மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மத மாற்றங்களும் மத மாற்றச் சலுகைகளும் தடுக்கப்பட வேண்டியனவே!
பொதுவாக முற்போக்கு, சமய நல்லிணக்கம், பகுத்தறிவு என்ற கருத்தாக்கங்களில் உள்ளவர்கள், மத மாற்றத்தை ஏற்பவர்களாகவும் மதம் மாறியவர்களுக்கு மத மாற்றத்தால் சலுகை இழப்பு கூடாது என்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவ்வாறிருக்க கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்னும் முதல்வரின் தனித் தீர்மானம கொணரப்பட்டுள்ள நாளன்று அதற்கு எதிராக இந்தக் கட்டுரையா என எண்ணலாம். முதல்வரின் கருத்துக்கு எதிரான கட்டுரை என எண்ணுவதை விட, மதங்களால் பண்பாடு அழிவதைத் தடுப்பதற்கு முனையும் கட்டுரை என்ற நோக்கில் பார்க்க வேண்டும்.
“இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டமுறையிலான பாதுகாப்பு, உரிமைகள், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனமாக வலியுறுத்துகிறது” என்று முதல்வர் மு.க.தாலின் பேசியுள்ளார். மனிதர்கள் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமையுண்டு என்றும் பேசியுள்ளார். இசுலாமிய மதம் மாறியவர்கள் குறித்து ஒன்றும் தெரிவிக்காதது ஏன் எனத் தெரியவில்லை.
தமிழர்கள் இந்துக்களாகச் சொல்லப்பட்டாலும் இந்துக்கள் அல்லர் என்பது உண்மைதான். இந்துக்கள் என்று இன்றைக்குக் கூறப்படுபவர்கள், ஆரியச் சடங்குகளையும் ஆரிய மொழிக் கலப்பையும் ஏற்றுக் கொண்டு தமிழ்ப்பண்பாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் சிதைவு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, மத மாற்றம் என்பது தமிழ்ப்பண்பாட்டுச் சிதைவிற்கு வழி வகுத்து வருகிறது என்பதே உண்மை.
இந்துக்கள் பல தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களாக உள்ளனர். எனவே, அவர்களில் பெரும்பாலர் தேவாலயத்திற்கும் பள்ளி வாசலுக்கும் செல்லத் தயங்குவதில்லை. வேளாங்கண்ணி விழா, நாகூர் விழா போன்ற பிற சமய விழாக்களிலும் பங்கு கொள்ள மறுப்பதில்லை. ஆனால், பிற சமயத்தினர் தங்கள் சமயம் தவிரப் பிற சமயக் கோயில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதையோ பிற சமய விழாக்களில் பங்கு கொள்வதையோ ஏற்பதில்லை.
இது குறித்து முன்னரே எழுதியதை நினைவுபடுத்துகிறேன்:
“சமயம் மாறுபவர்கள் தமிழ் மரபில் இருந்தும் மாறுகின்ற அவலம்தானே உள்ளது. பொங்கல் வாழ்த்து தெரிவித்தால், நாங்கள் இசுலாமியர்கள் என்கிறார்கள். ‘இசுலாம் எங்கள் வழி! தமிழ் எங்கள் மொழி’ என்ற உணர்வு மிக்கவர்களின் வழி வந்த இன்றைய தலைமுறையினர்தாம் அவ்வாறு தெரிவிக்கின்றார்கள். “எங்கள் வீட்டுப் பொங்கல்” என்று உண்ணக் கொடுத்தால் “நீங்கள் உங்கள் கடவுளுக்குப் படைத்து இருப்பீர்கள் வேண்டா” என்கின்றனர் கிறித்துவர்கள். கடவுளுக்குப் படைக்காமல் தருவதாகக் கூறினாலும், நம்முடன் நன்கு பழகும் கிறித்துவர்கள் நாம் தருவன பழங்களாக இருந்தாலும் வாங்க மறுத்துவிடுகின்றனர். இசுலாமியர்கள் வாங்கிக் கொண்டு உண்ணாமல் இருந்து விடுகின்றனர். அதே நேரம் கிறித்துவர்கள், “எங்கள் வீட்டில் குழந்தை இயேசு படம் வைத்து வணங்குகின்றோம்; வாருங்கள்.” அல்லது “தேரில் மாதா வரும்பொழுது எங்கள் வீட்டில் நாளை வழிபாடு இருக்கும்; வாருங்கள். துன்பங்கள் தீரும்”; “உங்கள் மகன் அல்லது மகள் சிறப்பாகத் தேர்ச்சி பெற தேவாலயத்தில் வழிபாடு வைத்துள்ளோம்; வாருங்கள்” என்பார்கள். எல்லாக் கடவுளும் ஒன்றுதானே! போவதால் என்ன என்று நாமும் செல்வோம். மெல்ல மெல்ல மூளைச் சலவை செய்வர். இதனால், சலுகை பெறுவதற்கு இந்துவாகக் காட்டிக்கொண்டு கிறித்துவர்களாக மாறி வாழ்பவர் பல்லாயிரம் உள்ளனர்.” (இலக்குவனார் திருவள்ளுவன், மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்!, 06.09.2015).
துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை
என்கிறார் மாங்குடி கிழார்(புறநானூறு 335) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு உயர்வாகச் சொல்லப்படும் மண்ணின் மக்கள்தான் இன்று ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இவ்வாறு சொன்னபோது இந்து மதம் என்பதில்லை. ஆனால் பின்னர் இந்துவாக்கப்பட்டு அதிலுண்டாக்கப்பட்ட சாதிப்பிரிவுகளில் சிக்குண்டு ஒடுக்கப்பட்டுத் தாழ்நிலை யடைந்தனர். பின்னர் இறக்குமதியான மதங்களில் சேர்ந்த பின்னரும் இழிநிலை மாறாமல்தான் உள்ளனர். இவ்விழி நிலை போக்க மக்கள் மனங்களில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவத்தை ஊன்ற வேண்டும்.
சமற்கிருதம் ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தாலும் அது மண்ணின் மொழியாகாது. அதுபோல்தான் ஈராயிரம் ஆண்டுகளாக அல்லது ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் நம் நாட்டில் இருந்தாலும் கிறித்துவம் முதலிய மதங்கள் மண்ணின் மதம் ஆகாது.
மண்ணின் மதத்தைப் பின்பற்றாதவர்களை எங்ஙனம் மண்ணின் மக்களுக்கு இணையாகக் கருத இயலும்? அவர்களுக்குச் சலுகைகள் மண்ணிண் மக்களுக்குரிய ஒதுக்கீட்டில் இருந்து வழங்கினால் மண்ணின் மக்களுக்கான குமுக(சமூக) நீதி பங்கமாகாதா? சலுகைகள் ஆதித்தமிழர்களுக்கு என்றில்லாமல் ஆதித்திராவிடர்களுக் கென்றுதான் உள்ளன. எனவே, இதன் வழி மண்ணின் மக்களின் சலுகைகள் பிறருக்குப் பங்குபோடப்படும் என்பதே உண்மை.
மதச் சிறுபான்மையர் என்ற உரிமையில் கல்விநிலையங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் பொதுவான ஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர்களுக்கே பணி வழங்கும் உரிமையும் அதிகாரமும் பெற்றவர்கள். தமிழ்நாட்டு மக்கள் தொகையில் பிற சமயத்தவர் எத்தனை விழுக்காடு உள்ளனரோ அதைவிட அதிக விழுக்காட்டில் கல்வி நிலையங்களை நடத்துகின்றனர். இதன்காரணமாக மண்ணின் மைந்தர்களுக்குரிய கல்வி, வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டுச் சமநீதி அநீதியாகிறது. அப்படியானால், நம் நாட்டிலுள்ள பிற சமயத்தவர் மண்ணின் மக்களில்லையா என்று கேள்வி எழலாம். அவர்களும் மண்ணின் மக்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் சமய அடிப்படையில் பார்க்கும்போது பிற மதத்தவரை மண்ணின் சமயத்தவராகக் கருத இயலாது. பிற சமயத்தவரால் தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றதும் தமிழ் மொழி பெருமையுற்றதும் என்றும் போற்றற்குரியது. அதே நேரம் சமய அடிப்படையில் உரிமைகள் வழங்கப்படும் பொழுது மண்ணின் சமயத்தவருக்கு முதலுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இந்து மதத்தில் சாதியின் அடிப்படையில் அநீதி இழைக்கப்படுவதால்தான் மதம் மாறுவதாகக் கூறப்படும் பொழுது அவ்வாறு மதம் மாறிய பின்னரும் அதே நிலை தொடருகின்றது என்றால் மத மாற்றம் என்பது தவறு ஆகிறது அல்லவா?
