(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 47/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

48 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

 மூன்றாவது பகுதி மனு முதல் சகந்நாத பண்டிதர் வரை என்பதாகும்.

இப்பகுதியில் 18 கட்டுரைகள் இடம் பெறுகின்றன.

முதல் கட்டுரை மனுநூல்.

 பிராமணர்களின் பெருமையைக் கூறும் மனுசுமிருதி, மானவ தரும சாத்திரம் என்றும் அழைக்கப்பெறுகிறது. தொடக்கத்தில் மனுநூல் குறித்து, இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிகாகோ பல்கலைக்கழத்துப் பேராசிரியை வெண்டி தானிகர்(Wendy Doniger) கூறியுள்ளவற்றைப் பேரா.ப.ம.நா. எடுத்துரைக்கிறார்.

மனுநூல் பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; வருணாசிரம தருமத்தைக் காப்பதே அதன் தலையாய நோக்கு; அதில் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இரு்க்கிறது; அவற்றுள் எது மூலம், பின்னால் எழுதப்பெற்றது எது என்று கண்டுபிடிக்க இயலவில்லை; அது பிராமணரால் எழுதப்பட்டது; பிராமணருக்காக, பிராமணரின் நலன் கருதி எழுதப்பட்டது; அன்னார் தங்களைப் பண்டைய இந்தியாவின் மூளைகளாகவும் வாக்குகளாகவும் கருதி, அதனை உறுதிசெய்து கொள்ளப் பயன்படுத்திக் கொண்ட நூல்; பல அடிப்படைக் கொள்கைகள்பற்றி அதில் முரண்பட்ட கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன; மனுநீதியின் பகுதிகள் வெவ்வேறு காலங்களில் பல நூற்றாண்டுகளாகச் சேர்க்கப்பட்டதனால் இது நிகழ்ந்தது; சட்டங்களைப்பற்றிய பகுதிகள் இறுதியாகச் சேர்க்கப்பட்டவை; அதுகூறும் சட்டங்கள் என்றும் நடைமுறைக்கேற்றவையாக இருந்திருக்க முடியாது;

மனுநூல் கூறும் நீதி எக்காலத்துக்கும் எவ்விடத்திற்கும் எம்மனிதர்க்கும் பொருந்தாது என ஏ.கே.இராமனுசன் கூறுவதையும் குறிப்பிடுகிறார்.

மக்களின் ஒரு பாதியான பெண்ணினத்திடம் மனுவிற்கு எள்ளளவும் அன்போ, நம்பிக்கையோ, மரியாதையோ கிடையாது எனக் கூறி அதற்கான பல சான்றுகளையும் பேரா.ப.ம.நா.அளிக்கிறார். ஆண் அழகனாயினும் அருவருப்பான தோற்றத்தானாயினும் பரவாயில்லையென்று அவனோடு உடலுறவு கொண்டு மகிழ்வர் என்றும் பெண்கள் யாவரும் சலனபுத்தி கொண்டவர்களாகவும் இயற்கையிலேயே அன்பற்றவர்களாகவும் இருப்பதால் பரத்தையர்போல் ஆண்களைத் துரத்திச் சென்று தங்கள் கணவர்களுக்கு வஞ்சனை செய்வர் என்றும் மனுநூல் கூறுகிறது.

எந்தவொரு நீதியானாலும் குற்றத்திற்குத் தண்டனையானாலும் உரிமையானாலும் கடமையானாலும் நன்மை தீமையானாலும் நான்கு வருணங்களின் அடிப்படையிலேயே மனு வேறுபடுத்திப் பேசும். அரசனைவிடவும் பிராமணன் உயர்ந்தவன்; மரியாதைக்குரியவன் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிராமணர்கள் ஊன் உணவு கொள்ளலாமென்று பலவிடங்களிலும் கொள்ளக்கூடாதென்று ஓரிரண்டு இடங்களிலும் சொல்லப்படுவதால் பின்னைய பகுதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல்கள் என்று அறிஞர்கள் கருதுவார்கள்.

பெண்களைப்பற்றிப் பல இடங்களில் இழிவாகப்பேசும் மனுநீதி இரண்டொரு இடங்களில் அவர்களே குடும்பத்திற்கு அணிகலன் என்று உயர்வாகக் கூறுதலும் கொல்லாமையையும் ஊன் உண்ணாமையையும் ஆங்காங்கே சிறப்பித்தலும்  திசைதிருப்பிவிடப் பின்னால் வந்தவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவு ஆகும்.

