(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 49 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

50 / 69

வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

சுக்கிரநீதி குறித்து ஐந்தாம் கட்டுரை ஆய்வு மேற்கொள்கிறது.

சுக்கிரநீதி ஒரு தொகுப்பு நூல். மேலும் இதில் பலரால் பல காலங்களில் பல பொருள்கள்பற்றி எழுதியவை சேர்க்கப்பட்டுள்ளன. பல பொருள்கள் மீண்டும் மீண்டும் பேசப்பெறுதலும் முரண்பட்ட கருத்துகள் வெவ்வேறு அத்தியாயங்களில் இடம் பெறுதலும் பாடுபொருள்கள் ஒழுங்காக அமையாமையும் சுக்கிரநீதி இடைச்செருகல்கள் மிகக் கொண்ட தொகை நூல் என்பதை நிலைநாட்டும் என்கிறார் பேரா.ப.ம.நா.

சுக்கிரநீதி எடுத்தாளும் திருக்குறள் பலவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறார். இவ்வாறு திருக்குறளின் உயரிய கருத்துகள் ஆங்காங்கே பொதிந்து கிடந்தாலும் சுக்கிரநீதி வருணவேறுபாட்டை வலியுறுத்துவதாலும் பெண்ணிழிவு பேசுவதாலும் வேறு பல பாடுபொருள்களில் தமிழ்மறைக்கு எதிராக மாறுபட்டு விளங்குவதாலும் நல்லறநூல் ஆகாது என்பதையும் விளக்குகிறார்.

கா.சுப்பிரமணிய(பிள்ளை) தம் ஆராய்ச்சி மதிப்புரையில், சுக்கிரநீதி  திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னது என்பதை நிறுவியது இதில் கூறப்பட்டுள்ளது. கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சுக்கிரநீதி என்றும் அறிஞர்கள் கருத்தறிவித்துள்ளனர்.

மனுநீதி, சுக்கிர நீதி, கெளடலீயம் ஆகிய மூன்று சமற்கிருத நூல்களுள் அறவிலக்கியம் என்ற முறையில் சுக்கிர நீதி உயர்ந்தது என்று சமற்கிருத அறிஞர்கள் கருதுவர். அதுவே, திருக்குறளுக்கு மிகையாகக் கடன்பட்டிருப்பது உண்மை. ஏனைய இரண்டும் வருணப் பாகுபாட்டைப் போற்றும் அளவிற்குச் சுக்கிரநீதி போற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இம்மூன்றும் திருக்குறளைப்போல் மனித வாழ்க்கையைக் கால, இட, நிற, இன, மொழி வேறுபாடின்றி நோக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதோடு மிகக் குறுகிய மனப்பான்மை கொண்டாரால் தொகுக்கப்பட்டவை யென்பதும் நம்மவர் அறியற்பாலது.

பகவத்துகீதைபற்றிக் கூறுவது ஆறாவது கட்டுரை.

சமற்கிருத நூலார் பகவத்து கீதை தொன்மையான நூல் என்று கதைகள் பல கட்டி உலவ விட்டாலும் கி.பி.ஏழாம் நூற்றாண்டிற்கு முன் இது தோன்றியிருக்க வழியில்லை என ஆய்வறிஞர்கள் தெளிவுபடுத்துகின்றனர். கீதையில் கூறியது கூறல், முன்னுக்குப் பின் முரண்படக் கூறல், கூறத் தேவையற்றதை மீண்டும் மீண்டும் கூறல், பொருளைத் தெளிவாக்காது சொற்களை அடுக்குதல் போன்ற குறைகளெல்லாம் தவிர்க்கப்படாதது வருந்தற்குரியதாகும். உலக மாந்தரின் உய்வுக்கு எந்நாளும் பொருந்தக்கூடிய வழி கூற வேண்டிய கீதை சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட குழுக்களின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுவதும் மக்களுக்குள் வேறுபாடுகளைக் கற்பித்துச் சிலரைப் போற்றுவதும் கீதையை உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்களாகும்.. . . நால்வருணம்பற்றியும் அவற்றுள் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தியும் மக்களுள் ஒரு பகுதியினரைச் சூத்திரர் என்று இழிவுபடுத்தியும் பெண்ணினத்தை முற்றும் குறையுடையதாக மதிப்பிட்டும் பேசும் பகுதிகளெல்லாம் இறைவனின் கூற்றென்று சொல்லப்படும் நூலில் இடம் பெற்றிருக்கக் கூடாது என்கிறார் பேரா.ப.ம.நா. அவ்வாறு இடம் பெற்ற நூலெப்படி இறைவனால் சொல்லப்பட்டிருக்கும் என்றும் இந்நூலை எப்படிப் பொதுநூலாகக் கருத முடியும் என்றும் நமக்கு நல்லெண்ணத்தை விதைக்கின்றார் அவர்.

நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு. எல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?

பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் குமுகாய அமைப்பு எந்த விதத்திலும் எவ்வகையிலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதனை அறமென்று சொல்வதைச் சான்றோர் ஏற்க மாட்டார். அத்தகைய அமைப்புடைய குமுகாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் அறச்சினம் கொள்வர் என்பது திண்ணம்.பகவத்துகீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டு உணர்வுக்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் எல்லாரையும் சமமாக மதிக்கும் அறத்திற்கு எதிரான ஒருதலைச்சார்புடைய கீதை எங்ஙனம் செவ்வியல் நூலாகும்?

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 51/69 )