(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

31/ 69

 

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014)
  1. விவிலிய இலக்கியத்தில் அக இலக்கிய மரபு, 2. ஒப்புரவறிதல்: வள்ளுவரும் செனகாவும், 3. பாசனின் நாடகங்களும் பழந்தமிழ்ப் பனுவல்களும், 4. சான்றோர் கவிதையும் காளிதாசனும், 5. காளிதாசனின் படைப்புகளில் சிலம்பின் ஒலி, 6. பொருளியல்: திருக்குறளும் கெளடலியமும், 7. அறவியல்: திருக்குறளும் சுக்கிர நீதியும், 8. பிராகிருதத்தில் தமிழ் அகமரபு: அகநானூறும் காதாசபுதாதியும், 9. ஆதிசங்கரரும் தமிழும் என்னும் ஒன்பது தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. எபிரேயம், இலத்தீன், சமற்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழி இலக்கியங்களில் சங்க இலக்கியங்களும் திருக்குறளும் விளைவித்துள்ள ஆழ்ந்த தாக்கத்தை இக்கட்டுரைகள் ஏராளமான சான்றுகளுடன் எடுத்துக்காட்டுகின்றன.

முதல் இயலில் கைம் இராபின்(Chaim Rabin) படைப்புகளிலிருந்தும் சியார்சு ஆர்டு ஆக்கங்களிலிருந்தும் தமிழ்ச் சங்க அக மரபு விவிலியத்தில் உள்ளதை அழகுபட விளக்குகிறார். அகில், தோகை முதலான தமிழ்ச்சொற்கள் விவிலியத்தில் இடம் பெற்றுள்ளமை குறித்து மேனாட்டார் தெரிிவத்துள்ளமையையும் எடுத்துக்காட்டாகத் தருகிறார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில்(Old Testament of the Bible) இடம் பெற்றுள்ளது அரசன் சாலமனின் ‘பாடல்களுள் பாடல்’(King Solomon’s Song of Songs’) என்னும் கவிதையாகும். இக்கவிதை தமிழ் அகக்கவிதை மரபிற்குக் கடன்பட்டுள்ளது என்பதை எபிரேயப் பேராசிரியர் கைம் இராபின்(Chaim Robin) தெளிவாக விளக்குகிறார். இதனை அவர், தமது ‘பாடல்களுள் பாடலும் தமிழ்ச்செய்யுளும்’ (‘The Song of Songs and Tamil Poetry’) என்னும் கட்டுரையில் அளித்துள்ளதை நமக்குத் தருகிறார். இக்கட்டுரை ‘சமயஆய்வுகள்’(‘Studies in Religion (1973-74)’ என்னும் இதழில் வெளிவந்துள்ளதையும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை மூலம், சங்க அகஇலக்கிய மரபின் தாக்கம் இப்பாடலில் இருப்பதை மொழியியல்,இலக்கிய வரலாற்றுச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவற்றை மேம்போக்காக விளக்காமல் ஆழமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் விளக்குகிறார். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்பாடலில் எவ்வாறு சங்கச்சான்றோர் பாடல்களின் தாக்கம் இருக்க முடியும் என்ற வினாவை எழுப்பி அப்பேராசிரியரே அதற்கு விடையும் தருகிறார். பழந்தமிழகத்தில் முச்சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்; இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்க வரலாறு உண்மையானது; தலைச்சங்கக்காலத்திலேயே தோற்றம் பெற்ற அக இலக்கிய மரபு வணிகர்கள் மூலம் எபிரேய மொழிக்குச் சென்றிருக்க வேண்டும்; இம்மரபு உலக மொழிகளில் வேறு எதிலும் இல்லை என்பதால் தலைச்சங்கத் தமிழ் இலக்கியங்களே எபிரேயப் பாடலுக்கு மூலமாதல் வேண்டும். தமிழ்ச்சங்கம் இருந்ததில்லை என்பாருக்கும் ஒரே ஒரு சங்கம்தான் இருந்திருக்க வேண்டும் என்பாருக்கும் இவரின் இவ்விளக்கமே விடையாகவும் அமைந்து விடுகிறது.

கைம் இராபினின் கருததுகளைத் தொகுத்துத் தருவதுடன் பேரா.ப.மருதநாயகம் அவற்றுக்கு அரண் சேர்க்கும் வகையில் தாமும் சான்றாதாரங்களை இதில் அளித்துள்ளார்.

கி.மு.நான்காம் நூற்றாண்டிலோ ஐந்தாம் நூற்றாண்டிலோ பிறந்திருக்கக்கூடிய உரோமானிய அறிஞர் செனகா(Seneca) திருக்குறளைக் கையாண்டுள்ளதை – திருக்குறள் சிறப்பினை எடுத்துரைத்ததை – அடுத்து விளக்குகிறார். எனவே, திருக்குறளை அறிந்திருந்த அறிஞர் செனகாவின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே திருவள்ளுவரின் திருக்குறள் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

இரண்டாம் கட்டுரை ஒப்புரவறிதல் பற்றியது என்றாலும் இதில் வேறு பல அதிகாரங்களையும் குறள்களையும் செனகாவின் மேற்கோள் கருத்துகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

“வடநூலார் பொருளற்ற விவாதங்களுக்கும் நிறுவமுடியாத ஊகங்களுக்கும் தேவையற்ற சொற்சிலம்பங்களுக்கும் இடமளித்து மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட பொழுது வள்ளுவர் மண்ணுலக வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாக ஆராய்ந்து செம்மையான வாழ்விற்கு வழிகூறுதலைத் தலையாய நோக்கமாகக் கொண்டார்.” என்பதைப் பேரா.மருநதநாயகம் இக்கட்டுரையில் விளக்குகிறார்.

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு அறிஞர் பிரான்சுவா வாலெண்டின் (Francios Valentijin) ‘சிலோனின் வருணனை’(Description of Ceylon) என்னும் நூலில் 65 தமிழ் நூல்களின் பட்டியலை அளித்துள்ளதாகவும் அதில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளதாகவும் பேரா.ப.மருதநாயகம் குறிப்பிடுகிறார். அதில் அறிஞர் செனகா திருக்குறள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் எனவும் பிரெஞ்சு அறிஞர் தெரிவித்துள்ளார்.

செனகா, அவுரேலியசு முதலானோருக்கு வள்ளுவரே வழிகாட்டியாக இருந்துள்ளார் என்றும் அதுவே உறுதிவாதியம்(stoicism) என்னும் தத்துவக் கோட்பாட்டில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டுமென்றும் பிரெஞ்சு அறிஞர் அளித்துள்ள குறிப்பு வலுவான ஆதாரமாக விளங்குவதையும் இஃது அறிவிக்கிறது.

எனவே, பிறநாட்டு நல்லறிஞர்கள் திருக்குறள் பெருமையை நன்கு அறிந்துள்ளார்கள் எனலாம். இவற்றை யெல்லாம் ஆய்ந்து அறிந்து தெரிவித்துள்ள பேரா.ப.மருதநாயகத்திற்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.

காளிதாசனுக்கு நூறு ஆண்டுகள் முன் வாழ்ந்த கி.பி.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாசகவி என்னும் சமற்கிருத அறிஞர் 13 நாடகங்களை எழுதியுள்ளார். இந்நாடகங்களில் முருகனின் வீரச்செயல்கள் போற்றப்படுகின்றன. …   ….    … சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் முருகன் வீரம், அழகு, இளமை ஆகியவற்றின் குறியீடாகவே போற்றப்படுவதையும் புறநானூற்றில் மன்னர்கள் முருகனோடு ஒப்பிட்டுப் பாடப்படுவதையும் காளிதாசன் இரகுவம்சத்தில் பேரரசர்களை யெல்லாம் கந்தனாக வருணிப்பதையும் நினைவு கூர்ந்தால் பாசகவியும் சங்க இலக்கியச் செல்வாக்கின் காரணமாகவே போர்க்கடவுளை இவ்வாறெல்லாம் தம் நாடகங்களில் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார் என்பதை உணரலாம். இவ்வாறு கூறும் பேரா.ப.மருதநாயகம் சங்க இலக்கியங்களில் முருகன், களிறு, கொடைச்சிறப்பு,போர்க்காட்சி, தலைவன் தலைவி சந்திப்பு, தோழி கூற்று, அரசனின் பொறுப்பு, உவமைகள் முதலிய பலவும் பாசனின் படைப்புகளில் உள்வாங்கப்பட்டுள்ளவற்றைச் சிறப்பாக விளக்குகிறார். காளிதாசனின் படைப்புகளில் சங்க இலக்கியம் தொட்ட இடங்களில் எல்லாம் தட்டுப்படுவதைக் கருநாடகச் சமற்கிரு அறிஞர் கிருட்டிணமூர்த்தி முதலான அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுபோல் அவருக்கு முற்பட்ட பாசகவியின் நாடகங்களில் சங்கஇலக்கியச் செல்வாக்கு இருப்பதை மேனாட்டு அறிஞர்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாம் கட்டுரையில் உள்ள சான்றுகள் அமைகின்றன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பாசகவியின் நாடகங்களில் சங்க இலக்கியத் தாக்கம் இருப்பதை உருசிய அறிஞர் துபையான்சுகி(Dubiansky) ஒரு கருத்தரங்கில் குறிப்பிட்டார் அதன் அடிப்படையில் ஆராய்ந்து இக்கட்டுரையைப் படைத்துள்ளதாகப் பேரா.ப.ம.நா. குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69 )