பார்வையற்றோர் போராட்டத்திற்கான அழைப்பு!
ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மாசி 25, மார்ச்சு 9 அன்று
பார்வையற்ற மாணவர்கள்- பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில்,
காலவரையற்ற உண்ணாநோன்பு அறப்போராட்டம்!
நண்பர்களுக்கு வணக்கம்! வருகிற திங்கட்கிழமை அதாவது 09/03/2015 அன்று நடைபெறவிருக்கும் காலவரையற்ற உண்ணா நோன்பு அறப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்!
ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது உண்ணா நோன்பு ஈகையர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு, உறுப்பினர்களிடமிருந்து உற்சாக ஆதரவு வேண்டுகிறோம்.
பணி நாடுநர்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினர்களையும் மையப்படுத்தியே இந்த ஒன்பது கோரிக்கைகளும் கட்டமைக்கப் பட்டுள்ளன. அக்கோரிக்கைகள் வருமாறு:-
கோரிக்கை எண். 1
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாகப் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்!
கோரிக்கை எண். 2
(அ) பி.எட். பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைச் சிறப்பு ஆசிரியர்
தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம் வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி அமர்த்த வேண்டும்!
(ஆ) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகத் தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாகச் சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
(இ) உதவிப் பேராசிரியருக்கான தகுதித் தேர்வு(NET or SET) முடித்து நீண்ட காலமாகக் காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 (நூறு) பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாகச் சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப் பட வேண்டும்.
கோரிக்கை எண். 3
பார்வையற்றோருக்கு உடனடியாகத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்புத் தேர்வு ஒன்றினை நடத்துவதற்குத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கெனக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பின்னடைவு
பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
கோரிக்கை எண். 4
உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு இணங்கத் தமிழக அரசு உடனடியாகப் பிரிவு ‘அ’
மற்றும் ‘ஆ’ பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குப்
பணிவாய்ப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
கோரிக்கை எண். 5
பார்வையற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குத் தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்திப் பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
கோரிக்கை எண். 6
படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் துயர்துடைப்பு உதவித்
தொகையினை ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
கோரிக்கை எண். 7
பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
கோரிக்கை எண். 8
01.04.2003 க்குப் பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சமப் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
கோரிக்கை எண். 9
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்குத் தேர்வு எழுத வரும்
எழுதுநர்களுக்கு உரூபாய். 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.
என்ன நண்பர்களே! இந்த கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், கோடிக் கைகள் இணைந்து போராடவேண்டும்!
வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பார்வையற்ற வெளியூர் நண்பர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு, போராட்டத்தினை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
இந்த அஞ்சலினைப் பார்க்கும் அனைத்து அன்பர்களும், தமக்கு நெருக்கமான அனைத்துப் பார்வையற்ற நண்பர்களுக்கும் இந்த செய்தியினைச் சென்று சேர்க்கவேண்டும்.
வாருங்கள் போராடுவோம்! போராடுவோம், போராடுவோம்! இறுதிவரை போராடுவோம்!
“கோரிக்கைகள் நிறைவேற, கோடிக் கைகள் போராடும்!” என்ற நமது உனர்ச்சிமய முழக்கங்கள் விண்ணை அளாவ வேண்டும். எனவே அருள் கூர்ந்து அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், இந்தப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமானால் அதற்குப் பணியில்உள்ளவர்களே! நீங்கள் தரும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும். இந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தேவைப்படும் நிதியினை நல்கி, நமது சங்கத்தின் போராட்ட நிதிச்சுமையினைக் குறைக்கவேண்டுமாயும் உங்களை அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.
போராட்ட நிதி வழங்க விரும்புவோர், சங்கப் பொருளாளர் திரு திவாகர் அவர்களை 9445870645 என்ற எண்ணிலோ, 9840952718 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ள வேண்டுமாறும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்
சங்கப் பொதுச் செயலர்
எசு. அசோக்குமார்
Leave a Reply