மாவீரர்களைப் போற்றுவோம்!

மாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது..

மாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 மணிக்கு  ஏற்றினர். பின்னர் மாவீரர் சங்கர் புகழுடல் எய்திய நேரமான மாலை 6.05 மணிக்கு ஏற்றி வருகின்றனர். பொதுவாகப் பொதுவெளியில் மிகுதியும் உரையாற்றாத தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் மாவீர் நாளின் பொழுது உரையாற்றுவார். மாவீரர் உரையை உலகெங்கும் உள்ளவர்கள் கேட்கும் வகையில் ஒலி பரப்பவும் செய்வர்.

கார்த்திகைத் திங்களில் பூத்துக் குலுங்குவதால் கார்த்திகைப் பூ என அழைக்கப்பெறும் காந்தள் பூவே தமிழீழத் தேசியப் பூ. காந்தள் பூக்களால் மாவீரர்கள் துயிலுமிடங்களை அணிசெய்வர். அவரவர் இல்லங்களிலும் மாவீரர்களின் படங்களை வணங்கி அஞ்சலி செய்வர். உலகின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் செயற்கையாக அவர்களுக்கான துயிலிடங்களை அமைத்து அங்கே வணங்குவர்.

மாவீரர் நாளில் மக்கள் எடுக்கும் உறுதிமொழி வருமாறு

மொழியாகி,

எங்கள் மூச்சாகி – நாளை

முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை

உருவாக்கும் தலைவன்

வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடு இங்கு

துயில்கின்ற வேங்கை

வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்

தமிழீழப் போரில்

இனிமேலும் ஓயோம் உறுதி!”

புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்ட மாவீரர் நாள் பாடல் மாவீரர்நாள் அன்றும் போராளிகள் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும். வருணராமேசுவரன் பாடிய இப்பாடலை மாவீரர் நாளில் ஈகச்சுடர் ஏற்றும் பொழுது பாடுவர். போராளிகளின் இறுதிச்சடங்கின் பொழுதும் பாடுவர். அப்பாடல் வருமாறு

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

 

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

 

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா? குழியினுள் வாழ்பவரே!

இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிறதா? குழியினுள் வாழ்பவரே!

 

தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே!

 

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!

 

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!

       எல்லா நாட்டினருமே தத்தம் நாட்டு விடுதலை நாளின் பொழுது தம் நாடடிற்காக மடிந்தவர்களைப் போற்றி வருகின்றனர்.  முதல் உலகப்போர் முடிவடைந்த நவம்பர் 11 ஆம் நாளை, அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா, பிரித்தானியா முதலான பல நாடுகளும் படைவீரர் நினைவு நாளாகக் கொண்டாடுகின்றன. இசுரேல் விடுதலை நாளைத் தேசிய வீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. ஆத்திரேலியப் பழங்குடி மக்கள் நாட்டு நலன்களுக்காக மடிந்தவர்களை நவம்பர் 27அன்றுதான் நினைவுகூர்கின்றனர். மூத்த இனமான தமிழினம் தொன்றுதொட்டே நடுகல் நட்டு வீரர்களைப் போற்றி வருகின்றது.ஆனால், இலங்கையில் சிங்கள அரசு இந்நாளுக்கு இடையூறு விளைவிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் புதிய தலைவர், கோத்தபய இராசபச்ச,  மாவீரர் நாளை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏறபடாத வகையில் நினைவுகூரத் தெரிவித்துள்ளார். ஆனால் செயல் ஈழத்தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களில் மிகுதியான படைத்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். படைத்துறை வண்டிகள் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. மாவீரர் நினைவுத் தூண்களும் நடுகற்களும் படைத்துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. மாவீரர் துயிலகங்களுக்கு வரும் மக்களை ஒளிப்படம் எடுத்து நாளை அவர்களுக்கு இன்னல் வரும் என மறைமுகமாக அச்சுறுத்துகின்றனர். இவ்வாறு பன்னாட்டு ஒலிபரப்பு அவையம் (மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினர் அடாவடி!, IBC Tamil ) தெரிவிக்கிறது. மாவீரர்களின் புதைகுழிகளையே வீரத்தலைமுறைகளை விளைவிக்கும் விதை குழிகளாக எண்ணும் மக்களுக்கு இந்த அச்சுறுத்தல் ஒன்றும் செய்யாது. என்றாலும் உலகெங்கும் உள்ள பழக்கமான நீத்தார் வணக்கத்தை எதிர்த்துத் தமிழர்களுக்குப் பகை முகம் காட்ட வேண்டா என இலங்கை அரசை  வேண்டுகிறோம்.

“….. வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . .”

மாவீரர் நாள் உரை 2004

தமிழரின் தேசியத் தனித்துவத்தை  ஏற்று, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை  விடுதலையடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக, ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டுப், புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப்போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும் அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர்.”

மாவீரர் நாள் உரை 2005

தமிழீழ அரசைச் சிறப்பாக நடத்தி வந்தவர் மேதகு பிரபாகரன். பயங்கரவாத அமைப்பு அல்ல அவர் நடத்தியது. முப்படை கொண்டு அரசாட்சி செய்து வந்தார். ஆனால், துணை நிற்க வேண்டிய பிற நாட்டு விடுதலைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாடுகளும் அண்டை நாடுகளும் தமிழர்க்கு எதிரான செயற்பாடுகளில் தொடர்ந்து இருப்பதால், பேரழிவை உருவாக்கி நூறாயிரக்கணக்கான மக்களைச் சிங்கள அரசுடன் இணைந்து கொன்று விட்டன.

தமிழின் தொன்மை, இலங்கை முழுவதும் தமிழர்க்கு உரிமையாக இருந்த வரலாறு, ‘தமிழீழம் தமிழர்களின் தாயகம்’ என்ற உண்மை முதலானவற்றைப்  பெரும்பான்மைத் தமிழர்கள் அறியவில்லை. இந்த உண்மை உலக மக்களால் உணரப்படும் பொழுதுதான் தமிழ் ஈழம் உதயமாகும். எனவே, உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ்மொழியிலும் தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள மொழிகளிலும் வரலாற்று உண்மையை விளக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதுவே மாவீரர்களுக்குச்செலுத்தும் உண்மையான வணக்கம் என்பதைப் புரிந்து கொண்டு தொண்டாற்ற வேண்டும். அறிவாயுதத்தை ஏந்திச் செயல்பட்டுப் பன்னாட்டு அவைகளில் ஈழக்கொடி பறக்கும்  நாளை விரைவில் கொண்டுவர வேண்டுகிறோம்!

போர்க்களங்களிலும் தாய் நிலத்திலும் உயிர் நீத்த வீரர்களுக்கும் மக்களுக்கும் ‘அகரமுதல’ இதழின் வீர வணக்கம்!

உங்கள் உணர்வுகள் உலகத்தமிழர்களுக்கு வழி காட்டட்டும்!

அந்த ஒளியில் விடுதலை ஒளி வீசட்டும்!

வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை,அகரமுதல