போகிக்கு விடுமுறை விடுக!- இலக்குவனார் திருவள்ளுவன்
போகிக்கு விடுமுறை விடுக!
பொங்கல் விழா என்பது பொங்கல் நாளை மட்டும் குறிப்பதில்லை. பொங்கலுக்கு முதல்நாளான போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்து வரும் 4 நாள் தொகுப்பாகும்.
போகி என்பதும் தமிழர்க்குரிய சிறப்பான பண்டிகை நாளாகும். சுற்றுப்புறத் தூய்மைக்கும் மனைத் தூய்மைக்கும் நல வாழ்விற்கும் அடிப்படையான பண்டிகையாகும். பண்டுதொட்டு (முற்காலம் முதல்) – கொண்டாடப்படுவது பண்டிகை எனப்பட்டது.
பழையனவற்றைக் கழித்துப் புதியனவற்றைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நாளே போகியாகும். வீட்டிலிருந்து குப்பைக் கூளங்களையும் பயனற்றுப் போனவற்றையும் நைந்த கிழிந்த சிதைந்த துணிகள், பாய்கள் முதலானவற்றையும் போக்கும் நாளாகும். பழையனவற்றைப் போக்கும் நாள் போக்கி எனப்பட்டது. ‘போக்கி’ என்பது பழக்கத்தில் ‘போகி’ என மாறி நிலைத்து விட்டது.
ஆண்டின் கடைசிநாளான மார்கழித் திங்கள் இறுதிநாள் போகியாகும். மறுநாள் புத்தாண்டின் தொடக்கமாகத் தைப்பொங்கல் வருகிறது.
‘பொங்கல்’ என்பது ஒருவகையில் நன்றி கூறும் விழா. தைப் பொங்கல் இயற்கைக்கு- சூரியனுக்கு – நன்றி கூறும் நாள். மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாள். அதற்கடுத்த நாள் ஆள்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் நன்றி கூறி வாழ்த்து பெறும் நாள். அதுபோல் போகி என்பதை, ஆண்டின் கடைசிநாள் என்ற முறையில் அவ்வாண்டின் நல்ல நிகழ்வுகளுக்காக நன்றி கூறுவதாகக் கூறுவோரும் உள்ளனர்.
போகிநாளை நிலைப்பொங்கல் என்றும் கூறுவர். வீடடின் தலை வாயிலில் உள்ள நிலைக்கு மஞ்சள் பூசி, அதில் குங்குமப் பொட்டிட்டு, இல்லுறை தெய்வத்தை வணங்குவர். நிலையில் கரும்பைச் சாத்தி நிற்கச் செய்து, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்துத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி தெய்வ வணத்தை மேற்கொள்வர். வீட்டின் பிற நிலைகளிலும் மஞ்கள் பூசிக் குங்குமப் பொட்டிடும் வழக்கமும் பின்னர் ஏற்பட்டது.
“ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை” என நெடுநல்வாடை(அடி 86) கூறுகிறது. வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலை எனப் பொருள். நெடுநிலையில் தெய்வம் தங்கியிருப்பதாக நம்புவதால் செய்யப்படும் வழிபாடு. இதையேதான் மதுரைக்காஞ்சியும் (அடி 353) ‘அணங்குடை நெடுநிலை’ என்றும் ‘அணங்குடை நல்லில்’ (மதுரைக்காஞ்சி, 578) என்றும் கூறுகிறது. இவ்வாறு நிலையை – நிலையிலுள்ள தெய்வத்தைச் சிறப்பாக வணங்கும் நாளே போகி நாளாகும்.
போகிநாளன்று பழங்குப்பைக் கூளங்கள் முதலியவற்றை எரித்து அழிக்கும் பழக்கம் உள்ளது. இவ்வாறு எரிப்பதன் மூலம், மக்கள் தங்களிடையே உள்ள மனக்கசப்புகள், ஒழுக்கக் கேடுகள், தீய பழக்க வழக்கங்கள், விரும்பத்தகாத எண்ணங்கள் ஆகியவற்றையும் அழிப்பதாகக் கருதுவர். சிறுவர் சிறுமியரும் வீட்டைத் தூய்மை செய்து குப்பைகளை எரிப்பதுடன் போகி மேளம் எனப்படும் கொட்டு என்பதைச் கொட்டுவித்தும் போகிப்பண்டிகையில் பங்கேற்பார்கள்.
