சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே!- இலக்குவனார் திருவள்ளுவன்
சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே!
அம்பேத்துகார் இ்நதியாவின் மாபெரும் தேசியத்தலைவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. எனினும் அவர் வகுப்பார் அவரைச் சாதித்தலைவராகக் காட்சிப்படுத்துவதால் அவர் தொடர்பில் சாதிச் சண்டைகளும் இடம் பெறுகின்றன. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய அவர் வழியில் நீதிமன்றங்களில் எந்தத் தலைவரின் படமும் இடம் பெறக்கூடாது என்ற உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை சரியே. எனினும் இப்போது அரசின் வேண்டுதலை ஏற்று அதனைத் திரும்பப்பெற்றுக்கொண்டதையும் பாராட்டுகிறோம். எனினும் இது குறிததுச் சில செய்திகளை நாம் பகிர விரும்புகிறோம்.
மகாத்மா காந்தி, திருவள்ளுவரின் படங்களை மட்டுமே நீதிமன்றங்களில் வைக்கவும் மற்ற தலைவர்களின் உருவப்படங்களை நீதிமன்ற வளாகங்களில் வைக்கக்கூடாது எனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். இது திடீரென்று எடுத்த முடிவு அல்ல. 2008, 2010, 2011, 2013, 2019ஆம் ஆண்டுகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதைச் சுற்றறிக்கையிலேயே பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்துகாரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்கப் பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோள்களை உயர் நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் அல்லது படங்கள் நிறுவப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளது.
இம்முறை நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு புதுச்சேரி வழக்கர் மன்றத்தில் முறையீடு அளிக்கவும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மக்களுக்கும் வழக்கர் மன்றத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்குப் பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்துகார் படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய அறிவுறுத்தல்.
தலைவர்களின் படங்கள் அல்லது சிலைகளை வைத்துச் சாதிச்சண்டை உருவாவதைத் தவிர்ப்பதற்காக உயர் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை சரியே. பல முறை சொல்லியும் கேளாச் செவியராக சட்டத்தைக் காக்க வேண்டிய வழக்குரைஞர்களே சட்டச் சிக்கல் உண்டாகும் வகையில் போராடுவதால் பொறுத்துப்பார்த்துப் பொறுத்துப் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இது தலைமைப் பதிவாளரின் தனிப்பட்ட கருத்து அல்ல. கடந்த ஏப்பிரலில் அனைத்து உயர்மன்ற நீதிபதிகள்அடங்கிய அமர்வுதான் இத்தீர்மானத்தை எடுத்தது. இம் முடிவைத்தான் தலைமைப் பதிவாளர்(பொ), சோதிராமன் தெரிவிக்கிறார். எனவே, இதுவும் நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணையான மதிப்பிற்குரியது. இதனை மீறுவதும் நீதி மன்ற ஆணையை மீறுவதற்கும் நீதிமன்ற அவமதிப்பிற்கும் ஒப்பானதே.
இதனை அனைவரும் வரவேற்றிருக்க வேண்டும். சாதி அரசியலாக்கியிருக்கக் கூடாது. நடுநிலையாளர்களைப் போல், வடநாட்டுத்தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் ஏன் முதன்மை அளிக்க வேண்டும் என்போரும் வரவேற்கின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அரசு சாதி அரசியல் அடிப்படையில் இதனை , அஃதாவது படங்கள், சிலைகள் நீக்க ஆணையை, நீக்க வேண்டியது. உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அரசின் வேண்டுகோளை ஏற்றுப் “பழைய நடைமுறையே தொடரும். எனவே, அம்பேத்துகர் படத்தையோ சிலையையோ அகற்றத் தேவையில்லை” என அறிவித்து விட்டார்.
சாதிச் சிக்கலுக்குத் தீர்வு கண்டமுதல்வருக்கும் சட்ட அமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கும் பாராட்டு.
இச்சசூழலில் முன் நிகழ்வொன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது, சாதி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரத் தலைவர்களின் பெயர்களைத் தமிழகம் கைவிடுவதாக அறிவித்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்திய பின்பே அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து இந்த முடிவை அறிவித்தார்.
இதன்படிச் சாதி மோதல்களைத் தவிர்க்கும் முயற்சியில், தமிழக அரசு அனைத்து மாவட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் இருந்து அரசியல், சமூகத் தலைவர்களின் பெயர்களை நீக்கினார்.
இதற்கு மாற்றாகச் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 15 மாநிலப் பல்கலைக்கழகங்களில் இந்தத் தலைவர்களின் பெயரில் 28 அறக்கட்டளைகள் அமைக்கப்படும் என்றார்.
19 மாவட்டங்களின் பெயர்களாக இருந்த தலைவர்கள் பெயர்களை நீக்கி அந்தந்த மாவட்டத் தலைநகர் பெயர்களிலேயே மாவட்டங்களை அழைக்கச் செய்தார்.
