(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி)

சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்


இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும்.

இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சிறு கீறலும் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். காசுமீரை இந்தியா நசுக்குவது பற்றிக் கண்டுகொள்ள மாட்டர்கள்.

நேரு தவறு செய்தார் என்றோ மொரார்சி அல்லது வாசுபாய் தவறு செய்தார் என்றோ சொல்வார்களே தவிர, இந்தியா தவறு செய்தது என்று சொல்ல மாட்டார்கள். அரிதாகச் சில நேரம் இந்திய அரசமைப்பைக் கூடக் குறை சொல்வார்கள். ஆனால் இந்தியா என்ற கருத்தே தோற்று விட்டது என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். இந்திய அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று உழைத்தவரும், இந்திய அரசமைப்பின் சிற்பி எனப் போற்றப்படுகிறவருமான அண்ணல் அம்பேத்துகர் மூன்றே ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டார். ஆனால் அவரே கூட இந்தியா என்ற கருத்து தோற்று விட்டதாகச் சொன்னாரில்லை.

இலங்கையில் ‘முன்னாள்’கள் செய்யும் ‘ஆத்தும பரிசோதனை’ இது வரை இலங்கைத் தீவின் ‘சிறிலங்கா’ என்ற கட்டமைப்பின் புனிதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியதில்லை. சிறிலங்கா என்பது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரிசோதனை, அதாவது தமிழினவழிப்பை ஓர் இன்றியமையாக் கூறாகக் கொண்ட கட்டமைப்பு! இந்தப் பரிசோதனை, இந்தக் கட்டமைப்பு தோற்று விட்டது என்று ஒரு சிங்களத் தலைவர் ஒப்புக்கொள்வது எளிதன்று. அதிலும் ஆட்சித் தலைவர் (தலைமையமைச்சர்) அல்லது அரசுத் தலைவர் (குடியரசுத் தலைவர், சனாதிபதி அல்லது அதிபர்) பொறுப்பு வகித்த ஒருவர் சிறிலங்கா தோற்று விட்டதாக, அதாவது சிறிலங்கா என்ற கருத்து பொய்த்து விட்டதாக ஒப்புதல் அளிப்பது முயற்கொம்பே.
இதுவரை இப்படியிருந்த வரலாறு இப்போது மாறியுள்ளது. ஏனென்றால் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கா சிறிலங்கா தோற்று விட்டது என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2023 ஏப்பிரல் 16ஆம் நாள் அவர் பேசிய இந்தப் பேச்சு இந்து ஆங்கில ஏட்டில் செய்தியாக வந்த போது செய்தி அரசியல் நிகழ்ச்சியில் நான் இது பற்றிக் குறிப்பிட்டு அந்த ஒப்புதலின் முகன்மையையும், அதே நேரம் முழுமையின்மையையும் சுட்டிக் காட்டினேன். இப்போது சந்திரிகா உரையின் முழுச் செய்தி கிடைத்துள்ளது. சந்திரிகாவின் ஒப்புதல் பற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையும் வந்துள்ளது. விரைவில் தாழியில் பகிர்கிறேன்.

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 215