அறிஞர் போப்பு திருவாசகத்தை மொழி பெயர்த்தார். ஆனால், இந்துவாக மாறவில்லை. அதுபோல், எந்த மதத்தையும் ஒருவர் பின்பற்றலாம். எந்த மத ஆலயத்திற்கும் செல்லலாம். ஆனால் மதம் மாறவேண்டும் என்ற கட்டாயம் கூடாது. இந்துக்கோயில்களில் பிற மதத்தினர் நுழையக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும். மத நம்பிக்கையுள்ள யாவரும் வரலாம் என்று அறிவிக்க வேண்டும்.
இப்பொழுதும்கூடக் கணிசமான மக்கள் இந்து மத்திலிருந்து மாறாமலேயே கிறித்துவ மதத்தைப் பின்பற்றி வருகின்றனர். கோயில்களுக்குச் செல்லாமல் தேவாலயங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்து வழிபாட்டைக் கைவிட்டுக் கிறித்துவ வழிபாட்டையே பின்பற்றுகின்றனர். அவர்கள் வீடுகளில் அணிசெய்வது இந்துக்கடவுளர் படங்களல்ல. கிறித்துவம் தொடர்பானவையே. எனினும் சட்டப்படி மாறினால் கல்வி, வேலை இட ஒதுக்கீடு முதலிய சலுகைகள் கிடைக்காது என்பதால் அவ்வாறு மாறாமல் உள்ளனர்.
முன்பே சில முறை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த இப்போதைய தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டால், அவர்கள் சட்டப்படி கிறித்துவர்கள் ஆவார்கள். அவர்கள் நடத்தும் கல்விநிலையங்கள், பணியிடங்கள் முதலியவற்றில் தமிழ் மக்களின் பழக்க வழக்கம் மதச்செயலாகக் கருதப்பட்டுப் புறக்கணிக்கப்படும். எடுத்துக்காட்டாகச் சில நாள் முன்னர் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். செவிலியர் ஒருவர் அழுதுகொண்டிருந்தார். காரணம் கேட்டதற்குத் “தமிழ்ப்புத்தாண்டு என்பதால் சாமி கும்பிட்டுவிட்டுக் குங்குமம் பூசியிருந்தேன். அதை அழிக்காமல் வந்து விட்டதால் ஒரு நாள் சம்பளத்தைப் பிடிப்பதாகக் கூறி விட்டனர்” என்றார். சில இடங்களில் ஒட்டுப்பொட்டு இருந்தால் ஒன்றும் சொல்வதில்லை என்றும் தான் படிக்கும்பொழுதும் இதே கட்டுப்பாடுதான் என்றும் கூறினார். பிற பொதுவான கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான். கல்வி வளர்த்த பிற சமயக் கல்வி நிலையங்கள், ஆங்கிலேயர்களாகவே மாணாக்கர்களை உருவாக்குகின்றனர். எனவேதான் தமிழில் பேசினால் தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறு பலவற்றைச் சொல்ல இயலும். கிறித்துவர்களாக மாறுவோர் பெருகி இத்தகைய அவலநிலையும் பெருகும்.
திட்டமிட்டு நற்பணி யாற்றும் முதல்வர் மத அடிப்படையிலான சிந்தனைகளைப் போக்கும் வகையில்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எனப் பாவேந்தர் கனவுகண்டதை நனவாக்கினால் இந்தச்சிக்கல்கள் எழா. இட ஒதுக்கீட்டிற்குத் தேவையற்ற் சூழல் எழும். நம் நாடும் மக்களும் நலம் உறுவர்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் – 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல – இதழுரை
மிகத் துணிச்சலான கட்டுரை ஐயா! பொதுவாக எல்லாரும் இந்து மத இழிவுகளைத்தாம் சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் பிற மதங்களிலும் இப்படிப்பட்ட தவறான பார்வைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தவறு எங்கு இருந்தாலும் தவறே! யார் செய்தாலும் தவறே! அதே நேரம் மதம் மாறியவர்களை மண்ணின் மக்களாக ஏற்க முடியாது எனும் உங்கள் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறேன். தமிழர் என்பது இன அடையாளம் என்பதால் மதம் மாறினாலும் இன அடிப்படையில் அவர்கள் தமிழர்களே என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. எனவே இட ஒதுக்கீடு தேவைப்படுபவர்களுக்கு அது போய்ச் சேர்வதில் தவறில்லையே?
நண்பரே, இலங்கை முழுவதும் இருந்தவர்கள் தமிழ்மக்கள்தாமே. அவர்கள் புத்த மத்தைத் தழுவியதும் மெல்லச் சிங்களர்களாக மாறி இன்று தாய் இனத்தையே எதிர்க்கும் சிங்களர்களாக மாறவில்லையா? சிந்தியுங்கள். எனினும் கருத்துக்கு நன்றி.