(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

12/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

13/ 69

 

புதுப் பார்வைகளில் புறநானூறு(2004)

 

நம் நாட்டில் சிலர் புறநானூற்றுக்குப் புதுப்புது விளக்கங்கள் தருவதாகக் கூறிக்கொண்டு அதன் சிறப்பை இழித்து வருகின்றனர். அதே நேரம் மேனாட்டார் புறநானூற்றின் பெருமையைக் கூறி வருகின்றனர். நாமும் உலக இலக்கிய வரிசையில் புறநானூறு முதலான சங்க இலக்கியங்களைக் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் இன்றைய மேலை அணுகுமுறைகள் கொண்டு புதிய உள்ளொளிகளை இந்நூல் மூலம் பேரா.ப.மருதநாயகம் சுட்டுகிறார்.

இந்நூலில் 16 கட்டுரைகள் உள்ளன. அவை வருமாறு:

(1) புறநானூறு ஈன்ற இலக்கிய வகைகள் (2) கவிதையை நம்பு, கவிஞனை நம்பாதே (புதுமைத் திறனாய்வு) (3) அகமா, புறமா, அகப்புறமா? (சிகாகோ குழுவினர்)(4) தொன்மம் பெறும் தோற்றங்கள் (தொன்மத் திறனாய்வு) (5) கவிதையும் அறங்கூறலும் (6) செல்வாக்கும் தாக்கமும் (ஒப்பிலக்கிய அணுகுமுறை (7) கவிதையெனும் ஒரு தனிமொழி (நடையியல் அணுகுமுறை) (8) பெண்மை, பெண்ணியம், பெண்ணின் கவிதை (பெண்ணிய அணுகுமுறை) (9) கவிஞனைக் கவிழ்க்கும் கவிதை (கட்டவிழ்ப்புத் திறனாய்வு) (10) தாக்கக் கவலையா? தன்னம்பிக்கையா? (இடைப்பனுவலியம்) (11) கவிதை என்னை என்ன செய்தது? (வாசகன் – எதிர்வினைத் திறனாய்வு) (12) விந்தையும் அதிர்வொலிப் பெருக்கமும் (புது வரலாற்றியத் திறனாய்வு) (13) அன்றும் இன்றும்: பாரிபற்றிய இரங்கற்பாக்கள் (14) வீரயுக இலக்கியமா? (15)வரலாற்றுப் புதினமா? (16) மூன்று மொழிபெயர்ப்புகள்

ஆற்றுப்படை, தூது, பரணி, பள்ளியெழுச்சி, காஞ்சி, அந்தாதி முதலான பல இலக்கிய வகைகள்,பத்தி இலக்கியம், நீதி இலக்கியம் ஆகியவை புறநானூற்றுக்குக் கடன்பட்டிருப்பதாக முதல் கட்டுரையில் பாடல் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நீதியை வெளிப்படையாக நீதியாகச் சொல்லுவனவும் படிமங்கள் மூலம் நீதி உணர்த்துபவையும் நாடகக் காட்சிகள் மூலம் நீதி தெரிவிப்பனவும் சில பாத்திரங்களையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் உள்ளவாறு படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் அறிவு கொளுத்துவனவும் எனப் பலவகைப் பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். இவ்வகைகளில் அடங்கும் பாடல்கள் சிலவற்றைப் பேரா.ப.ம.நா.நமக்கு எடுத்துரைக்கிறார். 

1940-50களி்ல் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதுமைத் திறனாளய்வு செல்வாக்கு பெற்றிருந்தது. கவிதையை அதன் சொற்களின் மூலம் அணுக வேண்டுமென்று இது வற்புறுத்தியது. ஐ.ஏ.இரிச்சட்சு, எமிசன், இயான் குரோ இரான்சம், ஆலன் இடேட்டு, பிளாக்குமர், கிளியாந்து புரூச்சு, இராபட்டு பென் வாரன் போன்றோர் புதுமைத் திறனாய்வை வெற்றியோடு கையாண்டவர்கள்.  இவ்வாறு கூறும் பேரா.ப.ம.நா., புதுமைத் திறனாய்வுக் கோட்பாட்டுக் கூறுகளுள் சிலவற்றைத் தொல்காப்பியம் பேசும் கவிதையியலிலும் பேராசிரியர், நச்சினாரக்கினியர் போன்ற உரையாசிரியர்களின் அணுகுமுறைகளிலும் காணலாம் என்கிறார்.    உவமையியலின் இறுதியில் பேராசிரியர் கூறும் கருத்து, செய்யுளின் தன்மை பற்றி இன்று புதுமைத் திறனாய்வாளர் கூறுவதைச்சிறப்பாகப் புலப்படுத்தும் என்றும் தெரிவிக்கிறார்.

