வு, சிறந்த வாழ்வு என அயோத்திதாச பண்டிதர் உணர்த்துவதை ஐந்தாம் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். திருவள்ளுவரின் பெற்றோர்பற்றிய பொய்க்கதைகள் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதையும் திருவள்ளுவமாலையில் எவ்வாறு இடைச்செருகல் நிகழ்ந்தது என்பதையும் அயோத்திதாசர் வரலாற்று ஆதாரங்களோடு வெளியிடுவதைக் குறிப்பிடுகிறார்.

1831 ஆம் ஆண்டு வெளிவந்த திருக்குறள் நூலில் வள்ளுவரின் பெற்றோர்பற்றிய கட்டுக்கதைகள் ஏதுமில்லை. சில குறட்பாக்களையும் அவற்றின் கருத்துகளை உள்ளடக்கிய வேறு தமிழ் இலக்கியப் பாக்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எல்லிசு தம் பெயரில் வெளியிட்ட நூலிலும் வள்ளுவரின் கற்பனை வரலாறு சொல்லப்பட வில்லை. விசாகப் பெருமாள் (ஐயர்) என்பார் 1835 ஆம் ஆண்டில் அச்சிட்ட திருக்குறள் நூலின் இறுதியில் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனவென்றும் அவற்றுள் ஒருகுழந்தை வள்ளுவர் என்றும் அவர் ஒரு வைசியகுலப்பெண்ணை மணந்து இல்லறம் நடத்தும்போது குறளை யாத்தார் என்றும் கூறும் ஒரு சிறிய அகவற்பா சேர்க்கப்பட்டது. விசாகப்பெருமாளையரின் இளவல் சரவணப் பெருமாளையர் 1837 ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகத்தின் தொடக்கத்தில் இதனை மேலும் விரித்துப் பொருந்தாப் பொய்கள் பலவற்றையும் சேர்த்தார். அவர் அச்சிட்ட நான்காவது புத்தகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வொன்றும் பிறந்தவுடன் ஒரு வெண்பாப் பாடியதாக ஏழு வெண்பாக்களையும் எழுதி இணைத்துள்ளதும் காணலாம். விசாகப் பெருமாளையர் வள்ளுவர் வைசியகுலப் பெண்ணை மணந்தாரென்று சொல்லியிருக்க, அவர் தம்பியோ நாயனார் வேளாள குலப்பெண்ணை மணந்தாரென்று மாற்றம் செய்தார். மூத்தவர் நாயனார் பிறந்த இடம் மயிலையென்று மட்டும் கூறி மற்ற அறுவர் பிறந்த, வளர்ந்த இடங்களைக் கூறவில்லை. இளையவர் ஏழு குழந்தைகளுக்கும் இடங்களைச் சுட்டியதல்லாமல் வேதாளக்கதை ஒன்றையும் சேர்த்தார்.

இவ்விருவர்களுடைய பொய்க்கதைகளையும் வேதகிரி முதலியார் தாம் 1847 இல் வெளியிட்ட நூலில் விரிவாக்கம் செய்த கதை நகைப்புக்குரியது. விசாகப்பெருமாளையரின் அகவற்பா சோழநாட்டு அந்தணனுக்கு உயர் குல மனைவியால் பகவன் என்னும் மைந்தன் பிறந்து வளர்ந்து கருவூர்ப்புலைமகள் ஆதி அவனை அணுகியபோது அவளை அடித்து விரட்டிவிட்டு மறுபடியும் அவளைச்சந்தித்தபோது இருவரும் கூடி ஏழு பிள்ளைகளைப் பெற்றார் என்று பேசும். வேதகிரி வெளியிட்ட நூலில் பிரமன் ஒரு யாகம் செய்து அதில் கலைமகள் பிறக்க அவளையே மணந்து மறுபடியும் அகத்தியராகத் தோன்றி சமுத்திர கன்னிகையை மணந்து பெருஞ்சாகரனென்பாரைப் பெற, அப்பெருஞ் சாகரன் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்தியைக்கூடி பகவனைப் பெற்றதாகவும் அப்பகவன் பிரம்மவமிசத்துக் தவமுனிக்கும் அருண் மங்கை என்னும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து உறையூர்ப் பெரும் பறையனால் வளர்க்கப்பட்ட ஆதியை மணந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றதாகவும் இக்கதை விரிவாக்கம் பெற்றது. இதில் சங்கப்புலவர்கள் சிவனை அவமதித்ததால் சிவன் சங்கத்தை அழிக்கவேண்டி பிரமாவைத் திருவள்ளுவராகவும் சரசுவதியை ஒளவையாகவும் விட்ணுவை இடைக்காடராகவும் அவதரிக்கச் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கதைகளெல்லாம் வள்ளுவருக்குப் பிராமணத் தந்தையைத் தந்து அவர் பிறப்பில் பிராமணருக்குத் தொடர்புண்டு என்று காட்ட எழுந்தவையே என்பது வெள்ளிடை மலையாகும். இவ்வாறு பேரா.ப.ம.நா. தாசரின் கட்டுரை குறித்து விவரிக்கிறார்.

கடவுள் வாழ்த்தைப் புத்தரது சிறப்புப் பாயிரமாகக் கொண்டு அதன் பத்துப்பாக்களும் புத்த பிரானையே போற்றும் என்றும் கடவுள் வாழ்த்தில் மட்டுமல்லாமல் வேறிடங்களில் பல குறள்களை விளக்கும் போதும் தாசர் புத்தரையும் புத்த தன்மத்தையும் உள்ளே கொண்டு வந்துவிடுகிறார்  என்றும்  அவர் எழுதியுள்ளவற்றையும் விளக்குகிறார்.

அந்தணர் என்போர் சமணத் துறவிகளேயென்னும் கருத்தை வலியுறுத்தும் முகத்தான், ‘பார்ப்பான்’ என்பவன் தன்னை ஆராய்ந்தறிவோன் என்று தாசர் கூறுவது நம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய கருத்தாகும்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

 

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 18/ 69)