உலக நாடுகள் பலவற்றில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் எந்த நாட்டிலும் தூய்மையை வலியுறுத்தும் பண்பாட்டுத்திருநாளாக முதல் நாளைக் கொண்டாடுவதில்லை. போகிப் பண்டிகை என்பதன் சிறப்பைப் பலரும் உணரவில்லை. இன்றைக்குச் சுற்றுப்புறத் தூய்மைக்கு எடுத்துக்காட்டான போகிநாளில் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் வண்ணம் எரிக்கக்கூடாதவற்றை எரித்து வருகின்றனர். அரசும் சுற்றுப்புற ஆர்வலர்களும் வேண்டுவதுபோல் இவற்றை எல்லாம் தவிர்த்துச் சுற்றுப்புறத் தூய்மை நாளாக மாற்ற வேண்டும்.
பொங்கலுக்கு முன் வீட்டிற்கு வெள்ளையடித்தும் புது வண்ணம் பூசியும் வீட்டை அழகுபடுத்துகிறார்கள். போகியன்று வீட்டைமுழுத் தூய்மையாக ஆக்குகிறார்கள். அன்றும் சிறு தவசங்கள்(தானியங்கள்), பருப்பு வகைகள், இனிப்பு, கார வகைகள் போன்றவற்றை இறைவனுக்குப் படைத்து வணங்குவர்.
இவ்வாறு பொங்கல் திருநாள் என்பது போகியன்றே தொடங்கி விடுகிறது. எனவே போகி என்பதும் தமிழர்க்கு மிகவும் சிறப்பு மிக்க நாளாகும்.
ஆனால் மக்கள்திலகம் ம.கோ.இராமச்சந்திரன் முதல்வராக இருந்த பொழுது சிலர் பொங்கலை முன்னிட்டு 4 நாள் விடுமுறை தேவையில்லை எனக் கூறித் தவறாக வழிகாட்டி, போகிக்குரிய விடுமுறை நாளை இல்லாமல் ஆக்கினர். இதனால் மற்றுமொரு தீங்கும் நேர்கிறது. போகியன்று விடுமுறை யில்லை என்பதால் அன்றுதான் மக்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல நேரிடுகிறது. இதனால், பொங்கல் அன்றுதான் வீட்டுக்குச் செல்ல நேருகிறது. கதிரவன் தோன்றும் நேரம் பொங்கல் வைத்துப் படைப்பவர்களுக்கு அநத நேரத்திற்குள் வீடுகளுக்குச் செல்ல முடிவதில்லை. நான் மதுரையிலிருந்து சென்னைக்குப் பதவி உயர்வில் வந்த முதலாண்டில் போகியன்றுதான் வீட்டிற்குப் புறப்பட முடிந்தது. ஆனால், மறுநாள், பொங்கலன்று நண்பகல் 12,00 மணிக்குத்தான் மதுரை செல்ல முடிந்தது. பெரும்பாலோர்க்கு இதுதான் நிலை. போகியன்று வரையறை விடுப்பு உண்டு. விரும்புவோர் எடுத்துக் கொள்ளலாமே என்பார்கள். ஆனால், பெரும்பாலும் பலருக்கு அன்றைக்கு வரையறை விடுப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பு கி்டைக்காது. அரசு ஊழியர்களுக்குத்தான் வரையறை விடுப்பு. தனியார் எங்ஙனம் அவ்வாறு விடுப்பு எடுத்துச் செல்ல இயலும்? எனவே, பொங்கலன்று சிறப்பாக அந்நாளைக் கொண்டாடு வதற்காகவும் முதல்நாள் வீட்டைத் தூய்மைப்படுத்து வதற்காகவும் போகிப் பண்டிகையையும் கொண்டாடு வதற்காகவும் போகியன்று விடுமுறை தேவை.
தமிழக முதல்வர் மு.க.தாலின் இதில் கருத்து செலுத்திப் போகிநாளன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம், தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் வங்கி முதலிய நிறுவனங்களும் போகிக்கு விடுமுறைவிட ஆவன செய்ய வேண்டும்.
‘தமிழ்நாடு’ அரசு தமிழர் திருநாளைச் சிறப்பிக்கும் வகையில் போகியன்றும் விடுமுறை அளிக்க அன்புடன் வேண்டுகிறோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
முக்கியமான கட்டுரை ஐயா! போகியின் தமிழ்த் தன்மையை எடுத்துக் கூறியதோடு மட்டுமின்றிப் போகிக்கு விடுமுறை அளிக்காதிருப்பது நடைமுறையில் எத்தகைய சிக்கல்களை விளைவிக்கிறது என்பதையும் கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!
வடநாட்டில் தீபாவளி ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பிருந்தே நாம் பொங்கலை நான்கு நாள் விழாவாகக் கொண்டாடி வருகிறோம். எனவே போகிக்கு விடுமுறை விடுவது முக்கியமானதே!