(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

43/69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

நான்காம் கட்டுரை வால்மீகியின் இராமாயணம்பற்றியது.

பேராசிரியர் யாகோபி(Jacobi) வால்மீகி இராமாயணம் ஐந்து காண்டங்கள் உடையது. முதல் காண்டமும் ஏழாவது காண்டமும் பின்னர்ச் சேர்க்கப்பட்டவை எனத் தம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். முதல் காண்டத்திலுள்ள் கூற்றுகள், பின்வரு்ம் காண்டங்ளோடு உள்ள செய்திகளுடன் முரண்படுதல்போன்ற காரணங்களைக் குறிப்பிட்டுப் பேரா.ப.ம.நா. இதனை ஏற்றுக் கொள்கிறார்.

வால்மீகி இராமாயணத்தில் இராமனை ஒருபுறம் முன்மாதிரியாகத் திகழும் சான்றோருள் சான்றோனாகக் காட்ட முனைகிறார்கள். மறுபுறம் சில சூழல்களில் தரக்குறைவான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுப்பவனாகவும் நல்லவன்போல் நடிக்கும் வேடதாரியாகவும் இராமன் காட்சி தருகிறான்.  இவற்றை எல்லாம் எழுதியவர் வால்மீகியா பின்வந்த வேறொருவரா எனத் தெரியவில்லை.

இராமன் கைகேயியிடம், “பரதனுக்கு நாட்டையும் சீதையையும் கொடுக்கத் தயங்க மாட்டேன்” என்கிறான்.

கைகேயி முன்னால் அவளை உயர்வாகப்பேசும் இராமன் அவள் இல்லாத இடத்தில் வஞ்சகமாகப் பேசுகிறான். “எனது மாற்றாந் தாயாகிய கைகேயி கொடிய இயல்பும் கடின உள்ளமும் கொண்ட பெண்ணாவாள்.“ “கைகேயி ஒரு மிகக் கொடிய பெண்.எதற்கும் துணிந்தவள். கெட்ட செயல் எதையும் செய்வாள். உனது தாய்க்கும் எனது தாய்க்கும் நஞ்சைக் கொடுத்துக் கொல்லவும் செய்வாள். “2.53.18

இராமன் உத்தம உள்ளம் படைத்தவன் அல்லன் எனபதற்கு வாலியை மறைந்திருந்து கொன்றதும் அதற்காகச் சொல்லப்படும் மழுப்பல்களும் சான்றாகும்.

பரத்துவாசர், சபரி ஆகிய இருவர் விருந்தையும் ஏற்றுக் கொள்ளும் இராமன்  குகன் அளிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“இராமனுடைய  பாத்திரப்படைப்பில் உள்ள முரண்பாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. இராமனைக் கள்ளம் கபடமற்ற நல்லோருள் நல்லவனாகக் காட்டும் பாடல்களும் கீழ்த்தரமான எண்ணங்களும் உணர்வுகளும் கொண்ட கீழான மனிதனாகக் காட்டும் பாடல்களும் உள்ளன.”

சீதையை மீட்ட இராமன் அவளை முறையற்ற சுடுசொற்களால் துன்புறுத்துவது இராமனின் பெருமைக்கு ஊறு செய்வதே. சீதையிடம் இராமன்,  “ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இராவணனின் மடியில் இருந்த உன்னை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? உனது நடத்தை கறை படிந்தது.. . . . நீ (இலக்குவன், பரதன், சுக்கிரீவன், வீடணன் ஆகிய) நால்வரில் யாரை வேண்டுமானாலும். . . . தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஓராண்டுக் காலம் அவனால் கற்பழிக்கப்படாமல் நீ எவ்வாறு அவனது வீட்டில் இருந்திருக்க முடியும்?” என்றெல்லாம் கொடுஞ்சொற்களைக் கொட்டுவதன் காரணம் இராமனின் உள்ளம் கொடிய எண்ணங்களால் நிறைந்திருந்ததே!

சீனிவாச சாத்திரியார் தமது உரைகளில் எழுப்பும் ஐயங்களைக் குறிப்பிட்டு வால்மீகி இராமாயணத்தில் முரண்பட்ட தகவல்களும்  முன்னுக்குப்பின் மாறுபட்ட கருத்துகளும் இருப்பதைப் பேரா.ப.ம.நா.சுட்டிக் காட்டுகிறார்.

வால்மீகி இராமாயணத்தில் உள்ள பற்பல முரண்பாடுகளை எடுத்துக் கூறும் பேரா.ப.ம.நா. அவற்றைச் சரி எனக் காட்டமுயலும் உரையாசிரியர்களின் தெளிவற்ற விளக்கங்கள் நகைப்பிற்கிடமாக உள்ளதையும் பல இடங்களில் எடுத்துரைக்கிறார்.

நூறாயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுப்பது, ஆயிரம் பசுக்களையும் நூறு மதுக்குடங்களையும் பிராமணர்களுக்கு அளித்தல்  எனப் பிராமணர்களுக்கு மட்டுமே கொடையளிக்கும் இராமனின் ஒரு சாதிச்சார்பான செயல்கள் பல இடங்களில் கூறப்படுகின்றன. எனவே, இராமாயணம் பொதுவான மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் பிராமண நலனை மட்டுமே முன்னிறுத்துவதாக உள்ளது.

