தமிழ்ச்சாலை-பெயர்ப்பலகை திறப்பு02:thamizhchaalai_peyarpalagai-thirappu02

தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய

முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்

  எழும்பூர் ஆல்சு சாலையின் பெயரைத் ‘தமிழ்ச்சாலை’ என மாற்றி அதற்கான  பெயர்ப் பலகையைக் கடந்த திங்கள் முதல்வர் திறந்து வைத்தார்.

  நாம் இதற்காக நன்றியையும் மேற்கொண்டு வேண்டுகோளையும் தெரிவிக்கிறோம்.

  திரு மா.சுப்பிரமணியன் சென்னை மாநகரத் தலைவராக இருந்த பொழுது, பெயர்ப்பலகைகள் தமிழில் அமைய நடவடிக்கை எடுத்தார். அத்துடன் நீண்ட காலமாகத் தமிழமைப்பினர் வேண்டுகோள் விட்டவாறு தெருக்களுக்குத் தமிழறிஞர்கள் பெயர் சூட்டவும் முயற்சி மேற்கொண்டார்.

 அப்பொழுது, அவருக்குத் ‘தமிழ்க்காப்புக்கழகம்’ சார்பில் பின்வரும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

  1. தமிழ்வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஆல்சு சாலைக்குத் ‘தமிழ்ச்சாலை’ எனப் பெயர் சூட்ட வேண்டும்.
  1. தலைமைச் செயலகம் அமைந்துள்ள பகுதி சியார்சு கோட்டை என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு ‘ஐந்திணைக்கோட்டை’ என்று பெயர் சூட்ட வேண்டும்.
  1. பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவான ’கீரீன்வேய்சு சாலை’ என்பதைப் ‘பைந்தமிழ்ச்சாலை’ என்று மாற்ற வேண்டும்.
  1. ஒயிட்சு தெரு, பிளாக்கர்சு தெரு, முதலானவற்றை மாற்றி வெள்ளிவீதியார் தெரு, வெள்ளை நாகனார் தெரு, கார்நாற்பது தெரு எனப் புலவர்கள் நூல்கள் பெயர்களைச் சூட்ட வேண்டும்.
  1. இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் உள்ளன. ‘காவல் ஆணையர் அலுவலகத் தெரு’வில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச் சூட்ட வேண்டும்.
  1. தமிழறிஞர்கள் வாழ்ந்த தெருவிற்குத் தமிழறிஞர்கள் பெயரைச் சூட்ட வேண்டும்.

சான்றாகத் திருவல்லிக்கேணி பெரிய தெரு என்பது   ஒரு புறத்தில் அருணாசலம் தெரு எனத் தொடங்கி மறு புறம் வேறு பெயரில் முடிந்து பெரிய தெரு என அழைக்கப்பெறுகிறது. தமிழ்ப்போராளி பேராசியர் சி. இலக்குவனார்   பேரறிஞர் அண்ணா ஆட்சிஅமைத்த பொழுது பெரியதெருவில்தான் குடியிருந்தார். இதைச் சுட்டிக்காட்டி பெரிய தெருவிற்கு இலக்குவனார் தெரு எனப் பெயர் சூட்டவும் இதுபோல் தமிழறிஞர்கள் வாழ்ந்த தெருக்களின் பெயர்களை அந்தந்த அறிஞர்களின் பெயர்களில் அழைக்குமாறு மாற்ற வேண்டும் என்றும் வேண்டியிருந்தோம்.

  அதே நேரம், திருக்குறள் அறிஞர் எல்லீசு பெயரில் அமைந்த எல்லீசு சாலையை அயல்நாட்டவர் பெயரில் இருப்பதாகக் கருதி மாற்றக்கூடாது எனவும் பொருத்தமில்லாப் பெயர்களையும் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கும் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

  இது தொடர்பிலான மடல் அனுப்பியபிறகு தொடர்பு கொண்ட பொழுது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பெயர்களைப் பரிந்துரைத்து முறையீடுகள் வந்துள்ளன என்றும் அவற்றைத் தொகுத்து ஏற்றவாறான பெயர்களைத் தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள். முடிவு எடுக்கக்காலத் தாழ்ச்சியும் முடிவெடுத்த பின்னர், அரசுத் தரப்பில் காலத்தாழ்ச்சி ஆனதாகவும் தெரியவந்தது.

