(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

17/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

18/ 69

வட நூலார் மதமென்றும் வேதநெறியென்றும் மனு நூலென்றும் தமது உரையில் பரிமேலழகர் ஆங்காங்கே சுட்டி அவற்றின் அடிப்படையில் வள்ளுவர் தம் கருத்துக்களைச் சொல்வது போன்ற தோற்றத்தை உண்டாக்குவார். அயோத்திதாசர் தமது உரையில் இவற்றை முற்றும் களைந்து புத்த, சமண நெறிக்கேற்ற கருத்துகளே திருக்குறளில் இடம்பெறுகின்றனவென்று வலியுறுத்துவதையும் எடுத்துரைக்கிறார்.

மேலும் பின்வருமாறு பேரா.ப.ம.நா. எழுதியுள்ளார்:

வேட்டல்என்பதைத்திருமணம் செய்தல்என்னும் பொருளில் எடுத்துக் கொண்டு, அருளுடைமைஎனும் அதிகாரத்து முதற்குறளுக்கு உரையெழுதும் போது தாசர் தரும் செய்தி அதிர்ச்சியூட்டுவது.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்

ஆரியார் கண்ணும் உள

 எனப் பாடம் கொண்டுகிருபையை நிரப்பும் சீரே சீரினும் சீர் எனப்படும், தனதானியச் சீரோ மிலேச்சரிடத்தும் உண்டுஎன்று பொருள் உரைத்துஆரியார்என்ற சொல்பூரியார்என்று யாரால் எப்பொழுது மாற்றப்பட்டதென்பது பற்றியும் தெரிவிப்பார்.

திருக்குறளின் ஐம்பத்தைந்து அதிகாரங்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ள அயோத்திதாசர் திருவள்ளுவரைப் புத்த சமயத்தைச் சார்ந்தவராகவே கொண்டு நூல்போதிப்பது புத்த சமய அறக் கோட்பாடுகளே என்பதை உரைமுழுவதும் அடிக்கோடிட்டுக் காட்டுவார். எப்பாடலுக்கும் ஏற்கனவே உள்ள உரை எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் தம் சொந்த உரையை முன்னிறுத்துவார். அறத்துப்பால் உரை முடிவில் அவர் கூறும் கருத்து உள்ளத்தைத் தொடுவதாகும்.

அவர் சில பாடல்களுக்குக் கூறும் உரைகள் பொருத்தமற்றவையாக, குறையுடையனவாக, தவறானவையாக இருக்கலாம். ஆயினும் திருக்குறள் உரையில் வெளிப்படும் அவரது அறிவின் வீச்சும் ஆழமும் பெரும் பாராட்டுக்குரியது.

ஆறாவது கட்டுரையில் ‘தமிழில் பெளத்தம், பெளத்தத்தில் தமிழ்’ குறித்து விளக்குகிறார்.

பாலிமொழியும் சமற்கிருதமும் அறிந்தவராயினும் அயோத்திதாசர் பெளத்தக் கோட்பாடுகளைப் பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களைக் கொண்டே விளக்குவதையும் புத்தரது வரலாற்றையும் கூட அவற்றை வைத்தே மீட்டுருவாக்கம் செய்வ தையும் நமக்கு விளக்குகிறார்.  .

ஆத்திசூடியை ஆத்திச்சுவடி யென்றும் கொன்றை வேந்தனைக் குன்றைவேந்தன் என்றும் வெற்றிவேற்கையை வெற்றி ஞானம் என்றும் அழைத்து அவற்றின் காப்புச் செய்யுள்களிலிருந்து இறுதிப் பாடல்கள் வரை அவை புத்தரையும் புத்த நெறியையும் போற்றுகின்றன வென்பதை வலியுறுத்தும் வகையில் உரை வரைவார். ஆத்திச்சுவடியின் காப்புச் செய்யுளிலுள்ள “ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவனை” எனும் தொடர் கல்லாத்தி மர நிழலில் வீற்றிருந்த ஆதி தேவனாம் புத்தபிரானைக் குறிக்கும் என்றும்
ஆத்திசூடியின் “அறம் செய விரும்பு” எனும் முதற் செய்யுள் “அறன் செயல் விரும்பு” என்று மாற்றிப் புத்த சமயச்சார்பில் எழுதியுள்ளதையும் விளக்குகிறார்.

‘புத்த சரிதமும் ஆதி வேதமும்’ என்பது ஏழாவது கட்டுரை.

ஒழுக்கத்திற்குத் தலையாய இடம் தரவேண்டுமென்று அறிவுறுத்திய புத்தரின் வரலாற்றில் பல இழிகாமக் கதைகளும் நுழைக்கப்பட்டிருக்கின்றன. முறையற்ற வகையிலும் பெண்ணின்பம் பெறுவதில் தவறில்லையென்று சித்தார்த்தருக்கு அறிவுரை கூறும் பகுதியும் உள்ளது. இவை, புத்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு “வேட பிராமணர்களால்” எழுதப் பெற்றவையென்பது அயோத்திதாசரின் முடிவாகும்.

‘அரசியல் கட்டுரைகள்: சொல்லாடல் கலை’ என்பது எட்டாவது கட்டுரை.

‘தமிழன்’ என்னும் வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகளின் நிறைகுறைகளை அவர் காலத்திலேயே சுதேசமித்திரன், இந்தியா போன்ற தமிழ் இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், இசுடாண்டருடு(Standard), மாடன் இரிவ்யு (Modern Review) போன்ற ஆங்கில ஏடுகளில் வந்த கட்டுரைகள் நீதிக் கட்சியினரின் சசுடிசு (Justice) எனும் ஆங்கில இதழில் வந்த கட்டுரைகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு விளக்கம் தருகிறது. இவற்றுள் ஒடுக்கப்பட்டவர்கள், பிராமணர் அல்லாதவர்கள், ஆகியோருக்கான  அவரது குரல், அவர்கள் சமநீதி பெற மேற்கொண்ட முயற்சிகள், பிராமணர்கள் பிறருக்கு இழைத்த அநீதிகள் முதலான பலவற்றையும் அயோத்திதாசர் விளக்கியுள்ளதை நமக்குப் பேரா.ப.ம.நா. எடுத்துரைக்கிறார்.

‘(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69)