முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன்
முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும்
இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்!
நரேந்திரர், அமித்து சா, ஒன்றிய அரசு வெளிப்படுத்தும் இந்தி, சமற்கிருதத் திணிப்பு தொடர்பான பேச்சு, தீர்மானம், நடவடிக்கை முதலியவற்றிற்கு மு.க.தாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமற்கிருதத் திணிப்பிற்கு வழிகோலவே இந்தித்திணிப்பு நடைபெறுவதாகக் கூறி வருகிறார். இவற்றின் மூலம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலைப்பாட்டைக் கொணர்ந்து மக்கள்நாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நாட்டுத் தொண்டு சங்கம்/ இரா.சே.சங்கத்தின் செயற்திட்டத்தைப் பாசக நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் வானொலியில் ஆகாசுவாணியைத் திணித்த பொழுதும் தொலைக்காட்சியின் முத்திரையில் திணித்தக் காவி நிறம் குறித்தும் கடுமையாய்க் கண்டித்திருக்கிறார்.
பாராட்டப்பட வேண்டிய செய்தி. தமிழ் மக்களை அழிவிலிருந்து காக்க இந்தி, சமற்கிருதத் திணிப்புகளை அடியோடு நிறுத்தல் வேண்டும். விருப்பம் என்ற போர்வையில் வேறு வாய்ப்பு இன்றித் திணிக்கப்படுகின்றன இம்மொழிகள்.
அதே நேரம் பிறர் முதுகின் அழுக்கைக் குறை கூறும் நாம் நம் கைகளில் உள்ள அழுக்குகளை முதலில் துடைக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டரசு வெவ்வேறு வகைகளில் இந்தித் திணிப்பிற்கு உடந்தையாக இருப்பது அனைவரும் அறிந்ததே! அரசிற்கு இது தெரியாதா என்ன?
அரசின் 31,336 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் எண்ணிக்கை 25,50,997. தமிழ் நாட்டிலுள்ள 4,498 பதின்பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலை மாணாக்கர் எண்ணிக்கை 30,60,601. இந்தி திணிக்கப்படுவோர் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இங்கே இள மழலை(U.K.G.) வகுப்பிலிருந்தே இந்தி கற்றுத் தரப்படுகிறது. யாரும் விரும்பிச் சேருவதில்லை. பதின்நிலைப்பள்ளியில் பெற்றோர் விருப்பத்திற்காகச் சேர்க்கப் படுகிறார்கள். இந்தி மழலை நெஞ்சிலேயே பாய்ச்சப்படுகிறது. மாநிலக் கல்விமுறையிலேதான் பதின்நிலைப்பள்ளிகளும் வருகின்றன. தமிழ்நாடு அரசுதான் இசைவு தருகிறது. இவர்களுக்கு இந்தி திணிக்கப்படுவது ஏன்?
தமிழ்நாட்டிலுள்ள மத்தியக்கல்வி வாரியப் பள்ளிகளின் (CBSC Schools) எண்ணிக்கை 944. 2010 இல் இக்கல்வி முறையில் 250 பள்ளிகள்தாம் இருந்தன. எனவே, இப்பொழுது நான்கு மடங்கு தமிழைப் புறக்கணிக்கும் இந்திப்பள்ளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன எனலாம். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த மரு.தமிழிசை அனைத்து அரசு கல்வி முறையையும் மத்திய வாரியத்திற்கு மாற்றி விட்டதால் அங்கே மக்களாட்சி குழிதோண்டி புதைக்கப்பட்டு, இந்தி திணிக்கப்பட்டு விட்டது. இவ்வாறாக இந்தி பயிலும் இன்றைய தலைமுறை மாணாக்கரின் பிள்ளைகளின் தாய்மொழி இந்தியாக மாற்றப்படுகிறது. எனவே அதற்கு அடுத்த தலைமுறையினர் இந்தி மக்கள் ஆகிவிடுவர். எனவே கல்வித் திட்டம் மூலம் இந்தி திணிக்கப்படுவதை முதல்வர் தாலின் உடனே நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டரசின் கல்வித்துறையிலேயே இந்தி கோலோச்சுவதை முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம். கல்வித்துறையில் இந்தி வடிவச் சமற்கிருதப் பெயர்களை Samagra Shiksha, Sarva Shiksha Abhiyan (SSA), Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA), என ஒலி பெயர்ப்பில் குறிப்பிடு கின்றனர். (தமிழ் எழுத்துகளில் குறிக்கக் காணோம்). ‘நம்ம school’ / Namma School Foundation எனப் புதிய மணிப்பிரவாளத்திற்கு வழி வகுக்கின்றனர். இவ்வாறு ஆட்சித்துறையிலும் இந்தி திணிக்கப்படுவதும் ஆங்கிலம் அமர வைக்கப்படுவதும் தமிழ் அகற்றப்படுவதும் நாம் நம்பும் அரசே நம்மை அழிக்கும் அவல நிலைக்கு இட்டுச் செல்கிறது.
