C.M.intensive_insurance_scheme

  பொதுமக்கள் நன்மைக்காகத் தமிழக அரசு ‘தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ என ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் “இத்திட்டத்தில் பயன்பெறக் குடும்ப ஆண்டு வருமானம் உரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு உரூ. 1 இலட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உரூ. 4 இலட்சம் உரூபாய் வரை சிகிச்சை செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில நோய்களுக்கு உரூ. 1.50 இலட்சம் வரை சிகிச்சை பெற முடியும். மேலும், பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினரும் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1,016 மருத்துவ சிகிச்சை உள்பட 113 தொடர் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சிகிச்சை பெறுவோர் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. காப்பீட்டு நிறுவனம் மூலம் தொடர்புடைய மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கான தொகை வழங்கப்படும்” என அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதுபோல் ஓய்வூதியர்களுக்கான (இணையர்களுக்கும் குடும்ப ஓய்வுதியர்களுக்கும் சேர்த்து) புதிய நலக்காப்பீட்டுத்திட்டம் 2014 (Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners) ஒன்றும் ஓய்வுபெற்ற அரசூழியர்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அனைத்து ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்களிடமிருந்து திங்கள்தோறும் 150 உரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது- அரசே அனைத்து ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் சார்பில் காப்பீட்டு நிறுவனத்திற்குக்காப்பீட்டுத் தொகையைச் செலுத்திவிடும்.

யுனைட்டடு இந்தியா காப்பீட்டு நிறுவனத்திடம் அரசு ஒப்பந்தம் போட்டு இக்காப்பீட்டுப்பணியை மேற்கொள்கிறது.

அரசு,  இதுவரை மூவாயிரம் கோடி உரூபாய் காப்பீட்டுப் பணம் செலுத்தியுள்ளது. ஆனால், நடைமுறையில் இத்திட்டம் பொதுமக்களுக்கோ ஓய்வூதியர்களுக்கோ குடும்ப ஓய்வூதியர்களுக்கோ பயன்அளிக்கும் வகையில் இல்லை. அரசின்நோக்கத்திற்கு எதிராகக் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்கு உயர் பொறுப்பில் உள்ளவர்களும் உடந்தையாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

  பொதுவாக இக்காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவ மனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம் குறித்த விளம்பரப்பதாகைகள் இருக்கும். இதை நம்பி நோயர் அம்மருத்துவமனைக்குச் சென்றால், அல்லது நோயரைக் குடும்பத்தினர் அழைத்துச் சென்றால், அந்நோயருக்குரிய பண்டுவத்திற்கு அம் மருத்துவமனையில் காப்பீடு பெறமுடியாது இன்னல்படுவர்.

  அரசின் ஆணைக்கிணங்க அப்பண்டுவத்திற்கான செலவைத் திரும்பப் பெற இயலும் என்றும் எனினும் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சிற்சில நோய்ப்பண்டுவத்திற்கான தொகையே திரும்பத் தரப்படும் என்றும் அந்த நடைமுறைக்கிணங்க நோயருக்குரிய மருத்துவச் செலவை அம் மருத்துவமனையில் திரும்பப்பெற இயலாது என்றும் சொல்வர். அவசரநேர்வில் வந்துள்ளவர்கள் பண்டுவம் பார்த்துவிட்டுப் பினன்ர் செலவுத் தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றால் பிற வகை மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின்படி அவ்வாறு பெற இயலும் என்றும் ஆனால் தமிழக அரசின் திட்டத்தின்படி அவ்வாறு பெற இயலாது என்றும் கூறிவிடுவர். உயிர்காக்கும்நோக்கில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவரை இதற்காக வேறு மருத்துவமனைக்கா அழைத்துச் செல்ல இயலும்?

  நோயர் அழைத்துவரப்பெற்ற மருத்துவமனையில் அவருக்குரிய மருத்துவத்திற்குரிய காப்பீட்டுத்திட்டம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் பயனில்லை. பெயரில் விரிவான திட்டம் என இருப்பினும் அரைகுறையாக நடைமுறைத்திட்டத்தால் முழுப்பயன் எங்ஙனம் கிட்டும்?

  மேலும், பொதுவாக மருத்துவமனைகளில்   காப்பீட்டுத் திட்டம் என்றாலே கூடுதல் கட்டணம் பெறுவதும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது. ஆனால், காப்பீடுகோரும்பொழுது ஒவ்வொரு நோய்க்கான மருத்துவத்திற்கும் என ஒரு மொத்தத் தொகையை வரையறை செய்து அத்தொகையைத்தான் தருவார்கள். அத்தொகையானது செலவான தொகையில் கால்பங்காகவோ அல்லது அதற்கும் குறவைாகவோதான் இருக்கும். மேலும், மருந்திற்காக எனப் பல்லாயிரம் செலவழிந்திருக்கும். அத்தொகையில் ஒரு காசுகூடக் கிடைக்காது. ஒட்டுமொத்தத் தொகை என்ற பெயரில் தரப்படும் சிறு தொகை தவிர வேறு தொகை தரப்படாததால், முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தில் பயன்பெற வந்தவர் ஏமாற்றம் அடைவதுடன், எதிர்நோக்கிய தொகை வராமையால் முழு மருத்துவம் பெற இயலாமல் அல்லல்படுவதே வழக்கமாக உள்ளது.

  காப்பீட்டு நிறுவனம் இதுவரை தரப்படாத தகுதியுடைய அனைத்துச் செலவினத்தையும் உரியவர்களுக்குத் திருப்பித் தர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத நேர்வில் அதனுடனான ஒப்பந்தத்ததை நீக்கி முழுமையான பயனை நடைமுறைப்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்துடன்மட்டுமே புதியஒப்பந்தம்போட்டு மக்கள்பயனுறச்செய்ய வேண்டும்.

  எனவே, நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலையிட்டு உண்மையான முழுமையான விரிவான காப்பீட்டுத்திட்டம் பொதுமக்களுக்கும் ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கும் முழுமையான பயன் தரும் வகையில் செயல்படுத்த வேண்டுகின்றோம்.

ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே – ஒல்லாக்கால்

செல்லும் வாய்நோக்கிச் செயல். [ திருவள்ளுவர், திருக்குறள், 673 ]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 81 வைகாசி 17 2046, மே 31, 2015

feat-default