மருதநாயகத்தின் தொல்காப்பியப் பார்வை
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 29/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
30/ 69
பேரா.ப.மருதநாயகம் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மட்டும் தனி நூலாக ஆய்வுக்குறிப்புகளுடன் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என்னும் நூலையும் படைத்துள்ளார். இவ்விரண்டு பற்றிய சுருக்கஅறிமுகமே இப்பகுதி.
தொல்காப்பியப் பொருளதிகாரம் (2019)
தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த நடுநிலையான பொருளுரையைப் பேரா.ப.மருதநாயகம் அளித்துள்ளார். பாணினியின் வேர்ச்சொல்லாய்வு மிகப்பெரிய மோசடி, ஏமாற்றுவேலை. ‘ஆதிபாஃசா’ நூலில் சட்டம்பி அடிகளார், தமிழிலிருந்து பிராகிருதமும் பிராகிருதத்திலிருந்து சமற்கிருதமும் தோன்றியது என்னும் வரலாற்று உண்மையை மெய்ப்பிக்கிறார். பேரா.சி.இலக்குவனார் அவர்களும் அவர் வழியில் அறிஞர்கள் பலரும் தொல்காப்பியத்தில் இடம் பெற்ற இடைச்செருகல்களை நீக்கினால் தொல்காப்பியம் முரண்பாடு இன்றிச் செம்மையாக இருக்கும் என நிறுவியுள்ளனர். இவை போன்ற அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக் கூறித் தொல்காப்பியம் சமற்கிருதத் தழுவலன்று எனத் தெரிவிக்கிறார்.
தொல்காப்பியப் பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும் சுட்டும் கவிதை நெறி இன்று மேலைத் திறனாய்வாளரகளில் உயர்ந்தோர் ஏற்றுப் பாராட்டும் கவிதை நெறியோடு பெரும்பாலும் ஒத்திருக்கக் காணலாம். தமிழ்க்கவிதையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அக்காலத்துக் கிரேக்கர்களும் உரோமானியர்களும் கொண்டிருந்த கவிதைபற்றிய கருத்துகள் சில நகைப்பிற்குரியவை. சமற்கிருத இலக்கியம்பற்றி மட்டும் அறிந்த மேனாட்டறிஞர்கள் கவிதையியல் சமற்கிருதத்திலிருந்துதான் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரவியிருக்க வேண்டும் என்ற தவறான கருதுதலில் இருந்தனர். ஆனால் கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் சங்க இலக்கியங்கள் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டபின், தொல்காப்பியத்தின் தொன்மை வெளியான பிறகு மூலம் எது? கடன் கொண்டது யார்? கடன் கொடுத்தது யார்? என்பதில் உண்மை தெளிவாகி வருகிறது.
கவிதை தமிழர்களுக்கு ஒரு வெறும் பொழுதுபோக்குப் பொருளன்று ஒரு வாழ்க்கை முறையே என்று சொல்லுமளவிற்கு அவர்களது வாழ்க்கையோடு இரண்டறக்கலந்துவிட்டது.மேனாட்டுத் திறனாய்வாளர்கள் பலரின் கருத்துகள் அடிப்படையிலும் தம் ஆய்வின் அடிப்படையிலும தமிழில் கவிதையியலின் சிறப்புகளையும் அதற்குப் பிந்தைய வரலாறு உடைய சமற்கிருதக் கவிதையியலின் குறைபாடுகள் குறித்தும் விளக்குகிறார்.
நூற்பாக்களுக்கு விளக்கம் தரும்பொழுதே தேவைப்படும் இடங்களில் எல்லாம் மேலைத்திறனாய்வாளர்கள், சமற்கிருதஅறிஞர்கள், தமிழறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் தமிழ்க்கவிதையியல் சிறப்பை உணர்த்துகிறார்.சங்கச் சான்றோர் பாடல்கள் உயர்ந்த நோக்குடைய அரிய கலைப்படைப்புகள் என்பதையும் சமற்கிருத இலக்கியங்களில் பெரும்பாலானவை கீழ்த்தர உணர்வுகளைக் கிளப்பும் தன்மையவை(obscene writings) என்பதையும் இரண்டையும் கற்றோர் அறிவர்.
காமக்கூட்டம் காணும்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே
என வரும் நூற்பாவை இடைச்செருகல் என ஐயந்திரிபறக் கூறுகிறார்.
“உயிரினும் சிறந்தன்று நாணே” எனத் தொடங்கும் நூற்பாவை விளக்கும் பொழுது, தலைவி தன்னந்தனியளாகத் தலைவனைத் தேடிச் செல்வதாகப் பாடல் எழுதுவது தமிழ்மரபு அன்று. சமற்கிருதத்தில் திருமணமானவள் இரவில் கள்ளக்காதலனைத் தேடி அலைவதாகக் கூறும் பாடல்கள் பல உண்டு.
