(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 62 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

63/69

வள்ளுவர் வாழ வைத்த உவமைகள்(மணிவாசகர் பதிப்பகம், 2019)

பிற நாட்டு அறநூல்கள் தத்தம் காலத்திற்குரியன. தமிழிலுள்ள அறநூல்கள் எக்காலத்திற்கும் உரியன. அத்தகைய தலையாய திருக்குறள் நூலில் உள்ள 69 உவமைகளை 45 தலைப்புகளில் விளக்கப்படுகின்றன.

இந்நூலில் முன்னுரைக்கு அடுத்த முதல் கட்டுரையாக “உவமையணி : தமிழ் மரபும் பிற மொழி வழக்குகளும்” என்னும் நெடுங்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

இதில், உவமைபற்றிய தமிழர் சிந்தனை தொன்மையானதும் சிறப்புமிக்கதும் என்பதை உணர்த்துகிறார்.

மேலைத் திறனாய்வாளர் போற்றும் ஓமரும் மிலட்டனும் கையாண்ட காப்பிய உவமைகளை ஒத்த சிறப்புடையவை. சான்றாகிப் புலப்படுத்தல், அணிசெய்தல், மிகைப்படுத்திக் காட்டல், பின்வருவதைக் குறிப்பால் உணர்த்தல், ஆகிய நான்கு பணிகளையும் திறம்படச் செய்பவை ஆகிய பலவும் சங்க அகப்புறப்பாடல்களில் மலிந்து கிடப்பதை அவற்றை ஆழ்ந்து கற்போர் உணரலாம் என்கிறார். சான்றாக உவமைகள் வரும் பாடல்களையும் எடுத்துக் காட்டுகிறார்.

“சங்கச் சான்றோர் பாடல்களில் காணப்படும் இத்தகைய உவமைகள் யாவும் மேலையோர் விதந்து கூறும் ஓமர், மிலட்டன்போன்றோரின் உலகறிந்த கா்ப்பியங்களில் காணப்படும் உவமைகளினும் பொருத்தம், எடுத்துக்காட்டல், அணியாதல், தாழ்த்தல், உயர்த்தல், வருவது சுட்டல், சொற்சிக்கனம் ஆகிய எல்லாக் கூறுகளிலும் உயர்ந்தவை”  எனவும் நம்மை உணரச் செய்கிறார்.

வள்ளுவர் கூறும் உவமைகள் தமிழ் மரபினவை; தமிழ் மரபிற்குப் பெருமை சேர்த்தவை. இரண்டடிக் குறளில் ஓரடி கருத்திற்கும் ஓரடி உவமைக்கும் ஒதுக்க முடிந்தாலும், ஓரடியிலேயே உவமை தன் பணியைச்சிறக்கச்செய்யும் கலையறிந்தவர் வள்ளுவர்.” என்கிறார். மேலும், திருக்குறள் உவமைகளை 1) சங்கப்பாடல்களில் உள்ளவை, 2) வள்ளுவர் காலப் பழமொழிகளில் இருந்தவை, 3) வள்ளுவர் கால நாட்டார் வழக்காற்றில் உள்ளவை 4) அவரே உருவாக்கியவை என வகைப்படுத்துகிறார். திருவள்ளுவரால் உருவாக்கப்பட்ட உவமைகள் பின்னர் பழமொழிகளாக மாறியுள்ளன என்றும் கூறுகிறார். மேலும், திருவள்ளுவர் கூறியவற்றுள் ஒருபுடை உவமைகள், முற்றுவமைகள், எடுத்துக்காட்டுவமைகள், உருவகங்களாக மாறியவை என்றும் வேறுவகையில் பட்டியலிடுகிறார்.

அடுத்து அவர், ‘தொல்காப்பியரின் உவமையியல்’ என்னும் தலைப்பில் நூற்பாக்களையும் சிறந்த பொருள் விளக்கங்களையும் அளிக்கிறார். இருபதாம் நூற்றாண்டு மேனாட்டுத் திறனாய்வாளர்கள் கருத்துகளை அன்றே தொல்காப்பியர் தெரிவித்துள்ளதை உரையாசிரியர்கள் மூலம் விளக்குகிறார். அணிபற்றியும் கவிதையின் பிற கூறுகள்பற்றியும் பேராசிரியர், தொல்காப்பியரை ஒட்டிக் கூறும் முடிவுகள் மேலைத் திறனாய்வாளர்களின் கருத்துகளினும்  மேம்பட்டவை எனவும் புலப்படுத்துகிறார்.

அடுத்து வரக்கூடிய கட்டுரைகளில் உவமைகளைமட்டும் விளக்கவில்லை. உவமை மூலம் தெரிய வரும் வரலாற்றுக் குறிப்புகள், தொடர்பான தமிழ்எதிர் விளக்கங்களுக்கு மறுப்பு எனப் பலவாறாக விளக்கம் அளித்துள்ளார். சான்றுக்குச் சில பார்ப்போம்.

“அகரம் எழுத்துகளுக்கு முதல் என்பது பகவத்துகீதையில் சொலலப்பட்டிருக்கிறதென்றும் அதிலிருந்தே வள்ளுவர் இக்கருத்தினைப் பெற்றார் என்றும் தமிழின் உட்பகைவர்கள் பிதற்றுவர். பகவத்துகீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்று மகாபாரதத்தில் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்ட தென்பதை மேலைநாட்டு வடமொழி இலக்கிய வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, திருக்குறளிலும் பகவத்துகீதையிலும் காணப்படும் ஒற்றுமைக் கருத்துகளெல்லாம் திருக்குறளிலிருந்து பகவத்துகீதைக்குச் சென்றுள்ளன வென்பது தெளிவு.”

இவ்வாறு தமிழ்ப்பகைவர்களின் பிதற்றல்களுக்கு மறுமொழி தருவதுடன் உரையாசிரியர்களின் தவறான விளக்கங்கள் சிலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், “வள்ளுவர் தம் உவமைகளையெல்லாம் இயற்கையிலிருந்தும் மாந்தர் வாழ்வில் காணப்பெறும் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் எடுத்துக் கொள்வார் இல்பொருள் உவமைகளும் தொன்ம உவமைகளும் இவைபோல் சிறப்புடையன ஆகா வென்பதால் அவை அவரால் தவிர்க்கப்படும்.” என வள்ளுவர் கையாளும் உவமைகளின் இயற்கைத் தன்மைகளை விளக்குகிறார்.

கிரேக்க, உரோமானிய, பிற நாட்டு அறிஞர்களின் உவமைகளுடன் ஒப்பிட்டு ஒத்த தன்மை குறித்தும் வள்ளுவர் கூறும் உவமைகளின் சிறந்த தன்மை குறித்தும் நமக்கு விளக்கம் அளிக்கிறார். எனவே, இந்நூலை உவமைகளின் தொகுப்பாகப் பார்க்காமல் உவமைகள் தொடர்பான ஆய்வு நூலாகக் காணலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 64/69)