பெண்களைப் புகழ்ந்துபேசுவதுபோல் ஆங்காங்கே மனுவில் காணப்பட்டாலும் பெண்களுக்குக் கல்வி யுரிமை யில்லை; சொத்துரிமை யில்லை; எவ்வளவு தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டாலும் சோர்வில்லாமல் வீட்டு வேலைகள் செய்ய வேண்டும்; என்பனபோல் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே உள்ளன

திருக்குறளின் சிறப்பையும் மனுவின் கீழ்மையையும் ஒப்பிட்டும் கூறுகிறார். திருவள்ளுவர் உழவைப்போற்றுகிறார்; மனுநூல் உழவை இழிதொழிலாகக் கூறுகிறது; வேள்வி செய்வோன் பல மனைவியரோடு சேர்ந்து செய்யவேண்டும் என்பது மனு; மனைவியை வாழ்க்கைத் துணை என்று சொல்வதுடன் ஆடவர் கற்பையும் வலியுறுத்துவது குறள்;மனிதவினத்தில் பாதியான பெண்ணோடு இணைந்து மக்களைப் பெற்று வாழும் இல்லறச் சிறப்பைப் போற்றும் திருக்குறள்போன்ற அறநூலையோ சமயநூலையோ சமற்கிருதத்தில் காண இயலவில்லை என்றும் பேரா.ப.ம.நா. கூறுகிறார்.

மனித நேயத்திற்கும் அறத்திற்கும் எதிரான மனுநீதியை எங்ஙனம் செவ்வியல் நூலாகக் கூற இயலும்?

இரண்டாவது கட்டுரைகாமசூத்திரம்’ பற்றியது..

படைப்புக் கடவுள் தன் உயிரினங்களை உமிழ்ந்தவுடன் நூறாயிரம் அதிகாரங்களில் காமசூத்திரம் நூலைச் சொன்னார் எனத் தோற்றம் குறித்தும் நூலளவு குறித்தும் பொய்யுரை கூறிக் காமசூத்திரம் தொடங்குகிறது.

மேலைக்கல்வியாளர்களில் பலர் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கூறுவர். அஃது இந்தியாவின் தென்பகுதி, கிழக்குப் பகுதி மக்களைப்பற்றி இழிவாகப் பேசுவதால் வடமேற்குப் பகுதியைச் சேர்ந்தவரால் ஆக்கப்பட்டிருக்கலாம்.பதின்மூன்றாம் நூற்றாண்டில் இதற்கு உரை எழுதிய யசோதரர் இன்றைய பீகார் மாநிலத்திலிருந்த பாடலி புரத்தில் தோன்றியிருக்க் கூடுமென்று எண்ணுவர்.

பிறருடைய மனைவியரை ஏமாற்றிக் கெடுக்கும் வழிகளை வாத்துயாணர் இந்நூலில் விரிவாகக் கூறுகிறார். பிறன்மனை விழையாமையை வலியுறுத்துவது தமிழறம்.

தோனிகர் காமசூத்திரம் குறித்துக் கூறுவனவற்றை மேற்கோள்களாக ஆங்காங்கே இக்கட்டுரையில் பேரா.ப.ம.நா.அளித்துள்ளார். கணவனில்லாத போது மனைவியின் நடத்தை, பிறருடைய மனைவியரை அணுகுதல்,  காமநோக்குடன் பெண்களை அணுகுதல் முதலான ஒழுக்கக்கேடான முறைகளுக்கு இந்நூல் வழிகாட்டுகிறது என்பதை அம்மேற்கோள்கள் உணர்த்துகின்றன. பெண்களை அறவுணர்வு அற்றவர்கள் என்றும் மணமான பெண்கள் ஆடவர்களால் எளிதில் கைப்பற்றக்கூடியவர்கள் என்றும் அந்தப்புரத்தில் வாழும் அரசனின் மனைவியர் எவ்வாறெல்லாம் கள்ளக்காதலர்களோடு இன்பம் துய்ப்பர் என்றும் காமசூத்திரம் கூறும் பகுதிகள்குறித்து் தோனிகர் கூறுகிறார்.

பிறர் மனைவியரோடு உறவுகொள்வது வடநூல் மரபு எனக் காமசூத்திரத்திற்கு உரை எழுதிய தேவதத்த சாத்திரி தெளிவுபடுத்துகிறார்.  வேதங்கள் கூறும் நிலையாக இதைக் கூறுகிறார்.

