மேலை நோக்கில் தமிழ்க்கவிதையைக் காணும் பேரா.ப.மருதநாயகம் (எஏ)
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்
8/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம் 9/ 69
இருபத்திரண்டாம் கட்டுரையில் மூல ஆய்வு குறித்து விளக்குகிறார்.
மூல ஆய்வு குறித்துப் பின்வருமாறு பேரா.ப.ம.நா. விளக்குகிறார்.
ஓர் இலக்கியத்தின் மூலங்களை அடையாளங்கண்டு அவை இலக்கியத்தில் எவ்வாறு மாற்றம் பெற்றிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்தும் ஆய்வு மூல ஆய்வு(Source Study) என்று கருதப்படுகின்றது. சில குமுகாய சூழல்கள் ஒரு நூல் தோற்றம் பெறக் காரணமாக இருந்தைதச் சுட்டிக்காட்ட முனையும் திறனாய் வுதோற்றத் திறனாய்வு(Genetic Criticism) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், ஒரு கவிதையோ, புதினமோ, நாடகமோ, பிறப்பதற்குப் பிற இலக்கியங்களும் இலக்கியமல்லாத நூல்களும் காரணமாகலாம். இத்தகைய மூலங்களைக் கண்டறிவதால் ஓர் ஆசிரியனின் படைப்பாற்றலும் கவித்துவத்திறனும் எவ்வாறெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து முருகியல் இன்பம் துய்க்க வழியுண்டு. அக்கவிதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்கள் கிடைக்குமானால், அவற்றின் மூலம் கவிதை முதல் படியிலிருந்து இறுதிப் படிவரை எவ்வாறு உருமாற்றம் பெற்றது என்பதை ஆராயும் வழக்கமும் மேலைநாட்டுத் திறனாய்வாளர்களிடம் உண்டு.
மூல ஆய்வும் தோற்றத்திறனாய்வும் முற்றிலும் பயனற்றவை எனச்சிலர் கூறுவதை மறுத்து விளக்கம் தருகிறார். சேக்சுபியர், நாடகங்கள், சாசருடைய கேண்டர்பரிக்கு கதைகள், கவிதைகள் ஆகியவற்றின் மூலங்களை ஆராய்வதன் மூலம் இலக்கிய இன்பத்தையும் உண்மையையும் அறிய முடிகிறது என்கிறார்.
பாரதியும் ஆங்கில இலக்கிய மரபும் என்பது குறித்து இருபத்து மூன்றாவது கட்டுரையில் விளக்குகிறார்.
மாரிடின் செய்மர் சுமித்து என்பார், ‘இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கிய வழிகாட்டி’ என்னும் நூலில் ஆப்பிரிக்க இலக்கியத்திலிருந்து ஊகோசுலாவிய இலக்கியம் வரையிலான எல்லா இலக்கியங்களையும் முறையாகப் பயின்று நுண்ணிதின் ஆராய்ந்து அவைபற்றித் தெளிவாக எழுதியுள்ளார். அதில் பாரதிபற்றி மூன்று பத்திகளில் குறிப்பிடும் முடிவுகளை நம் சிந்தைக்கு விருந்தாய் அளிக்கிறார். அவற்றைப் பேரா.ப.ம.நா. நமக்குத் தருகிறார்.
“தமிழ்ப்பெருங்கவிஞனான பாரதியை மேலை உலகம் இன்னும் புறக்கணிப்பது முறையற்ற செயலாகும்; கவிதைக் கல்வியில் கரை தேர்ந்தவர்கள்கூட அவனைப்பற்றிக் கேள்விப் படாமல் இருக்கி்ன்றார்கள் .. .. .. அவன் தன்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே சிறப்புடைய தமிழ் இலக்கிய மரபு, பேணிப் போற்றப்பட வேண்டியதென்றும் ஆனால், அதைத் தற்காலத்திற்கேற்ப மாற்றம் செய்வது தேவை என்றும் உணர்ந்திருந்தான்.”
பாரதியின் கவிதை மரத்திற்கு வேரும் வேரடி மண்ணும் அடிமரமும் தமிழ் இலக்கிய மரபே. பிற மொழிக் கவிஞர்களிடமிருந்து அவர் பெற்றவையெல்லாம் அழகிய கிளைகளாகத் தழைத்திருக்கின்றன; வண்ணப் பூக்களாக மலர்ந்திருக்கின்றன. திருக்குறள், சிலம்பு, மணிமேகலை, தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, கம்பராமாயணம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்றதோடல்லாமல் பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க அடிகள் ஆகியோர் கவிதைகளையும் ஓதியுணர்ந்து தமிழ்க் கவிதைக்குப் புத்துயிர் அளிக்க முனைந்தவர் பாரதி.
