அ.தி.மு.க. வழக்குகள்: நீதிபதிகளும் மனிதர்கள்தாமே!

நீதிமன்றத் தீர்ப்புகள் கருத்தாய்விற்கு உட்பட்டனவே. அவ்வாறு கூறும் பொழுது தீர்ப்புரையை அலுவல் பணியாகக் கருதவேண்டுமே தவிரத் தனிவாழ்வுடன் இணைத்துச் சொல்லக் கூடாது. அஃதாவது தீர்ப்பின் நிறைகுறைகளைக் கூறுகையில் தீர்ப்பாளருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூறக்கூடாது. இந்த அடிப்படையில் எல்லாத் தீர்ப்புகளும் மேலாய்விற்கு உட்பட்டனவே. தீரப்புகள் சொல்லப்பட்ட சூழலில் தவறுகளுக்கு ஆளானவையாக இருக்கலாம். அதனால்தான் மேல்முறையீடுகள் வருகின்றன. மேல் முறையீட்டில் முந்தைய தீர்ப்புகள் தவறெனச் சுட்டிக்காட்டப்பட்டு மாற்றப்படுகின்றன. எனவே, தீர்ப்புகளை மறைவாக்குகளாகக் கருதி ஒன்றும் சொல்லக்கூடாது என்பதல்ல. அண்மையில் மக்களால் தவறாகக் கருதப்படுவன அதிமுக உட்கட்சிச்சிக்கல்கள் தொடர்பான தீர்ப்புகள் ஆகும்.

அதிமுக தலைவர்கள் பன்னீர்செல்வம் – பழனிச்சாமி வழக்குகளில் உட்கட்சிச்சிக்கலில் தலையிடவில்லை என்று சொல்லிக்கொண்டே உட்கட்சிச் சிக்கல்களில் ஒருதலைச்சார்பாக நீதித்துறை நடந்து கொள்வதாகப் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

தீர்ப்பளித்த நீதிபதி கிருட்டிணன் இராமசாமி, மக்கள்நாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவைக் கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் சொல்லிப் பொதுக்குழுவிற்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்தப் பொருண்மையில்(விவகாரத்தில்) ஏதேனும் மறுப்பு இருந்தால் ஏற்கெனவே இதை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை நாடின் தொடர்புடையவர்களின் கோரிக்கையை விசாரிப்பார் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. மறுப்பு இருப்பதால்தானே அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து நீதி கேட்கிறார்கள். பின் என்ன மறுப்பை உச்சநீதிமன்றம் எதிர்பார்க்கிறது என மக்கள் எண்ணுகிறார்கள்.

“அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்” என்கின்றன ஊடகங்கள். ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டிய கூட்டத்தைக் கையொப்பமில்லாமல் தலைமை நிருவாகி பெயரில் அழைப்பு சென்றது விதிமுறை மீறல் என்று நீதி மன்றத்தைத்தானே அணுகியுள்ளார்கள். கண் கெட்ட பின் சூரிய வணக்கமா? பிறகு எப்பொழுது நீதிமன்றத்தை நாடுவார்கள். இது நீதிமன்றம் இல்லையா? “விதிப்படி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவிற்கு இருவரும் கட்டுப்பட வேண்டும்” என்று சொல்லியிருந்தால் சரியான தீர்ப்பாக இருந்திருக்கும். இரு தலைவர்களும் நல்லிணக்கத்திற்கு வந்திருக்கலாம். இத்தனைக் குளறுபடிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் உறுப்பினர் எண்ணிக்கையை அப்படியே எடுத்தாண்டு பெரும்பான்மை ஆதரவு அவருக்கு இருப்பதாக நீதிபதி கூறுகிறார். அந்த எண்ணிக்கை பொய் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாதவர்களை வரவழைத்து உறுப்பினர்களாகக் காட்டுவதாகப் பன்னீர்செல்வம் தரப்பு கூறுகிறதே. அப்படியானால் அதை ஏன் கருதிப் பார்க்க வில்லை.

ஒருவேளை, பெரும்பான்மையர் விரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தைக் கூட்ட வேண்டியவர்தானே முறைப்படிக் கூட்ட வேண்டும் என மறுதரப்பு கூறுவதை ஏன் கருதிப் பார்க்கவில்லை?

அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் சூலை 11ஆம் நாள் நடைபெற எந்தத் தடையும் இல்லை என்றும் அதிமுக பொதுக்குழுவை நடத்துவது அக்கட்சியின் உள்விவகாரம் என்றும் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவிற்கு வேறு கட்சியினர் அல்லது அமைப்பினர் தடை கேட்டால் இவ்வாறு கூறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தானே கேட்கின்றனர். அவ்வாறு கேட்கும் பன்னீர் செல்வம் மூன்று முறை(2001–2002,2014–2015,6/12.2016 – 16/02.2017) தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆக இருந்துள்ளார். ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்துள்ளார். இதனை எதிர்க்கும் பழனிச்சாமி ஒரு முறை முதல்வராக இருந்துள்ளார்.

கட்சிக்குள்ளேயே தகுதியானவரால் எதிர்ப்பு வரும்பொழுது அதைப் புறந்தள்ளாமல், கூட்டப்படும் கூட்டம் விதிப்படி சரியானதுதானா என்றுதானே ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அரசின் கொள்கைகளில் தலையிடமாட்டோம் எனக் கூறும் நீதித்துறை அத்தகைய கொள்கை நிறைவேற்றத்தில் சட்ட மீறல் இருப்பின் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கவில்லையா? அதுபோல், உட்கட்சிப் பூசலில் தலையிட வேண்டா. கூட்டம் முறையானவரால் முறைப்படி கூட்டப்படுகிறதா இல்லையா என ஆராயாமல் ஒதுங்கிச் செல்வது அறமுறையாகாதே!

ஒருவர் அல்லது ஒரு குழு அல்லது ஓரமைப்பு அல்லது அரசு,  ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு அல்லது வழிகாட்டு நெறிகளை மதிக்காது செயல்படுவதை நீதிமன்ற அவமதிப்பு என்கிறது சட்டம். சூன் 23 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் நீதிமன்ற அவமதிப்பு நிகழ்ந்ததாக ஒரு தரப்பு குற்றம் சாட்டும் பொழுது அவ்விசாரணைக்குத் தடை விதித்து  மேற்கொண்டு வழக்கினைத் தொடர விடாமல் செய்து சூலை 11 ஆம் நாள் பொதுக்குழுவிற்கு வழிவகுத்தது முறைதானா என மக்கள் எண்ணுகின்றனர். அதுவும் காலை 9.30இற்குப்பொதுக் குழு கூடும் பொழுது காலை 9.00 மணிக்குத் தீர்ப்பு சொல்வதன் மூலம் மேல்முறையீட்டு வாசலை நீதிமன்றம் அடைத்துவிட்டது ஒரு சாராருக்கு உதவுவதாக அமைகிறது என்பதை நீதிமன்றம் ஏன் உணரவில்லை என்பதும் மக்கள் எழுப்பும் வினாக்கள்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஒழித்துவிட்டு இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதில்தான் இருப்பதாகக் கூறும் பழனிச்சாமி உச்சநீதிமன்ற விண்ணப்பம், காவல்துறை முறையீடு போன்றவற்றில் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே குறித்துள்ளார். இதிலிருந்து சூலை 11 தீர்மானங்களும் பிற நடவடிக்கைகளும் சரியல்ல என அவரே உணர்ந்துள்ளார் எனத் தெரிகிறது. பழனிச்சாமியின் மனச்சான்றே ஏற்றுக்கொள்ளாத ஒன்றை நீதித்துறை ஏற்பதும் புதிராக உள்ளது.

நடுநிலை என்பது இரு தரப்பிலிருந்தும் ஒதுங்கி இருப்பதல்ல. உண்மையின் பக்கம் இருப்பது. எனேவ, நீதித்துறை நன்கு ஆய்ந்து உண்மையின் பக்கம் இருப்பதன் மூலம் அதிமுகவின் உட்கட்சிச்சிக்கல்கள் தீர வாய்ப்பு ஏற்படும்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை

(திருவள்ளுவர்,திருக்குறள்,541)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல-இதழுரை