இருக்குவேதத்தில் உள்ள யமன்-யமி உரையாடல் இதற்குச் சான்றாகும். “உன்னைநாடி வரும் எப்பெண்ணையும் விரட்டி விடாதே” என்கிறது சந்தோக்கிய உபநிடதம். இதற்கு விளக்கம் அளிக்கும் சங்கரர், “ஒருவனுடைய படுக்கைக்கு வரும் காமவிழைவு கொண்ட பெண்ணைத் துரத்தக் கூடாது” என்று சொல்வார். அதே பகுதிக்கு உரை வரையும் இராமானுசர், “புணர்ச்சியை விரும்பி இன்னொருவனுடைய மனைவி வருவாளானால் அவளோடு இணைந்து இன்பம் அளிப்பது சிவ வழிபாட்டின் ஒரு கூறாகும். இத்தகைய பிறன்மனை உறவு தருமத்தால் தடை செய்யப்படவில்லை” என்றுரைப்பார்.  இவையல்லாமல் அகலிகை-இந்திரன், குந்தி-கதிரவன் ஆகியோர்பற்றிய புராணக் கதைகளும் துசுயந்தன்-சகுந்தலை, மாலதி-மாதவன் ஆகியோர்பற்றிய கதைகளும் உலகத் தோற்றத்திலிருந்து இத்தகைய புணர்ச்சிகளின் மரபு இடையறாது இருந்திருக்கிறது என்பதற்குச் சான்றுகளாகும்(தோனிகர் 179).

பிற ஆடவனிடமோ பிறன் மனைவியிடமோ இணைவதால் விளையும் களிப்பை விதந்துபேசும் சமற்கிருத மொழிப்பாடல்கள் மிகுதியாக உள்ளன. வித்தியா, பாவசுதேவிபோன்ற பெண் கவிஞர்கள் முறையற்ற உடலுறவால் பெறும் களிப்பைக் குறிக்கோள் இன்பமாகப் பெருமைப்படுத்திப் பேசினார்கள். இவ்வாறு சமற்கிருத நூலார் பாலுறவுக் கேடுகளையே பேரின்பமாகக் கூறுகின்றனர் எனச் சான்றுகளை அடுக்கித் தருகிறார். பிறன்மனைவிழையாதலைப் பேராண்மையாக உயர்த்திப் பேசும் திருக்குறளுக்கும் காமசூத்திரம் போன்ற சமற்கிருதக் காமநூல் மரபிற்கும்  உள்ள மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாட்டைப் பாடுபொருள்கொண்டே நிறுவ முடியும்.

வள்ளுவரின் காமத்துப்பால் காலத்தால் முற்பட்டது என்பதை அறியாது, அதில் காமசூத்திரத்தின் தாக்கத்தைக் கண்டவர்கள் அவையிரண்டுக்குமுள்ள வேறுபாடுகளைப் பகுத்துணர்ந்து அறிய இயலாதார்.காமசூத்திரம் ஆண் பெண் உடலுறவைப் படம் பிடித்துக்காட்டுவது; காமத்துப்பால் ஆண்-பெண் உள்ள உறவுகளை நுட்பமாகக் காட்டுவது.காமசூத்திரம் எல்லை மீறிய காம உணர்வு கொண்டோர் உடல் தினவைத் தீர்த்துக் கொள்ள வழி சொல்வது; காமத்துப்பால் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அவா, ஏக்கம், ஏமாற்றம், களிப்பு ஆகியவைபற்றிப் பேசுவது. ஒன்று உடலுறவுபற்றிய அரைகுறை அறிவியல் விளக்கம்; இன்னொன்று உளவியல் ஆய்வு. முன்னது வெறும் பட்டியல்; பின்னது இலக்கியம்; முன்னது உடல் வெறியைத் தூண்டும் நீலப்படம்(Blue film); பின்னது முருகியல் இன்பம் தரும் காவியம். முன்னதற்குக் காமம் ஒரு விலங்குணர்வு; பின்னதற்குக் காமம் மலரினும் மெல்லிய இறையின்பம்.  இவ்வாறு அழகான, சரியான ஒப்புமையைப் பேரா.ப.ம.நா. கூறுகிறார்.

ஆகப் பாலுறவுகேட்டினை ஒழுக்கமாகக் கூறும் காமசூத்திரம் தமிழ் அறநூல்களுக்கு அருகில் வைக்கும் தகுதி உடையதன்று.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49/69 )