ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா

08.04.2014  செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
      எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை

erode-thamizhanban01

YMCA_Erode Thamizhanban(1)

தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் –

பேரா.மறைமலை இலக்குவனார்

‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள்.

உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று அஞ்சி ஒதுங்கக் ‘குடை ராட்டினம்’ உதவுமா? ‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ அவரின் கனல்மணக்கும் கவிதைகளில் ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்கப் போர்க்குரல் முழங்கும்.‘காலத்திற்கு ஒரு நாள் முந்தி’த் ‘திரும்பி வந்த தேர்வலம்’ ‘வணக்கம் வள்ளுவ!’ என வாழ்த்துவதற்குத்தானே!

‘மின்னல் உறங்கும் போது’ ‘கதவைத் தட்டிய பழைய காதலி’ ’சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள்’அவரது கவிதைத் தலைவிகள் என்பதை அறிந்த்தும் வெளியேறிவிட்டாள்.

‘கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்’ கண்டதனால் ‘கனாக்காணும் வினாக்கள்’ எழுச்சிபெற்று ‘விடியல் விழுதுகள்’ வழங்கிய வித்தகத்தை அவர் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.பாரி முல்லைக்கு அருள்புரிந்தான்.ஆயின் ‘என் வீட்டுக்கு எதிரே ஓர் எருக்கஞ் செடி’ என உள்ளம் உருகப் பாடிய பாவலர் ஈரோடு தமிழன்பன் ஒருவரே.

‘நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்’ அவரிடம் ‘சொல்ல வந்தது’என்ன? ‘தீவுகள் கரையேறுகின்றன’ என்பதையா?‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ ‘பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா’என்று ‘இவர்களோடும் இவற்றோடும்’ அவரது எழுத்துப்பணி இணையற்ற பாதையில் பெருமிதத்துடன் பீடுநடையிடுகிறது.

‘அணைக்கவா என்ற அமெரிக்கா’ குறித்து ஆயிரம்பேர் பாடியுள்ளனர்.ஆனால்’உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்…. வால்ட் விட்மன்’எனத் தோழமையுடன் பாடியவர் தமிழன்பனேயாவர்.
‘கவின் குறு நூறு’ படைப்பதற்கு ‘ஓலைச்சுவடியும் குறுந்தகடும்’ அவருக்குத் தேவையா? உங்கள் கவிதைகளில் ஒருமுறையாவது எங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே அவரிடம் ‘வார்த்தைகள் கேட்ட வரம்’.