கற்பியல் குறித்து விளக்கும் பொழுது பி.சா.சுப்பிரமணிய சாத்திரிகள் அறியாமையாலோ குறும்புத்தனத்தாலோ ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நெறி ஆரியரிடமிருந்து தமிழர் பெற்றது என எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு அதனை வன்மையாக மறுக்கிறார்.
மெய்ப்பாடுகுறித்த கருத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தெளிவான விளக்கம் பெற்றிருந்தன என்பதை நூற்பாவே தெரிவிக்கிறது. ஆனால், இவை பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்திலிருந்து பெறப்பட்டவை என்று தமிழின் உட்பகைவரகளும் புறப்பகைவர்களும் பொய்கூறிக்காலந் தள்ளுகின்றனர். எனக்குறிப்பிட்டு அறிஞர் பி.வி.கனே போன்றோர் கருத்துகளையும் துணைகொண்டு தமிழ்கூறும் மெய்ப்பாட்டின் தொன்மையையும் சிறப்பையும் எடுத்துரைக்கிறார்.
இடைச்செருகல்களையும் சேர்த்து வெளியிட்டுப் பின்னர் அவற்றை இடைச்செருகல்கள் என்பதை விட அவை இல்லாமல் தொல்காப்பியத்தை வெளியிடுவதே சிறப்பு. எனவே, அவ்வாறு இந்நூலில் இடைச்செருகல்களை நீக்கிய பதிப்பாக இதனை வெளியிட்டுள்ளார்.
‘தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’(2019)
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளமையை முதலில் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் வெளியிட்டார். அதன்பின்னர் பிற தமிழ் அறிஞர்களும் இது குறித்து எழுதியுள்ளனர். எனினும் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் இடம் பெற்று அவற்றின் குறிப்பாக மட்டுமே இடைச்செருகல் விவரம் தெரிவிக்கப்பட்டது. தொல்காப்பியத்தில் தெரிந்தே இடைச்செருகல்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா என அறிஞர் ப.மருதநாயகம் வருந்தினார். எனவே, இடைச்செருகல்களை நீக்கிய முழு நூலாகத் ’தொல்காப்பியம்: முதல் முழு மொழிநூல்’ என இடைச்செருகல்கள் நீக்கப்பெற்ற செம்பதிப்பை வெளியிட்டார்.
இந்நூலின் முதல் இயலாக ‘ஒப்பில் தொல்காப்பியம்’ என்னும் கட்டுரையை அளித்துள்ளார். தொல்காப்பியத்தின் சிறப்பு, சமற்கிருத நூல்களில் இதன் தாக்கம், இல்லாத கற்பைனச் சொற்களைச் சேர்த்துப் பாணிணி எழுதியுள்ளதை மேனாட்டு அறிஞர்களின் ஆய்வுரை அடிப்படையில் ஆராய்ச்சி உரை எனப் பலவகைகளில் சிறப்பாக இக்கட்டுரை உள்ளது.
அடுத்துத் தொல்காப்பிய நூலை(நூற்பாக்களை) இடைச்செருகல்கள் நீங்கிய செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். நிறைவில் ‘தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள்’ எனும் ஆய்வுக் கட்டுரையை அளித்துள்ளார்.
சமற்கிருதச் சார்புடையார் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் இழைத்த கேடுகளைப்பற்றித் தேவநேயப் பாவாணர் விரித்துரைப்பதில் ஒரு பத்தியைத் தொடக்கத்தில் எடுத்துரைக்கிறார். அத்தகைய அழிகேட்டுப் பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பிய இடைச்செருகல். 1871இலேயே சாருலசு கோவர் (Charles E.Gover) என்பார், ‘தென்னிந்தியாவின் நாட்டு்ப்புறப்பாடல்கள்’ என்னும் நூலின் முன்னுரையில் தமிழ் இலக்கியங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டமையை உள்ளக்குமுறலோடு கூறியுள்ளதையும் நமக்குத் தருகிறார். பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.)என ஈடுபட்டதைக் கோவர் கூறுகிறார். இவர்போன்ற அறிஞர்கள் கூற்றுகளின் மூலம் தொல்காப்பியத்திலும் இடைச்செருகல்கள் ஏற்பட்டமையைப் புரிய வைக்கிறார்.
தொல்காப்பிய அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப்பருவத்திலேயே தொல்காப்பிய இடைச்செருகல்கள் குறித்து எழுதியவர். அவர் தம் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு-திறனாய்வு நூலில் தொல்காப்பியத்தில் சதிகாரர்களால் நேர்ந்த இடைச்செருகல்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அவரது கருத்துகள் இரண்டையும் வெள்ளைவாரணனாரின் குறிப்பையும் நமக்குச் சுட்டுகிறார். இத்துடன் உரையாசிரியர்களின் உரைவிளக்கங்கள் அடிப்படையில் தம் ஆய்வுரைகளையும் இணைத்து இக்கட்டுரையைத் தெளிவாக நமக்குப் பேரா.ப.ம.நா.அளித்துள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69 )
Leave a Reply