எவ்வகை வேறுபாடின்றி ஆணையைச் செயற்படுத்தித் தமிழ்ப் புலவர்கள், கவிஞர்களான திருவள்ளுவர், சுப்பிரமணிய பாரதி. தமிழ்ச்செம்மல் விடுதலைப் போராளி வ.உ.சிதம்பரனார். பெரியார் ஈ.வெ.இராமசாமி, மூதறிஞர் சி.இராசகோபாலாச்சாரி, பெருந்தலைவர் கு.காமராசு. பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை, சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கர், , தலைவர் நேசமணி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், புரட்சித்தலைவர் எம்ஞ்சி.இராமச்சந்திரன், இராசீவு காந்தி, முதலியவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வீரபாண்டியக் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், புலித்தேவர் போன்ற விடுதலைக்குப் பாடுபட்ட மன்னர், தலைவர்கள் பெயர்களும் நீக்கப்பட்டன.
நீக்கப்பட்ட சேரன், சோழன், பாண்டியன் பெயர்கள் தமிழ் வீரத்திற்கும் தமிழ் மானத்திற்கும் அடையாளம். இப்பெயர்களை ஏன் சாதி வலையத்திற்குள் அடைக்க வேண்டும்? உலகப்பெரும் புலவர் திருவள்ளுவரைச் சாதிப்பின்னலில் சிக்க வைப்பது ஏன்? என்றெல்லாம் தமிழன்பர்கள் கேள்வி கேட்டனர். விலக்கு ஏதும் அளித்தால் தொடர்ந்து அனைத்திற்கும் விலக்கு அளிப்பதுபோல் வரும் எனக் கலைஞர் கருணாநிதித் தான் அறிவிதத அறிவிப்பில் உடும்புப்பிடியாக இருந்தார். பின்னர் ஆண்டுகள் சில கழிந்த பின், வன்னியர் அரசியலுக்காகச் சென்னை அரசு தோட்டத்திற்கு ஓமந்தூரார் பெயரைச் சூட்டினார். எனினும் தான் அறிவித்த பொழுது உறுதியாக நடந்து சாதிப் போராட்டங்களை எதிர் கொண்டார்.
தந்தையாருக்கு இருக்கும் துணிவு மகனாருக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? உயர்நீதி மன்றத்தினர். விடுமுறைநாள் ஆணையாக இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு ஆணையாக இருந்தாலும் வேறு எந்த ஆணையாக இருந்தாலும் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த மாட்டார்கள். மீண்டும் ஓர் ஆணை பிறப்பித்து அதற்கிணங்கத்தான் நடைமுறைப்படுத்துவார்கள். தமிழ்நாட்டரசின் நிதியுதவியுடனும் பணியமைப்புச் செயற்பாடுகளின் கீழும் உள்ள உயர்நீதி மன்றம் தனித்தீவாகத்தான் செயற்படுகிறது. எனவே, உயர்நீதிமன்ற ஆணை எனக்கூறி ஒதுங்கியிருக்கலாம். எனினும் போராட்டங்கள் வலுவாகும் முன்னரே அடக்குவதற்காக உயர்நீதிமன்ற ஆணையைத் திரும்பப்பெற வைத்துள்ளனர். பாராடடுகள்.
தேர்தல் அரசியலுக்காக முடிவெடுப்பதை அரசும் கட்சிகளும் கைவிட்டால்தான் நாடும் நலம் பெறும்! மக்களும வளம் பெறுவர்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
ஐயா! நீங்கள் சொல்லும் அனைத்தும் சரிதான். தலைவர் படங்களை வைக்கக்கூடாது என்றால் அம்பேத்துகர் படத்தையும் நீக்குவது சரியே! இது குறித்து நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள கலைஞரின் நடவடிக்கையும் புரிதலை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆனால் அம்பேத்துகர் இந்திய நாட்டுச் சட்டத்தை இயற்றியவர் என்பதால் நீதிமன்றத்தில் அவர் படத்தையோ சிலையையோ வைப்பது தவறில்லை இல்லையா? அங்கே அவரை யாரும் சாதித்தலைவராகப் பார்க்கக்கூடாது இல்லையா? பிற அரசு அலுவலகங்களில், பொது இடங்களில் அம்பேத்துகர் உருவத்தை வைப்பது வேறு. ஆனால் நீதிமன்றத்தில் சட்டத்தை இயற்றியவர் படத்தை வைக்கக்கூடாது என்றால் அது முறையாகுமா ஐயா? சாதிச் சிக்கல், சண்டைகள் வருகின்றனவே என்றால் நீதிமன்ற வளாகத்திலேயே அத்தகைய சண்டைகளைத் தடுக்க இயலாத நீதிமன்றம் நாட்டில் எப்படி நீதியை நிலைநாட்டும் எனும் அடுத்த கேள்வி எழுகிறதே!
சண்டைகளைத் தடுப்பது நீதிமன்றப் பணியல்ல.