  மாநகராட்சியிலும் ஆட்சியிலும் தி.மு.க.தான் இருந்ததால் உண்மையான காலத்தாழ்ச்சிக்குக் காரணம் தெரியவில்லை.

  ஆனால், இப்போதைய ஆட்சியில் நடவடிக்கை எடுத்தது மகிழ்ச்சி தருகிறது.

  தமிழ்ச்சாலையைப் பொருத்தவரை, தமிழ்வளர்ச்சித்துறையின் முன்னெடுப்பால் நிறைவேறியதாகத்தான்கொள்ள வேண்டும். தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் முனைவர் கா.மு. சேகர், தொடக்கத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். பின்னர் உரியவாறு பெயர் மாற்றத்திற்கு அரசின் ஒப்புதல் கிடைத்து விட்டதாகவும் உரிய முறைப்படியான செயல்பாட்டிற்குக் காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கேற்ப, 2013-2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்வளர்ச்சித்துறையின் நல்கைக் கோரிக்கையின் பொழுது, தமிழ் வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, தொல்லியல் துறை ஆகிய அலுவலகங்கள் அடங்கிய தமிழ் வளர்ச்சி வளாகம் அமைந்துள்ள ஆல்சு சாலைக்குத்தமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. புரட்டாசி 03, 2046 / செப்.20இல் பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்வளர்ச்சி -செய்தித்துறையின் அரசு செயலர் முனைவர் மூ.இராசாராம், த.வ.இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் ஆகியோருக்கு நன்றி.

  பொதுவாக மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்ததில் இருந்தே அஞ்சல்களில் தமிழ்ச்சாலை எனக் குறித்தே தமிழ்க்காப்புக் கழகம் சார்பிலான மடல்களை அனுப்பி உரியவாறு அவை சேர்ந்தும் வந்தன.(துறையின் பெயர் இருப்பதால் சிக்கல் எழவில்லை.)

  இவ்வறிப்பின் படி, அரசாணை (நிலை) எண் 20 நகராசட்சி நிருவாகம் – குடிநீர் வழங்கல் துறை நாள்   தை 21, 2046 / 04 02.2015 இல் பெயர் மாற்ற ஆணை வழங்கப்பட்டது.

  கடந்த ஆண்டு அறிவிப்பிற்கு இவ்வாண்டு ஆணை பிறப்பிக்கப்பெற்று பெயர்ப்பலகை அண்மையில் திறக்கப்பட்டுள்ளது.

  இனி, சாலைகளின் பெயர்மாற்றங்களுக்கும்உரிய ஏற்புகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்கி விரைவில் செயல்பட வகை செய்ய வேண்டும். சாதிப் பெயர்களை வால்களாகக் கொண்டல்ல, சாதிப்பெயர்களையே பெருப்பெயர்களாகக் கொண்டுள்ள தெருக்கள் இன்னும் உள்ளன. இவற்றை அகற்றியும் தமிழ் காக்க இன்னுயிர் நீத்தவர்கள், தமிழ்வாழ வாழ்ந்த தமிழறிஞர்கள் பெயர்களைச் சூட்டவும் அடைமொழிகளுடன்வைத்து அவற்றை ஆங்கிலச்சுருக்கெழுத்தில் குறிப்பிட வாய்ப்பு ஏற்படுத்தாமல் உரிய பெயர்களை மட்டும் சூட்டவும் வகை செய்ய வேண்டும். (மகாகவி பாரதியார் நகர்  எனச்சூட்டி விட்டுச் சுருக்கமாக எம்.பி.நகர் என அழைக்கும் அவலம் கூடாது.)

 நகராட்சி பணியாட்சித்துறையினர் உள்ளாட்சி அமைப்புகளை விரைவுபடுத்தி சாலைகளில் தமிழ்ப்பெயர் மணக்கவும் பெயர்ப்பலககைளில் தமிழ் வீற்றிருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“தமிழ்நாட்டின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை”  

என்னும் நிலையை மாற்ற வேண்டும்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது. (திருவள்ளுவர், திருக்குறள் 606)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 102, ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015Akaramuthala-Logo