பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை 2/2; இலக்குவனார் திருவள்ளுவன்
(பிறமொழி நூல்களில் திருக்குறள் கருத்துகளின் பரவல்: அணிந்துரை ½ – தொடர்ச்சி)
முனைவர் மெய்.சித்திரா, ஆங்காங்கு
பிறமொழி நூல்களில்
திருக்குறள் கருத்துகளின் பரவல்:
அணிந்துரை 2/2
மக்கள், மன்பதை, குடும்பம், அன்பு, விருப்பு-வெறுப்பு, நட்பு, வானகம்-வையகம், அண்டம், இயற்கை, அரசு, போர், அழுக்காறு, நன்னெறி, அறம், ஒழுக்கம், அரசாண்மை, அறிவு, வாழ்க்கை, பற்று, காலம், மொழி, பொருளியல், அரசியல், உறவு, வலியறிதல், பொறுமை, பணிவு, எளிய தீர்வுகள் எனப் பல பொருண்மைகளில், திருக்குறள் நூலிலும் தாவோ தே சிங்கு நூலிலும் உள்ள ஒப்புமைக் கருத்துகள் பலவற்றையும் எடுத்து விளக்குகிறார்.
“தங்குமிடத்தின் நலன் நிலத்தில்,
இதயத்தின் நலன் ஆழத்தில்,
ஈகையின் நலன் கனிவில்,
மொழியின் நலன் நம்பிக்கையில்,
அரசின் நலன் ஆட்சியில்,
பணியின் நலன் திறனில்,
செயலின் நலன் காலத்தில்.
…
இந்தப் பாடலில் வரும் கருத்துகள் அனைத்தையும் நாம் திருக்குறளில் பலவிதங்களில் விரவி இருப்பதைக் காணலாம்” என்கிறார். இத்தகைய ஒப்புமைகள் மூலம் திருக்குறள் உலகப்பொதுமறை என்பதை நிறுவுகிறார்.
ஏழாவது கட்டுரை, அரசாண்மை பற்றி ஒப்பீட்டு கருத்துகள் (Similarities in the concept of Governance) என்பது அட்டோபர், 2022 இல் கம்போடியாவில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப் பெற்றது.
இக்கட்டுரையில் நாடு, இறைமாட்சி, கொடுங்கோன்மை, வலியறிதல், பகைத்திறம் தெரிதல், படைமாட்சி ஆகிய திருக்குறள் அதிகாரங்கள் வழித் திருவள்ளுவர் கூறும் கருத்துகளையும் ஒப்புமையான கருத்துகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள ஒப்புமைக் கருத்துகள் சிலவற்றை இதிலும் குறிப்பிட்டுள்ளார்.
எட்டாவது கட்டுரை பற்றுதல் பற்றி ஒப்பீட்டு கருத்துகள் (Similarities in the concept of Desire) குறித்தது. இக்கட்டுரை, இத்திங்கள் சென்னையில் நடைபெற உள்ள,தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பழந்தமிழரின் அற நெறிகளும் பண்பாட்டுக் கூறுகளும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கத்தில் வாசிப்பதற்கானது.
திருவாளர்கள் சே.தனபால், சிரீதேவி, அறவேந்தன், இராசா ஆகியோரின் கட்டுரைகளில் இருந்து அவர்கள் தெரிவிக்கும் ஒப்புமைக் கருத்துகளை நமக்கு எடுத்துரைக்கிறார். “இந்த இரு நூல்களும் அறம், பொருள் பற்றி குறிப்பிடுவதன் மூலம், பல இடங்களில், ஒத்த கருத்துகளைக் கொண்டதாய் விளங்குகின்றன.” பற்று, பற்றற்ற தன்மை, பற்று நெறி முதலானவற்றில் உள்ள ஒப்புமைகளையும் எடுத்துரைக்கிறார்.
ஒன்பதாவது கட்டுரை, சாணக்கிய நீதி நூலின் பின்புலம் குறித்தது.
பத்தாவது கட்டுரை, மார்ச்சு 2023, உலகத்தமிழ் இதழில் வெளிவந்த காகம் மற்றும் ஆந்தையின் குணங்கள் (Characters of Crow and Owl) என்பது.
காக்கை, சங்க இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும் பழமொழிகளிலும் குறிப்பிடப்படுவதாகவும் திருக்குறளில் இரண்டு இடங்களில் குறிக்கப் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றார். அதேபோன்று காகத்திடமிருந்து ஐந்து குணங்களைக் கற்றுக் கொள்ளலாம் (4.14) என்று சாணக்கியர் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கிறார். நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைத் தங்களுடைய பாடல் வரிகளிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.
பதினொன்றாம் கட்டுரை பிப்பிரவரி 2024 இல் தமிழணங்கு இதழில் வெளிவந்த, வாழ்க்கைத் துணை, குடும்பம் மற்றும் குழந்தைகள் பற்றிய ஒப்பீட்டுக் கருத்துகள் (Comparative study on Spouse, Family and children) என்னும் கட்டுரை.
வாழ்க்கைத் துணைநலம், இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது, தற்காத்து தற்கொண்டாற் பேணி, பிறன் பழிப்பதில்லாயின் அன்று, மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், பிறன்மனை நோக்காத பேராண்மை போன்ற ஒத்த கருத்துகளை அறிஞர்கள் இருவரிடமும் காண்கிறார் நூலாசிரியர். இதனால் இருவரும் ஒத்த காலத்தவர் எனக் கருதுகிறார் நூலாசிரியர். ஒத்த கருத்துகளாக இருப்பதால் ஒத்த காலம் எனக் கருதுவது ஏற்புடைத்தாகாது. முன்னவர் கருத்துகளைப் பின்னவர் எடுத்தாண்டிருக்கலாம் அல்லவா? அதற்கேற்ப இவரே, “வள்ளுவர் இதற்கும் முன்பு கீழடி காலத்திலோ முந்தைய காலத்திலோ வாழ்ந்தவராகவும் கூறலாம்” எனக் கூறியுள்ளார்.
பெண்வழிச்சேறல் முதலிய அதிகாரம் மூலம் திருவள்ளுவர் பெண்ணடிமைப் பாவலராகச் சிலர் கூறுவர். இவர், கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாய் நாணத்தைக் கொடுக்கும் என்றும் கடமையை ஆற்ற வேண்டியவர்கள் இல்லறச் சிற்றின்பத்தை நாடினால் புகழடைய மாட்டார்கள் என்றும் விளக்கம் தருகிறார். இவற்றின் மூலம், வாழ்க்கைத் துணை எனக் கூறும் திருவள்ளுவர் பெண்ணை இழிவாகக் கூறவில்லை என்றும் சிற்றின்பம் தருநரிடம் அடிமையாக இருப்போர்பற்றிததான் கூறுகிறார் என நல்விளக்கம் அளித்துள்ளார்.
தமிழணங்கு இதழில் வெளிவந்த ‘பெண்ணியல் ஒப்பாய்வு ‘(Comparative study on Feminism) என்னும் தலைப்பிலானது அடுத்த கட்டுரை.
“இல்லறவியலில் 20 அதிகாரங்களும், களவியலில் 7 அதிகாரங்களும் கற்பியலில் 18 அதிகாரங்களும் பெண்ணியல் கருத்துகளைக் கூறுகின்றன. பெண், மடந்தை, மாதர், பெண்டிர், மகளிர், இல்லாள், துணை, தாய், அணங்கு, காரிகை என்று பல்வேறு பெண்கள் தொடர்புடையச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.” என விளக்கியுள்ளார்.
குடும்பம், மக்கள், இல்லறப்பண்புகளைத் திருக்குறளிலும் சாணக்கிய நீதியிலும் எடுத்தாண்டு குறித்துள்ளமை பாராட்டிற்குரியது. ஆனால் இதனால் காலக் குழப்பத்திற்கு ஆட்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. திருவள்ளுவருக்குப் பிற்பட்ட சாணக்கியர் திருக்குறட் பாக்களைத் தம் நூலில் பயன்படுத்தியுள்ள அவரது தமிழ் இலக்கிய ஈடுபாட்டைப் பாராட்டலாம்.
பதின்மூன்றாம் கட்டுரை, “நட்பு – ஒப்பாய்வு கருத்துகள்” என்பதாகும்.
