திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு
திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு
திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்!
வைகோ அழைப்பு
தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, தே.மு.தி.க. – மக்கள்நலக் கூட்டணி – த.மா.கா. ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாற்று அரசியல் வெற்றி மாநாடு
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் வியக்கத்தக்க வெற்றி அருவினையைப் படைக்க இருக்கும் தே.மு.தி.க., – மக்கள்நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., மார்க்சியப்பொதுவுடைமைக் கட்சி, இந்தியப்பொதுவுடைமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கூட்டணியினருடன் கரம் கோர்த்துள்ள தமிழ் மாநிலக்காங்கிரசு ஆகிய 6 கட்சிகள் இணைந்து நடத்தும் மாற்று அரசியல் வெற்றி மாநாடு, திருச்சி மாநகரில் மே 11-ம் நாள் புதன்கிழமை மாலை 4 மணி அளவில், திருச்சி – மதுரை நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ள பரந்தத்திடலில் கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விசயகாந்து தலைமையில் நடைபெறும்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநிலக் காங்கிரசுக் கட்சி தலைவர் வாசன், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி மாநிலச் செயலாளர் இராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வேளாண் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் அவைத் தலைவர் பொ.அய்யாக்கண்ணு ஆகியோர் இம்மாநாட்டில் உரை ஆற்றுகின்றனர்.
மாபெரும் வெற்றி!
திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி சோமு வரவேற்புரையாற்ற, தே.மு.தி.க. மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விசயராசு நன்றியுரையாற்ற உள்ளனர். மதுரை யானைமலை அடிவாரத்தில் சனவரி 26- ஆம் நாள் நடைபெற்ற மாநாட்டில் 10 இலட்சம் பேர் திரண்டனர். ஏப்பிரல் 10 அன்று நடைபெற்ற மாமண்டூர் மாநாட்டில் மதுரை மாநாட்டை விஞ்சிய அளவில் மக்கள் திரண்டனர்.
திருச்சியில் மே 11 அன்று நடைபெற இருக்கும் நமது வெற்றி மாநாடு, மே 16- இல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றியை முன்கூட்டியே பறையறிவிக்கும் மாநாடாக அமையும்.
அலை அலையாகத் திரண்டு வர வேண்டும்!
கூட்டணிக் கட்சிகளின் ஈக(தியாக) மாமணிகளான செயல் வீரர்களும், தாய்மார்களும், பெரியோர்களும், அலைபேசிப் புரட்சியை இத்தேர்தல் மூலம் நடத்தப் போகும் இளைஞர்களும், இளநங்கையரும், மாணவச் செல்வங்களும், வேளாண் பெருமக்களும், தொழிலாளத் தோழர்களும், மீனவ உடன்பிற்பபுகளும், வணிகப் பெருமக்களும், நெசவாள நண்பர்களும், நடுநிலையாளர்களும், அரசு ஊழியர்களும் அலை அலையாகத் திரண்டு வர வேண்டுகிறேன்.
வாகனங்களில் வரும்போதும், செல்லும்போதும் ஓட்டுநர்கள் மிகக் கவனத்துடன், பாதுகாப்புடன் வாகனங்களைச் செலுத்த வேண்டுகிறேன். 1969 பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின்னர், 2 முதன்மைக் கட்சிகளால் ஊழலாலும், மதுவின் கொடுமையாலும் நாசமாக்கப்பட்ட தமிழகத்தை மீட்பதற்கும், நேர்மையான வெளிப்படையான கூட்டணி ஆட்சி அமைவதற்கும், தமிழக வாக்காளர்கள் மனத்தில் தக்கதோர் தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் பங்கேற்க வரவேண்டும் எனத் தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்கப் போராடிய ஊழியன் என்ற முறையில் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
Leave a Reply