(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

37/ 69  இன் தொடர்ச்சி)

 தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

38/ 69

 ‘பக்தி இயக்கமும் தமிழ்க்கவிதை வளர்ச்சியும்(2015)’ (தொடர்ச்சி)

அப்பர் தேவாரம் : ஒரு காப்பியமாக’ என்பது பத்தாவது கட்டுரை. அப்பருடைய தசாபுராணம், இலிங்கபுராணம் ஆகியவற்றில் காப்பியக்கூறுகளைக்காணலாம் என அறிஞர்கள் கூறியதை வழிமொழிந்து பல செய்திகளைப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். தசபுராணப் பதிகத்திலுள்ள பத்து பாடல்களும் ஒவ்வொரு நிகழ்வை வருணிக்கும் முறை காப்பிய நயம் கொண்டு விளங்குகிறது. கடல்வணிக உருவகம், போர்க்கள உருவகம், தண்டி குறிப்பிடும் அணிகளைப் பின்பற்றல், ஐந்திணை வருணனை, நகரப் படலம், கவிதைகளிலுள்ள தெளிந்த பார்வை, ஆழ்ந்த சிந்தனை  முதலிய பலவற்றின் அடிப்படையில் அப்பர் தேவாரத்தைக் காப்பியமாகப் பார்க்க முடிகிறது. அறிஞர்கள் பலரின் கருத்துகளைக் கூறி அவற்றின் அடிப்படையில், மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் அப்பரின் செல்வாக்கு,அப்பர் பதிகங்களில் இராவணன், அப்பர் தேவாரத்தில் எண்கள், அப்பர் தேவாரத்தில் நாட்டார் வழக்காறு முதலிய பல உட்தலைப்புகள் மூலம் தம் கருத்திற்கு வலு சேர்க்கிறார்.

‘கவிதையில் வீர சைவம் : மணிவாசகரும் பசவண்ணரும்’ என ஒப்பிலக்கியக் கட்டுரையைப் பதினோராவதாக அளித்துள்ளார். ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய பத்தி இலக்கியம் இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் பரவியது; எனவே, தமிழ்ப்பத்தி இலக்கியங்களின் செல்வாக்கைப் பிற மொழிப் பத்தி இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம்.

தமிழகத்துச் சைவ முதுகுரவர்களுக்கும் கன்னடத்துப் பசவண்ணருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும் அவர்களுடைய கவிதைகளின் பாடுபொருள்களை வைத்துப் பார்க்கும்போது வீர சைவராகிய பசவண்ணர் வீரசைவராகிய மணிவாசகருக்கே மிகவும் நெருக்கமாகக் காணப்படுகிறார். மணிவாசகரின் பாடல்களும் பசவண்ணரின் வசனங்களும் அவர்கள் “மேற்கொண்ட ஆன்மிகப்பயணத்தின் படிநிலைகளை, முருகியல் இன்பத்தைப் பெருக்கும் வண்ணம் மொழிகின்றன. ஆழ்ந்த மனத் துயரத்திலிருந்தும் சோர்வு நிலையிலிருந்தும் விடுபட்டு இறைவனோடு இரண்டறக் கலத்தலால் ஏற்படும் இன்பத் துய்ப்புபற்றி இருவரும் விரிவாகப் பேசுகிறார்கள்,” இவ்வாறு பல ஒற்றுமைகளைக் கூறும் பேரா.ப.ம.நா.. மணிவாசகர் பசவண்ணர் போன்று மன்பதைத் தீமைகளைக் கண்டிப்பவரல்லர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

மேலைக்கவிதையில் முதல் மூன்று ஆழ்வார்கள்’ என்பது பன்னிரண்டாவது கட்டுரை. பொய்கை ஆழ்வார், பூதத்து ஆழ்வார்,பேயாழ்வார் ஆகியோரின் பாடல்களின் தாக்கம் ஆங்கிலக்கவிதைகளில் இருப்பதை இதில் தெரிவிக்கிறார்.

‘ஆதிசங்கரரும் பக்திப்பனுவல்களும்’ என்பது பதின்மூன்றாவது கட்டுரை. வடபுலத்து இலக்கணக்காரர்கள் அவர்களுடைய மொழியை ஆய்வதற்கு முன்னரே தமிழர்கள் பிறமொழிச் சார்பில்லாத எழுத்துமுறையைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் என அறிஞர் பருனெல்(Burnell) ‘தென்னிந்தியத் தொல்லெழுத்தின் மூலங்கள்’(Elements of South Indian Paleography) எனும் கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார். இதன் தொடர்ச்சியாகச் சங்கரர் காலத்திற்கு முன்னமேயே தமிழ்மொழி நல்ல வளர்ச்சி பெற்றதாயும் பேரிலக்கியங்களைக் கொண்டதாயும் இருந்ததென்பதையும் வடநூல் ஒன்றிற்கும் பழந்தமிழ் நூல் ஒன்றிற்கும் ஒற்றுமை காணும் போதெல்லாம் அகச்சான்றுகள் கொண்டு வடநூலே தமிழ்நூலிலிருந்து கடன்பெற்றிருக்க வேண்டும் என்றுமுடிவு கட்டுவதில் தவறில்லை யென்பதையும் உணரலாம்.

“இராமானுசர் தமது விசிட்டாதத்துவைத் தத்துவத்தை உருவாக்குவதற்கு ஆழ்வார்களின் பாடல்களுக்குக் கடன்பட்டிருப்பதை அறிஞர்கள் கூறியுள்ளனர். சங்கரர் தமது அத்துவைதத் தத்துவத்தை மாணிக்கவாசகர் முதலான சமயக் குரவர்களின் பாடல்கள் துணை செய்திருக்க வேண்டும் என்பதை அறிஞர் எல்லீசு சான்றுகளுடன் குறிப்பிடுகிறார்.” இதனைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா. பல்வேறு பாடல்களை எடுத்துக்காட்டி இக்கருத்துகளுக்கு வலு சேர்க்கிறார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69)