“வையம் காவலர் வழிமொழிந் தொழுக” என்னும் புறப்பாடலுக்குஉரை கூறும் பேராசிரியர் அப்பாடலில் உவமைக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள் பொருளுக்கு எதிர்மறையாகப் பொருந்துவதையும் பொருளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள் உவமைக்கு எதிராகப் பொருந்துவதையும் சுட்டிக்காட்டும்போது தலைசிறந்த புதுமைத் திறநாய்னாய்வாளராகச் செயல்படுவதை விளக்குகிறார்.

பழம் உரையாசிரியர்கள் தமிழ்க்கவிதைகளை உயர்வு நவிற்சியாக மனம்போன போக்கில் புகழ்ந்து கூறியுள்ளார் என்னும் கருத்து முற்றும் தவறானதாகும். அவர்கள் தொல்காப்பியம் செய்யுள் பற்றிக் கூறும் விளக்கங்களை உள்வாங்கிக் கொண்டு ஒவ்வொரு கவிதையிலும் உள்ள சொலலாட்சியை நுட்பமாக ஆராய்ந்து அதன் பொருத்தத்தை எடுத்துரைகத்துக் கவிதையின் சொல்லும் பொருளும் ஒன்றிச் செயல்படுவதை யாவரும் அறியச் சொல்லுவதையே தமது கடமையாகக் கொண்டனர். அவர்களது செயற்பாடு மேலைத் திறனாய்வாளர்களின்அணுகுமுறையைப் பெரிதும் ஒத்திருக்கக் காணலாம்” என்றும் விளக்குகிறார்.

இவ்வாறு இரண்டாம் கட்டுரையில் ‘கவிதையை நம்பு, கவிஞனை நம்பாதே’ என்னும் தலைப்பில் விளக்கியவர், புறநானூற்றுக் கவிதைகள் புதுமைத்திறனாய்வு முறையில் பொலிவுபெறுபவை என்பதை உணர்த்துகிறார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த புதுமைத்திறனாய்வில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் சிறந்திருந்தனர் எனப் பல பாடல்கள் மூலமும் உரையாசிரியர்கள் குறிப்புகள் மூலமும் நம்மை அறியச் செய்துள்ளார் திறனாய்வறிஞர் ப.ம.நா..

சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்.எசு.கிரேன், வெயின் சி.பூத்து,எலிடர் ஆல்சன், பெருனாருடு வெயின்பெருக்கு முதலான அறிஞர்கள் புதிய திறனாய்வு அணுகுமுறையைப் பின்பற்றினர். இதனடிப்படையிலானதே மூன்றாம் கட்டுரை.

திறனாய்வாளன் இலக்கியம் சார்ந்துள்ள வகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்; அதன் மரபு வழிப்பட்ட பிரிவினை மட்டும் நோக்காது, அஃது எத்தகைய இன்பியல் அல்லது துன்பியல் என நுண்ணிதின் இனம் காண வேண்டும்; அரிசுட்டாட்டிலின் அணுகுமுறையைப் பின்பற்றி வரையறுக்க வேண்டும்; இவையே சிகாகோ திறனாய்வாளர் வலியுறுத்துவது. இத்தகைய மேனாட்டாரின் எண்ணங்களை ஆராயும் பொழுது தொல்காப்பியரும் சங்கச்சான்றோரும் உரையாசிரியர்களும் திணை, துறை பாகுபாடுகளுக்கு ஏன் சிறப்பிடம் அளித்தனர் என்பதைப் புரிந்துகொள்ள இயலும் என விளக்குகிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 14/ 69)