kumari_koil Murugan Koil_namesas-subramanyar-temple

அறநிலையத்துறையில் தமிழறம் தழைக்கட்டும்!

  எந்த நாட்டிலும் இல்லாக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிலவுகின்றன. அவற்றில் ஒன்றுதான், தமிழ் மக்களால், தமிழ்மக்களின் செல்வத்தில், தமிழ் மக்கள் உழைப்பில், தமிழ் மக்களுக்காகக் கட்டப்பட்ட தமிழ்க்கோயில்களில் தமிழ் வழிபாடும் துரததப்பட்டு விட்டது; இறைவன்-இறைவியர் தமிழ்ப்பெயர்களும் மறைக்கப்பட்டுவிட்டன. தமிழ்வழிபாடு குறித்துத் தனியே பின்னர் எழுதுவோம். இப்பொழுது தமிழ்ப்பெயர்கள் குறித்துக் கூற விரும்புகிறோம்.

 மலைவளர் காதலி, மங்களேசுவரர் – மங்களேசுவரி, மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர் -, மங்களாம்பிகை, திருமேனி நாதர் – துணைமாலை அம்மை, நெல்வேலிநாதர் – வடிவுடையம்மை, குற்றாலநாதர், குறும்பலா ஈசர் – குழல்வாய் மொழியம்மை, ஆவுடைநாயகி, ஏடகநாத ஈசுவரர் – ஏலவார்குழலி, ஆப்புடையார் – குரவங்கமழ் குழலி, ஆலவாய் அண்ணல் – அங்கயற்கண்ணி, பூவணநாதர் – மின்னனையாள் என்பன போன்று வழங்கப்பெற்ற தமிழ்ப்பெயர்கள் அழிக்கப்பட்டன; ஒழிக்கப்பட்டன. சில கோயில்களில் வேறு பெயர்கள் வழங்கினாலும் இப்பெயர்கள் எழுதப்பெற்று உள்ளமையைக் காணலாம்.

  சமயக்குரவர்கள், கடவுளர்களைத் தமிழ்ப்பெயர்களால் அழைத்தே பாடியுள்ளனர். ஆனால், தமிழ்ப்பெயர்கள் ஒரு கூட்டத்தால் அழிக்கப்பட்டன. இவற்றை மீளவும் பயன்பாடடில் கொண்டு வரவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அதே நேரம், அண்மைக்காலங்களில் அறுபடைவீடுகளில் முருகன் சுப்பிரமணியனாகவும் குமரியில் குமரி அம்மன், பகவதி அம்மனாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. கடவுளை நேரடியாக வணங்க வேண்டிய நாம், இடைத்தரகர் போன்று வேற்றுமொழியினரை அமர்த்துவதால் வரும் தீவினையே இதற்குக் காரணம். எனவேதான் நேற்றுவரை தமிழ் இருந்த கோயில் பெயர்களும் இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளன.

  சமய இலக்கியங்களில் குறிக்கப்பெறும் தமிழ்ப்பெயர்களையே எல்லாக் கோயில்களிலும் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அழகன், முதலான பல்வேறு பொருள்களைத் தரும் முருகன் பெயரை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொணர வேண்டும். குமரியாறு, குமரிக்கடல், குமரிக்கண்டம் எனக் குறிக்கப் பெறுவனவற்றைப்போல், குமரிஅம்மனும் தொன்மைப் பெயராகும். மலையாளக் கோயில் என்று தோன்றும் வகையில் குமரியம்மனைப் பகவதியம்மன் என்பது எவ்வாறு ஏற்கத்தக்கதாகும்? எனவே, உடனே அறநிலையத்துறை, கோயில் செயல் அலுவலர்கள் மூலம்முருகன் என்றும் குமரியம்மன் என்றுமே எல்லா நேர்வுகளிலும் குறிக்கவும் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பிற கோயில்களின் பெயர்களையும் இறைவன்-இறைவியர் பெயர்களையும் தமிழில் வழங்க ஒரு தனிக்குழு அமைத்து இலக்கியங்கள், ஆவணங்களின் அடிப்படையிலான பரிந்துரைக்கிணங்க தமிழ்ப்பெயர்களை மீளப் பயன்பாட்டிற்குக் கொணர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழ் மக்கள் தங்கள் துயரங்கள் தொலையவேண்டுமெனில், கடவுளரைத் தமிழ்ப்பெயர்களில் அழைத்துத் தமிழில் வழிபாடு நடத்தினால் மட்டுமே இயலும் என்பதை உணரவேண்டும். தத்தம் பகுதிக் கோயில்களில் தமிழ்வழிபாடு மட்டுமே நடக்கவும் கோயில்கள், கடவுளர்கள் பெயர்கள் தமிழில் வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அறநிலையத்துறை ஆணையர் முனைவர் வீரசண்முகமணி இ.ஆ.ப., தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் பெரிதும் ஆர்வமுள்ளவர். தன் தொடக்கப்பணிக்காலத்திலேயே இதற்கான பாராட்டிதழும் பெற்றவர். தான் பணியாற்றும் துறைகளில் தமிழ் ஆட்சிமொழித்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருபவர். எனவே, அறநிலையத்துறையிலும் தமிழ்மணம் கமழ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்கள், கடவுளர் பெயர்கள் மட்டுமல்லாமல், விழாக்கள், சிறப்பு நிகழ்வுகள், பதவிப்பெயர்கள் முதலானவற்றிலும் தமிழைக் காண இயலவில்லை. எனவே, எங்கும் என்றும் தமிழ் நிலைக்க உழைப்பதே அறச் செயல் என்பதை உணர்ந்து அறநிலையத்துறையில் தமிழ் ஆட்சிக்கு வழிவகுக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைfeat-default

அகரமுதல 85, ஆனி 13,2046 / சூன் 28, 2015

காண்க:

தமிழன்பில்லையேல் இறையன்பு கிட்டாது