    பெண்களை மிகவும் தரக்குறைவாகப் பேசும் பகுதிகள் மனுநீதி, தரும சூத்திரங்கள், அருத்த சாத்திரம், காமசூத்திரம், பகவத்துகீதை போன்ற எல்லாச் சமற்கிருத நூல்களிலும்  உள்ளன. பெண்களுக்கு நல்லுலகு(மோட்சம்) கிடையா தென்றும், அவர்கள் சமற்கிருதம் கற்கக்கூடா தென்றும் வேதப்பயிற்சிக்குத் தகுதி அற்றவர்கள் என்றும் பெண்கள் ஒழுக்கமற்ற செயல்களுக்கு அஞ்ச மாட்டார்கள் என்றும் இந்நூல்கள் இரக்கமின்றியும் அறஉணர்வின்றியும் பேசுகின்றன. வால்மீகி இராமாயணத்திலும் இத்தகைய பெண்களுக்கு எதிரான செய்திகளைப் பலவிடங்களில் காணலாம்.

புனைந்துரையும் புகழுரையும் கொண்ட கம்பனின் பாத்திரப் படைப்புகளைப் படித்தவர்களுக்கு வால்மீகி காட்டும் உண்மை முகம் ஏற்கத்தக்கதாக இருக்காது. ஆனால், இதுதான் உண்மை.

நான்காம் கட்டுரை வியாசரின் மகாபாரதம்பற்றியது. மகாபாரதத்தில், பல இடங்களில், பிராமணரைப் பெருமைப்படுத்திச் சொல்லப்படுகிறது. அதன் முதல் பகுதி 8800 சுலோகங்களைக் கொண்டிருந்தது என்றும் மூன்றுமுறை இடைச்செருகல்கள் நிகழ்ந்து 100,000 சுலோகங்களாகப் பெருக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.அறவுணர்வும் நற்பண்பும் கொண்ட குருபரம்பரையினரைப்பற்றிய சிறு காப்பியம் ஒன்றில் பாண்டுவின் பரம்பரையினர் கிருட்டிணனின் தலைமையில் பல மோசடிகளைச் செய்து அவர்களை அழித்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத்தலைகீழாக மாற்றிப் பின்வந்த மகாபாரதம் எழுதப்பட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். எனவேதான், மக்குடானெல், பழைய காப்பிய மரபை எவ்வாறு பிராமணச் சாதியின் கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் இதிகாசமாக மாற்றுவதென்பதைப் பிராமணர்கள் நன்கு அறிந்திருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். பேராசிரியர் ஓல்சுமண்(Prof.Holtzmann) மகாபாரதம் கி.பி.900 ஆண்டுக்குப் பிறகு பிராமணரகளால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது என்றும் அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சி முடிவாகத் தெரிவிக்கிறார். ஆதிசங்கரர் தம் விளக்கவுரையில் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்கக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட சாதியினர் படிப்பதற்காக மகாபாரதம் எழுதப்பட்டது என்கிறார். கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு(Dio Chrysostomos) கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம் என்கிறார்.

கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது என்று மகாபாரதம்பற்றி இசுபானிய நூலொன்று குறிக்கிறது. மகாபாரதம் மட்டுமல்லாமல், சமற்கிருத நூல்கள் பலவற்றிலும் கிரேக்க, உரோமானியச் செல்வாக்கு இருப்பதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.

இவ்வாறு தொடக்கத்தில் மகாபாரதம்பற்றிய செய்திகளைப் பேரா.ப.ம.நா. அளித்துள்ளார்.

மேலும் தொடர்ச்சியாக மகாபாரதக்கதை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவை அடைந்துள்ள கிரேக்க, உரோமானியத் தாக்கங்களையும் கதைப்பாத்திரங்களின் முறையற்ற செயல்களையும தெரிவிக்கிறார். அறிஞர் ஃபெருனாண்டோ உலுஃபு அலான்சோ(Fernando Wulff Alonso)தமது ‘மகாபாரதமும் கிரேக்கத் தொன்மங்களும்’ (The Mahabharata and Greek Mythology) என்னும் நூலில் நிறைவாகத் தாம் கண்டறிந்த உண்மைகளைக் குறிப்பிடுகிறார். அவை மகாபாரதம் பற்றிய அரிய உண்மைச்செய்திகளாக உள்ளன.

ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அலான்சோவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மகாபாரதம் வட இந்தியாவிலோ வடமேற்கு இந்தியாவிலோதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. வியாச பாரதம் கூறுவது உண்மையான வரலாற்று நிகழ்ச்சி என்றும் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மொழிக் காப்பியமாகத் தோன்றிய இதிகாசமென்றும் அது பேரளவு கொண்ட மூல நூலென்றும் சமற்கிருதச் சார்புடையார் சொல்லி வருவன வெல்லாம் பெரும் பொய்கள் என்பதை இந்த ஆழமான தெளிவான மறுக்க முடியாத ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆபாசமான கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றை விட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது  என்னும் உண்மையையும் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார். இத்தகைய, தழுவலான, பொய்யுரையான, இழிகாமமான, நடுநிலையற்ற காப்பியத்தைத் தரமான இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியரின் முடிவு.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69)