எனவே, நம் பக்கம் உள்ள குறைகளைக் களைந்து எறிந்து விட்டு, நம் பள்ளிகளில் திணிக்கப்படும் இந்தியை அகற்றி விட்டு, இந்தி எதிர்ப்பிற்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
அடுத்தவன் சம்பாதிக்கிறானே நாமும் சம்பாதிப்போம் என்றுதான் கல்வி வணிகத்தில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகிறார்கள். பணம் சம்பாதிக்கும் ஒரு வாயிலை ஒரு சாரார் மூடிவிட்டனர் என்றால் பிறரும் அவ்வழியினைப் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். எனவே கட்சித்தலைவர் என்ற முறையில் மு.க.தாலின் தன் கட்சியினர் யாரும் எவ்வழியிலும் இந்தியைத் திணிப்பதற்குத் தாங்கள் நடத்தும் கல்விநிலையங்களைப் பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2010 இல் குசராத்து உயர் நீதி மன்றம் இந்தியைத் தேசியமெழி என அறிவிக்கவோ பரப்பவோ தடை விதிக்கும் வகையில்இந்தி தேசிய மொழி அல்ல என்று தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்தியைத் தேசியமொழியாகக் குறிப்பிடுவோரும் கற்பிப்போரும் கற்பிக்கும் நிறுவனங்களும் நூல்களும் தடை செய்யப்பட வேண்டும்.
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரசு தலைவருமான மமுதா (பானர்சி) இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருகிறார். 2017இலிலேயே பெஙகளூரில் கேரளா, ஆந்திரா, ஒரிசா, மே.வங்காளம் முதலிய இந்தி பேசா மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று கூடி இந்தித்திணிப்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். மேனாள் துணைவேந்தர் பத்துமா சேகர் இந்தித் திணிப்பிற்கு எதிராகக் கன்னடர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் குரல் கொடுத்துள்ளார்
நாமோ போலியான இந்தி எதிர்ப்பை உரக்க முழஙகிவிட்டு அமைதியாக ஆங்கிலத்திணிப்பிற்குக் கதவு திறந்து வைத்துள்ளோம். இதற்கான ஒரு செய்தி காண்போம். “தலைமைச் செயலர்கள் நிரல் பலகை ஆங்கிலத்தில் இருந்ததைக் கண்டு வருத்தமுற்றேன்.” (தலைமைச் செயலகத்தில் தமிழாய்வு மேற்கொள்க! – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 22 – இலக்குவனார் திருவள்ளுவன் 10.03.2023 ) என வேதனையை முன்னர்த் தெரிவித்து இருந்தோம். வருத்தத்தைப் போக்கும் கையில் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. நடவடிக்கை எடுத்துள்ளார். அறை முகப்பில் உள்ள பதவியாளர் நிரல் பெயர்ப்பலகையைத் தமிழிலும் வைத்துள்ளார். இது குறித்து “இன்று(15.05.23)முதல் தமிழிலும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது எனப் புதிய தலைமுறைச் செய்தி வெளியிட்ட படத்தையும் நமக்கு அனுப்பியுள்ளார். ஏன் தமிழில் மட்டும் வைக்கக்கூடாதா எனச் சிலர் எண்ணலாம். பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் அறிய ஆங்கிலத்திலும் பெயர்ப்பலகை தொடர்கிறது. (பதவியாளர் நிரல் பலகையைத் தமிழிலும் வைத்த த.செ.இறையன்பிற்குப் பாராட்டு! – இலக்குவனார் திருவள்ளுவன், 16.05.2023)
ஆனால், கடந்த திங்கள் தலைமைச் செயலகம் சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பதவி நிரல் பலகை ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பெயர்ப்பலகை இருந்த பொழுது தமிழ்ப்பெயர்ப்பலகை அகற்றப்பட்ட அநீதி ஏன் நிகழ்ந்தது. அது புதிய பலகையே. எனவே, அப்பெயர்ப்பலகை அழிநிலையில் இருந்ததாகப் பொய்யாகக் கூற இயலாது. தலைமைச்செயலர் ஆங்கிலம் மட்டும் போதும் எனச் சொல்லியிருந்தால் வேலியே பயிரை மேயும் நிலையாகிறது. பிறர் செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்காத் தலைமைச்செயலரின் நிலைப்பாடும் வருத்தத்திற்குரியது. இன்றைய தலைமைச் செயலர் திரு சிவதாசு மீனா இ.ஆ.ப., 1998இல் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது சீர்காழி மணிமண்டபம் அமைக்க வேண்டியதற்குப் பெரிதும் ஆர்வம் காட்டியவர். அத்தகைய ஆர்வம் மிக்கவர் தமிழுக்குப் பாராமுகமாகவும் ஆங்கிலத்திற்குக் காதல் முகமாகவும் ஆட்சி அமைவதற்குத் துணையாக இருப்பது வருத்தமாக உள்ளது.
“இந்தித் திணிப்பால் ஒரு கட்சி விரட்டப்பட்டது. ஆங்கிலத் திணிப்பால் வேறொரு கட்சி அகற்றப்பட்டது” என்னும் வரலாற்றுப் பதிவை ஆட்சியாளர்கள் உருவாக்கக் கூடாது.