எளிய கவிதை நடைக்கு முன்மாதிரிகளைத் தேடி, அவர் மேலை இலக்கியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தாயுமானவரும் கோபாலகிருட்டிண பாரதியும் அண்ணாமலை ரெட்டியாரும் முன்னமேயே இப்பாதையில் தடம் பதித்திருந்தனர்.
நல்லதங்காள் கதை, அல்லி அரசி மாலை போன்ற நூல்களும் ஏற்றப்பாட்டு முதலாம் நாட்டுப்பாடல்களும் அவருக்கும் முந்தைய தலைமுறையினரால் இனிய எளிய தமிழில் எழுதப்பட்டிருந்தன.
இருபது நூற்றாண்டுகளுக்கு மேலானதும் பெருமைக்குரியதுமான தமிழ் இலக்கிய மரபிற்கு ஊறுசெய்யாமல், அதனை உள்வாங்கிக் கொண்டு, அதே சமயத்தில் மேலை இலக்கியங்களிலிருந்து தேவையானவற்றைப் பெற்று, தனது ஆளுமையும் ஆற்றலும் தோன்ற இந்நூற்றாண்டுத் தமிழ்கவிதைக்குப் புது மெருகூட்டி ஒரு பரம்பரையை உருவாக்கிய தொலைநோக்கும்ஆற்றலும் பாரதியின் சிறப்புகள்.
ஒப்பிலக்கிய அணுகுமுறை ஏற்பும் தாக்கமும் என்பது இருபத்து நான்காவது கட்டுரை.
ஒப்பிலக்கியத்தில் தாக்கக் கொள்கை தலையான இடம் பெறுகிறது எனச்சொல்லும் பேரா.ப.ம.நா., இஃகாபு ஃகாசன்(Ihab Hassan), ஆனா பலாகியன்(Anna Balakian), கிளாடியோ கில்லன்(Claudio Guillen) சே.டி.சா(J.T.Shaw) ஆகியோரைத் தாக்கம்பற்றிய கருத்தாளரகளில் குறிப்பிடத் தகுந்தவர்களாகக் கூறுகிறார். யார் யாருடைய படைப்புகளில் யார் யாருடைய தாக்கம் உள்ளது என்ற கருத்தையும் குறிப்பிடுகிறார்.
பாரதி, அரவிந்தர், தாகூர்: ஓர் ஒப்பிலக்கிய மறுபார்வை என்பது இருபத்தைந்தாம் கட்டுரை.
இம் மூவரைப்பற்றிய ஒப்பிலக்கியப் பார்வையில் பின்வரும் குறிப்பிடத்தக்க கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாரதி தமிழிலும் அரவிந்தர் ஆங்கிலத்திலும் தாகூர் வங்காளத்திலும் கவிதைகள் எழுதியவர்கள். மூவரும் சமகாலத்தவர். இவர்களுள் அரவிந்தர் வேதஉபநிடதங்களில் ஆழ்ந்த பயிற்சி பெற்றவர்; தத்துவ நூல்களிலும் ஆழங்கால் பட்டவர்; ஆங்கிலத்தில் உலகிலேயே அதிக சொற்களைக் கையாண்டவர். தாகூர் கவிதை, நாடகம், கட்டுரை, புதினம், சிறுகதை ஆகிய எல்லா இலக்கியவகைகளிலும் மலையென நூல்களை எழுதிக் குவித்து உயர்புகழ் பெற்றவர். இவர்களுக்குள் தொடர்பு ஏற்படாதிருந்தால் பாரதியின் வேதாந்தப் பாடல்களும் கண்ணன் பாட்டும் குயில் பாட்டும் பகவத்து கீதை முன்னுரையும் தோன்றியிருக்குமா என்பது ஐயத்திற்குரியதே. பாரதி அரவிந்தர் இலக்கிய உறவில் நாம் காண்பது தாக்கம் ஆகும். ஆனால், பாரதி தாகூர் உறவு இத்தகையதன்று; அவர்கள் எழுத்துகளில் காணப்படும் ஒற்றுமைகள் எல்லாம் இந்திய நாட்டிற்குப்பொதுவான அறிவுலகிலிருந்து பெறப்பட்டவை; தாகூரின் கல்வியும் புகழும் பாரதிக்கு ஓர் உந்து திறனாக (inspiration) இருந்தது.
அவரது கவிதைகளில் தாகூரின் முத்திரையைக் காணமுடியாது. இவ்விலக்கிய உறவை ஏற்பு(reception) என்றே சொல்ல வேண்டும்.மேலைக் கவிஞர்களோடும் ஏனைய இந்திய இலக்கியப்படைப்பாளிகளுடனும் எத்தகைய உறவு கொண்டிருந்தாலும் பாரதி தனக்கென அமைந்த மேதைமையும் படைப்புத்திறனும் கொண்டவராயிருந்ததால் தான் பெற்றதை யெல்லாம் தனதாக்கி மாக்கவியாக முடிந்தது.
(தொடரும்)
-இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply