வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
வெற்றிப்பரிசாக எழுவருக்கும்
விடுதலை வழங்குக!
உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் முடிவுகளுக்கு எதிராகவும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு முரணாகவும் எழுவர் விடுதலைக்கான கோப்பில் கையாப்பமிடாமல் காலங்கடத்துவது தவறு என்றுதான் எதிர்க்க வேண்டும்.
மேலும் இந்த எழுவரைப் பொறுத்தவரை புலனாய்வுத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர் என வழக்கு தொடர்பானவர்கள் குற்றம் சாட்டப்பட்ட சாத்தனுக்கு மாற்றாக அப்பாவியான சாத்தனை வழக்கில் சிக்க வைத்தது, இரவிச்சந்திரன் வாக்கு மூலத்தை மாற்றி வைத்தது எனப் பல முறைகேடுகள் நிகழ்த்தியதைக் குறிப்பிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டியவர்கள் எனப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்பாவிகளைக் காலத்தை நீட்டித்துச் சிறைகளில் அடைத்து வைத்திருப்பது மனித நேயமல்ல என்ற உணர்வுதான் நமக்கு வரவேண்டும். கொலைக்கு எதிரானவர்கள் போலவும் அறவாணர்கள் போலவும் சட்டம் தெரிந்தவர்கள் போலவும் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா எனக் கேட்பது அறியாமையும் மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும்.
அப்பாவிகளான எழுவரும் விடுதலை செய்யப்பெற்றால் உண்மையான குற்றவாளிகளான சு.சா.போன்ற பா.ச.க.வினர் சிக்குவார்கள் எனத்தான் பா.ச.க. விடுதலைக்கு எதிராக இருப்பதாக மக்கள் கருதுவதால் இந்த அவப்பெயரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவாவது எழுவர் விடுதலை உடன் நிகழ வேண்டும்.
பா.ம.க. கூட்டணி நிபந்தனைகளில் ஒன்றாக எழுவர் விடுதலைபற்றித் தெரிவித்திருந்ததால், மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நரேந்திர(மோடியிடம்) வலியுறுத்தி எழுவர் விடுதலையை அறிவிக்கச் செய்ய வேண்டும். திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு விடுதலையைத் தன் வெற்றிக்குப் பரிசாகப் பா.ச.க. அளிக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழேவிழி! தமிழா விழி!
[கொலையாளிகளை விடுவிப்பது நியாயமா? எனத் தினமலரில் இன்று(வைகாசி 10, 2050 / 24.05.2019) இஃது உங்கள் இடம் பகுதியில் வந்த மடலுக்குமறுமொழி.]
Leave a Reply