இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில்
சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்:
மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்
சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதில் உள்ள சூழ்ச்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள முடியாமல், இளைஞர் சமுதாயம் ஆதங்கத்தில் இருக்கிறது.
இப்போது குடிமைப்பணிகள் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர்களை இ.ஆ.ப., இ.கா.ப., முதலிய பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் நீக்கிவிட்டு, முசோரியில் நூறு நாள் பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரைத் தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று தலைமையர் அலுவலகம் விரும்புகிறது என மத்தியப் பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விசய்குமார்(சிங்கு) அறிவித்திருப்பது, அரசியல் சட்டம் அளித்துள்ள சமூக நீதியைத் தட்டிப் பறிக்கும் செயல்.
இரவு பகலாகப் படித்துத், தேர்வு பெற்றுப், பல தடைகளைத் தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள பேராசிரியர்கள் சிலரிடம் ஒப்படைத்துச், சமூக நீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பாசக அரசும், தலைமையர்ர் அலுவலகமும் துணிந்து விட்டது.
“நாங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம்”, என்று பாசகவால் போடப்பட்டு வந்த நான்காண்டுக் காலப் பகல் வேடம் இதன்மூலம் கலைந்துள்ளது.
தலைமையர் விரும்புகிறது என்றால், தலைமையர் நரேந்திர(மோடி) விரும்புகிறார் என்றே பொருள். எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தைத் திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பாசக அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது இ.ஆ.ப. முதலிய அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் , ‘அடித்தளப் பயிற்சிமுறை’ என்ற போர்வையில், ஒருவகையிலான ” பொதுநுழைவு/நீட் தேர்வை” அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயலுவதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பாசக அரசும், தலைமையர் நரேந்திர(மோடியும்) புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, அடித்தளப் பயிற்சிமுறை மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்களின் இ.ஆ.ப., இ.கா.ப., கனவுகளைத் தகர்க்கும் தலைமையர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் ஒன்றியப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் குடிமைப்பணித் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கும் தேர்வு செய்ய வேண்டும். தவறினால் சமூக நீதிக் கொள்கையைச் சீர்குலைக்கும் மத்தியில் ஆளும் பாசக அரசை எதிர்த்து இளைஞர்களைப் பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும்”
என்று தாலின் எச்சரித்துள்ளார்.
Leave a Reply