கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.

ந,முத்துசாமி

(வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07,  தி.பி. 2049  / 24.10.2018)

 

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால்  புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார்.

சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை  ஒப்படைத்தார்.

கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர்  அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது.  இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு அறக்கட்டளை, பிரான்சின் கலைபண்பாட்டு அமைப்பான அலயன்சு பிரான்சே(alliance francaise), கித்தே போன்ற அமைப்புகளின் ஆதரவில் செயல்பட்டு வருகிறது.

  தெருக்கூத்து முதலான கலை வளர்ச்சியிலும் கலைஞர்களை உருவாக்குவதிலும்  முதன்மை இடம் பெறும் இவ்வமைப்பில் பயிற்சி பெற்றோர் பலர் திரைத்துறையிலும் ஒளிவிடுகின்றனர்.நாசர், தலைவாசல் விசய், சண்முகராசன்,கலைராணி, விசய் சேதுபதி, விமல், விதார்த்து, தேவி, மீனாட்சி, குரு சோமசுந்தரம், பசுபதி, சியார்சு, செயராவு, செயக்குமார், கருணாபிரசாத்து, ஆனந்து சாமி, குபேரன், சஞ்சீவி, கவின் செ.பாபு, போன்றோர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவரது படைப்புகள் வருமாறு:-

சிறுகதைத் தொகுப்பு – நீர்மை

நாடகங்கள்:

காலம் காலமாக

அப்பாவும் பிள்ளையும்

நாற்காலிக்காரர்

சுவரொட்டிகள்

படுகளம்

உந்திச்சுழி

கட்டியக்காரன்

நற்றுணையப்பன்

ந.முத்துசாமி நாடகங்கள் (21 நாடகங்கள்,ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு)

கட்டுரைத் தொகுப்பு:

அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்)

சங்கீத நாடக அகாதமியின் விருது(2000),  ‘ந.முத்துசாமி கட்டுரைகள் நூலிற்கான சிறந்த நூல் விருது(2005), இந்திய அரசின் தாமரைத்திரு விருது(பத்மசிரீ-2012) முதலான சிறப்புகளைப் பெற்றுள்ளார்.

 தெருக்கூத்துக்கலையின் காவலராக விளங்கிய ந.முத்துசாமியின் மறைவிற்கு அகரமுதல – மின்னிதழின் இரங்கல்கள்!