நோபல் பரிசிற்கான தகைமையாளர் பேரா.ப.மருதநாயகம்-இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 57 / 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
58 / 69
வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)
மேற்குறிப்பிட்டுள்ள மனு, பகவத்து கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக்காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின்தொன்மையையும்பற்றி விரிவாகவே தந்துள்ளார். எனினும் அவற்றைக் கோடிட்டுக்காட்டும் முகத்தான் சிலவே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. முழுமையாய் அறிய,இந்நூலைப் படித்து இன்பமும் அறிவும் அடைய வேண்டுகிறேன்.
இவ்வாறு ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும் பேராய்வு நூலைத் தந்துள்ளமைக்கே பேராசிரியர் இருமொழிப்புலவர் முனைவர் ப.மருதநாயகம் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். இவர் சமற்கிருதத்தின் போலிச்சிறப்பையும் பொய்யாக அதைப் போற்றியும் எழுதியிருந்தார் என்றால் அவருக்குப் பல கோடிச் செல்வமும் உயர் பதவிகளும் வழங்கப்பட்டிருக்கும். சமற்கிருத நூலாரின் ஏமாற்று வேலைகளையும் கபடச் செயல்களையும் தோலுரித்துக் காட்டியுள்ளமையால் இவரைப் புறக்கணிக்கவே செய்வர். இவர் எத்தகைய காழ்ப்புணர்ச்சியிலோ மொழி வெறியிலோ இந்நூலைப் படைக்கவில்லை. சமற்கிருத அறிஞர்களின் கருத்துகளைத் தெரிவித்து அவற்றின் அடிப்படையிலேயே சான்றாதாரங்கள் அளித்து வடமொழி செம்மொழி அல்ல என்பதை நிறுவியுள்ளார்.
ஒரு மொழியின் செம்மொழித் தன்மைக்கு அடிப்படையாக அமைவன அம்மொழியின் இலக்கியங்களே. அந்த வகையில் சமற்கிருத நூல் ஒவ்வொன்றையும் அடிப்படையாகக் கொண்டு அதனதன் பொய்யான சிறப்புகளையும் தொன்மை, முதன்மை முதலான இட்டுக்கட்டப்பட்ட சிறப்புகளையும் விளக்கி, சமற்கிருத நூற்கருத்துகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கியங்களுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் கடன்பட்டுள்ளன எனத் தெளிவாக்கியும் சமற்கிருதத்தின் செவ்வியல் தன்மை இன்மையைச் செம்மையாக விளக்கியுள்ளார். இக் கருத்துகளை நாம் பல தளங்களிலும் பரப்ப வேண்டும். திருட்டு புரட்டு மொழிக்குச் செம்மொழி என்ற பெயரில் அளித்து வரும் நிதியுதவிகளை நிறுத்த வேண்டும். பிற மொழியினரின் வரிப்பணத்தில் அதற்கு வீண் செலவு செய்வதையும் நிறுத்த வேண்டும். சமற்கிருதம் செம்மொழி எனக்கூறும் பொய்யான பரப்புரைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
தமிழின் காலத்தைப் பின்னுக்குத்தள்ளி மொழிச்சிறப்பை மறைத்து இழித்தும் பழித்தும் எழுதுநருக்குத் தக்க மறுமொழிகளை நடுநிலையான பன்னாட்டு அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் விளக்கித் தமிழ் ஒன்றே உயர்தனிச்செம்மொழி என்பதை ஆய்ந்து நிறுவியுள்ளார்.
இந்நூல் ஒன்றே அவரின் நோபல் பரிசிற்கான தகைமையை எடுத்துரைக்கும். எனினும், பிற மொழி இலக்கியங்களில் உள்ள தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கு, ஒப்பிலக்கியக் கட்டுரைகள் மூலம் திருக்குறளின் சிறப்பும் தாக்குறவும், பிற மொழி இலக்கியங்களுக்கு வழிகாட்டியான சங்க இலக்கியங்கள், திறனாய்வுக் கட்டுரைகள், காலங்கள் தோறும் தமிழ்க்கவிதைகள் சிறப்பு. மொழிபெயர்ப்புப் பணிகள், தமிழ் மொழியின் தூய்மை, தாய்மை, தொன்மை, செம்மை முதலியவற்றை எடுத்துரைக்கும் பாங்கு முதலியவற்றை நடுநிலையுடன் தரும் ஆய்வுப்படைப்புகளுக்காகவும் பேரா.ப.மருதநாயகத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும். கவிதை இலக்கியத்தை மட்டும் இலக்கியமாகக்கொள்ளாமல் ஆராய்ச்சி இலக்கியத்தையும் இலக்கியமாகக் கருதி அவருக்கு நோபல்பரிசு வழங்க வேண்டும். இதற்குப்பரிந்துரைக்கும் தகுதியாளர்கள் இவர் பெயரைப் பதிந்து ஆவன செய்ய வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 59/69)
Leave a Reply