எனவே, “தமிழ்நாட்டில் எங்கும் எதிலும் தமிழே!” என்பதைச் செயல் வடிவில் நிலைப்படுத்த வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் இரு கட்டங்களில் பாசக அகற்றப்படும் அதிர்ச்சிச் செய்தியைப் பாசக உணர்ந்து வருகிறது. எனவே அடுத்து ஆட்சியமைக்கும் இந்தியா கூட்டணியை ஆட்சி யமைப்பில் வழிகாட்ட முதல்வர் மு.க.தாலின் முன்வரவேண்டும். தனக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க வேண்டும். பொதுவான கல்விக் கொள்கை நாடு முழுவதும் பின்பற்ற ஆவன செய்ய வேண்டும். “ஆங்கிலம் 5 ஆம் வகுப்பில் ஆடல், பாடல் மொழியாக மட்டும் கற்பிக்கப்பட வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்தே எழுதக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள பிற மொழியினர் தத்தம் தாய்மொழிக்கான சான்றிதழ்களை அளித்தால் மட்டும் அவர்களின் தாய்மொழியைக் கற்பதற்கு வழி வகுக்க வேண்டும்.”
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியே ஆட்சி செய்ய வழி காட்ட வேண்டும். “உரிமைக்குத் தாய்மொழி! உறவுக்கு ஆங்கில மொழி!” என்னும் நிலைப்பாட்டை மாநிலங்கள் செயற்படுத்த வழி காட்ட வேண்டும். இந்திய ஒன்றிய அரசு பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அறிவுறுத்தியவாறு மொழி வழித் தேசிய இனங்களின் கூட்டரசாக மலர வழி காட்ட வேண்டும். பேரறிஞர் அண்ணா, அரசியலறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர், குரல் கொடுத்த “மாநிலத்தில் தன்னாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்னும் முழக்கம் நடைமுறையாக்கப்பட வேண்டும்.
இந்திய மக்கள் மு.க.தாலினை வரவேற்கக் காத்துள்ளனர். மு.க.தாலின் மாநில மொழிகளை ஆட்சியில் அமர்த்தும் நற்பணிக்கு ஆயத்தமாக வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். (திருவள்ளுவர், திருக்குறள் 674)
ஆதலின் தமிழுக்குப்பகையான பிற மொழித் திணிப்புகளை அடியோடு அகற்ற வேண்டும். முதல்வர் மு.க.தாலின் இதற்கேற்பத் தமிழ்நாட்டில் நல்வினையாற்றவும் இந்தியத்துணைக்கண்டத்திற்கு வழிகாட்டி ஆற்றப்படுத்தவும் வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
சித்திரை 18, 2055 / மே 01.2024
பொதுவாக ஒரே பேசுபொருளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எழுத வேண்டியிருக்கும்பொழுது எழுதுவதில் சலிப்பு ஏற்படும்; “எத்தனை முறைதான் சொல்வது” என்ற களைப்பு தோன்றும்; புதிதாக எந்தக் கருத்தும் இல்லாமல் முந்தைய படைப்புகளில் சொன்ன கருத்துக்களையே வேறு சொற்களில் எழுத வேண்டி வரும். ஆனால் இப்படி எதுவுமே இல்லாமல் இந்தித் திணிப்பில் தி.மு.க., அரசின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதும் ஒவ்வொரு முறையும் புதுப் புதுத் தகவல்கள், புதிய கோணங்கள், புதிய புள்ளிவிவரங்கள் என எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள் நீங்கள்! எந்த அளவுக்கு நீங்கள் இந்தித் திணிப்பு குறித்து கவலைப்படுகிறீர்கள் என்பதை மட்டுமில்லை மொழித்துறை, அரசு மேலாண்மைத் துறை ஆகியவற்றில் உங்களுக்கு இருக்கும் ஆழ்ந்த நுண்மாண் நுழைபுலத்தையுமே இது காட்டுகிறது.
ஆம்! தாலின் அவர்கள் இப்பொழுது அவரது வாழ்வில் மட்டுமில்லாமல் வரலாற்றிலும் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறார். இத்தனை காலம் இந்தித் திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு ஆகியவற்றில் பா.ச.க., மீது மட்டுமே மொத்தப் பழியையும் சுமத்தி அவர் தப்பித்து வந்தார். இப்பொழுது ஆட்சி மாறினால் – மாறும் என நம்புவோம் – இனி இந்தித் திணிப்பு குறித்த பொறுப்பு அவருக்கும் உண்டு. இனியும் ஒன்றிய அரசு மீது பழி சொல்லி அவர் தப்பிக்க முடியாது. சரியான நேரத்தில் ஆட்சியாளருக்கு வரலாற்றுக் கடமையைச் சுட்டிக் காட்டும் கட்டுரையைப் படைத்துள்ளீர்கள்! நன்றி ஐயா!
நன்றி ஞானம்.