“ஐந்து அதிகாரங்களில் நல்ல நட்பும் தீய நட்பும் ஒருவருக்கு என்ன செய்யும் என்பதைப் பல விதங்களில் எடுத்துக் கூறி, மாந்தரை நெறிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் விளக்குகிறார்; சாணக்கிய நீதியிலும் இத்தகைய நட்பு பற்றிய கருத்துகள் பல விரவிக் கிடக்கின்றன.” அவற்றை ஒப்பாய்வு செய்து வழங்கியுள்ளார்.
சாணக்கிய நீதி நம்முடைய தமிழ் இலக்கியங்களுடன் இதுவரையிலும் ஒப்புமை செய்யப்படவில்லை என்று நூலாசிரியர் நம்புகின்றார். ஆனால் இரு நூல்கைளப் பாராட்டியும் சாணக்கிய நீதியின் தழுவலைச் சுட்டிக்காட்டியும் சில வந்துள்ளன.
திருவள்ளுவருக்கும் சாணக்கியருக்கும் பல ஒத்த எண்ணங்கள் இருப்பதாக நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இவற்றின்அடிப்படையில் சாணக்கியரைத் திருவள்ளுவருக்கு முந்தையவராகக் கூடக் கருதுகிறார்.
“சாணக்கிய நீதி நூலின் பின்புலம்’ கட்டுரையின் ஒரு நோக்கம் திருவள்ளுவர் சாணக்கியருக்கு சமகாலத்தவராகவோ அவருக்கும் முந்தையவராகவோ இருக்கலாம் என்பதற்கான சில சான்றுகளைக் கொடுப்பதும் ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையில் “சாணக்கிய நீதி நூல், பொ.ஆ.மு. நான்காம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுக்கு இடையில் என்று வரையறுக்கப்பட்டது.” என்கிறார்.
பெண்ணியல் ஒப்பாய்வு கட்டுரையில், “திருவள்ளுவர், சாணக்கியர் ஆகிய இருவரும் ஒத்த காலத்தவர்கள் என்பதற்குச் சான்றாகவும் விளங்குகிறது. அல்லது வள்ளுவர் இதற்கும் முன்பு கீழடி காலத்திலோ முந்தைய காலத்திலோ வாழ்ந்தவராகவும் கூறலாம்.” என்கிறார்.
ஆரிய நூல்களைத் தவறாகச் சிறப்பித்துக் கூறியும் அவற்றின் காலத்தைத் தமிழ் நூல்களுக்கு முன்னதாகத் தவறாகக் காட்டியும் எழுதப்பட்டுள்ள தவறான கற்பித நூல்களின் அடிப்படையில் இவ்வாறு நூலாசிரியர் எழுதியுள்ளார்.
‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’(Is the Arthasastra a Mauryan Document?) என்னும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு (Mark Mcclish), அருத்த சாத்திரம் மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று; அதனை எழுதியவர் சாணக்கியர் என்ற பெயரில் சந்திரகுப்புத மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர்; அது, சந்திரகுப்புத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பெற்ற நூல் என நிறுவியுள்ளார். இதனை நமக்குத் தெரிவிக்கும் பேரா.ப.மருதநாயகம், கி.பி.நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த அருத்த சாத்திரமே திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டுள்ளது என்பதைச் சிறப்பாக ஆறாம் கட்டுரையில் விளக்கியுள்ளார். (கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்!, அகரமுதல மின்னிதழ்)
இவ்வாறான ஆய்வுரைகள் மூலம் திருவள்ளுவருக்கு மிகவும் பிற்பட்டவர் சாணக்கியர் என்பதை உணரலாம். வருங்காலங்களில் இவ்வுண்மையைப் பல்துறை அறிஞர் முனைவர் மெய்.சித்திரா பரப்ப வேண்டும்.
சில கருத்துகள், வெவ்வேறு கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் இடம் பெற்றிருக்கக் காணலாம்.இதன் காரணம், அந்தந்தக் கட்டுரைத் தலைப்புகளில் வலு சேர்ப்பதே. கட்டுரைத் தொகுப்புகளில் இவ்வாறான நேர்வு நிகழ்வது இயற்கையே. எனவே, இவற்றைக் கூறியது கூறலாக எண்ண வேண்டா.
இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com
வெளியீடு
மின்கவி, கோபிச்செட்டிப்பாளையம்,ஈரோடு 638452,பேசி 9826227537, பக்கங்கள் 166, விலை உரூ.150/-
Leave a Reply