இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி
தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு. ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது.
இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும்.
இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு.
செமிட்டிக்கு குடும்ப மொழிகளுள் எல்லாப் பொருள்களும் அஃறிணையாகவே கருதப்படுகின்றன. தமிழ்க் குடும்ப மொழிகளில்தான் பொருள்களின் இயல்புக்கேற்பத் திணை, பால் கூறும் முறை நிலவுகின்றது; பகுத்தறிவுக்கொத்துள்ளது.
இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஆரியத்திற்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள் பலவாம். அவையாவன:
தமிழில் வேற்றுமையை ஓர் உருபானும், பால் எண்களை விகுதிகளாலும் அறிவிக்கும் முறை உண்டு. ஆரிய மொழியில் வேற்றுமையும் எண்ணும் ஓர் உருபானும் பால் பிறிதொன்றானும் அறிவிக்கப்படுகின்றன.
தமிழில் பெயரைச் சிறப்பிக்கும் அடைகள் பெயர்களின் திணை பால் எண்களுக்கேற்ப மாறா . ஆனால் ஆரிய மொழியில் அவை மாறும். தமிழில் புதிய காசு என்று ஒருமையிலும் புதிய காசுகள் என்ற பன்மையிலும் கூறும் முறை உளது. ஆனால் ஆரிய மொழியில் புதியகள் காசுகள் என்று அடைமொழிக்கும் பன்மை விகுதி சேர்த்துக் கூறும் முறை உண்டு.
தமிழ்க் குடும்ப மொழிகளில் எதிர்மறை விகுதிகள் உள. ஆனால் ஆரிய மொழியில் அவை இல. தமிழில் முன்னின்றாரை உளப்படுத்தியும் நீக்கியும் கூறுவதற்கேற்ப இருவகைத் தன்மைப் பன்மைப் பெயர்கள் உள. ஆரிய மொழியில் அவை இல. தமிழில் அல்வழி வேற்றுமை என்ற பகுப்புகள் உள. ஆரிய மொழியில் அவை இல.
தமிழில் வியங்கோள்வினை, எச்சவினை உள. ஆரிய மொழியில் இல. தமிழில் முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை ஆரிய மொழியில் முதல் வேற்றுமைக்கும் உருபு உண்டு.
சொல்வகையான் ஈரேவல், மூவேவல் தமிழில் உண்டு; ஆரிய மொழியில் இல்லை. தமிழில் பல வினைமுற்றுக்கள் உம்மையின்றி வந்து இறுதியில் நிற்கும் வினைமுற்றைத் தழுவும். ஆரிய மொழியில் இம் முறை இல்லை.
உயிரளவு மாறுதல் (Vowel gradation) ஆரிய மொழியில் மிகுதியாக உண்டு. தமிழில் அவ்வாறு மிகுதியாக இல்லை.
ஒருவன், ஒருத்தி இருவரையும் குறிக்க ஒருவர் என்ற சொல் தமிழில் உண்டு. ஆரிய மொழியில் இல்லை.
படர்க்கை வினையில் ஆண், பெண், அஃறிணை ஒருமைகளைக் குறிக்கத் தமிழில் தனி விகுதிகள் உள; ஆரிய மொழியில் இல்லை. தமிழில் வேற்றுமை உருபுகள் தொக்கு வருதல் போன்று ஆரிய மொழியில் இல்லை.
தமிழில் சொற்கள் சேருங்கால் உயிர் முன் உயிர் வந்தால் உடம்படுமெய் தோன்றும். ஆரிய மொழியில் அவ்வாறு தோன்றுதல் அரிதே.
தமிழ்க் குடும்ப மொழிகட்கும் இந்தோஐரோப்பியக் குடும்ப மொழிகட்கும் இத்துணை வேறுபாடுகள் இருந்த போதினும் இவையிடையே சில ஒற்றுமைக் கூறுபாடுகளும் உள.
தமிழில் இரண்டு உயிர்களை உடம்படுத்த னகரம் அல்லது நகரம் வருதலுண்டு. கிரேக்க மொழியிலும் இம்மெய்கள் உயிர்களை உடம்படுத்த வருகின்றன.
அஃறினை ஒருமையைக் குறிப்பதற்கு இருமொழிகளிலும் த் பயன்படுகிறது.
தமிழ் மொழியினும் இலத்தீன் மொழியிலும் அ பலவின் பாலைக் குறிக்க வருகின்றது.
தமிழ்மொழியிலும் பர்சியன் மொழிகளிலும் த் இறந்த காலத்தைச் சுட்ட வருகின்றது. பகுதியை இரட்டிப்பதால் இறந்த காலத்தை அறிவித்தல் இருவகை மொழிகளிலும் உண்டு. வேர்ச் சொற்களின் உயிரை நீட்டினால் அவை வினைப்பெயராம்.
பல வேர்ச் சொற்கள் இருவகை மொழிகளிலும் ஒத்துள்ளன.
இவ்வொற்றுமைகளால் இருவகை மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தன என்று கூறுதல் பொருந்தாது.
தமிழ்க் குடும்ப மொழிகட்கும் சித்தியன் குடும்ப மொழிகட்கும் இடையே ஒற்றுமைகள் சில உள.
இருவகை மொழிகளும் ஒட்டறி மொழிகள். இரு வகையிலும் ட வருக்கம் உள்ளது. இரு வகையிலுள்ளும் வல்லின மெல்லின மாறுதல் காணப்படும். இருவகை மொழிகளிலும் முதல் வேற்றுமை நீ ஏனைய வேற்றுமைகளில் நின் என்று மாறுவதுண்டு.
பெயரெச்சம் இரு வகையிலும் வழங்குகின்றது. நான்காம் வேற்றுமை உருபு இருவகை மொழிகளிலும் க் மெய்யோடு தோன்றுகின்றது.
இவ்வொற்றுமைகளை அடிப்படையினவாகக் கொண்டு தமிழ்க் குடும்ப மொழிகளைச் சித்தியன் குடும்பத்தின என்று அறிஞர் கால்டுவல் அவர்கள் வரையறை செய்துள்ளனர்.
தமிழ்க் குடும்ப மொழிகளைத் தனிக் குடும்பமாகக் கொண்டு மதிப்பிடுதல்தான் சாலப் பொருந்தும். தமிழ்க் குடும்ப மொழிகள் பரதகண்டத்துக்கப்பால் இன்று வழங்கிடக் காணாமையால் இவற்றுக்குப் பெருமதிப்புக் கொடுத்துத் தனிக் குடும்பமாக வழங்குதல் சாலாது என்று மொழி நூலாராய்ச்சியாளர் கருதிவிட்டனர் போலும்.
உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன்மொழி யாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலை நாட்ட இயலும். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நிலநூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக்கூற்று வலுப்பெற்று நிலைநாட்டப்படு மேல், தமிழே உலக மொழிகளின் தாய் என்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்படும். தமிழே சிதைந்து ஒன்று பலவாய் வேறுபட்டனவாய் இன்று காணப்பட்டாலும் தமிழின் இயல்புகள் ஆங்காங்குள்ள மொழிகளில் வெளிப்படுகின்றன. யானை கண்ட குருடர்கள் போன்று இன்று மொழிநூலறிஞர்கள் தமிழையும் அதன் கிளை மொழிகளையும் பல்வேறு குடும்பங்கட்கு உரிமையாக்கி உரைத்து மகிழ்கின்றனர். உண்மை நிலை வெளிப்படுவதாக.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply