இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
துளு: திருந்திய தமிழ்க் குடும்ப மொழிகளுள் துளுவும் ஒன்று. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்தில், கவின் மலையாளமும் துளுவும் என இடம்பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது. குடகு என்னும் மொழியை ஒத்துக் கன்னடத்தினின்றும் சிறிதும், மலையாளத்தினின்றும் பெரிதும் வேறுபட்டுள்ளது. தமிழ்ச்சொற்கள் பலவற்றை அப்படியே கொண்டிருப்பினும் பல சொற்களை உருமாற்றியே வழங்குகின்றது. இதற்குத் தனி எழுத்தோ பழைய இலக்கியச் சிறப்போ இல்லை. கிருத்துவத் தொண்டர் குழாம் கன்னட எழுத்திலும் துளுவப் பார்ப்பனர் மலையாள எழுத்திலும் இம் மொழியை எழுதி வருகின்றனர்.
கொடுந்தமிழாக இருந்து தமிழிலிருந்து பிரிந்துபோன காலம் பதினாறாம் நூற்றாண்டு என்பர். துளுவ வேளாளர் எனத் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் துளுவ நாட்டிலிருந்து வந்து இங்குக் குடியேறியவர் என்பர். அவர்கள் மொழி என்றுமே தமிழாயிருந்ததினால் துளுவ மொழி யென்பதும் தமிழே என்று அறியற்பாலது.
குடகு: இதனைக் கூர்க்கு என்றும் அழைப்பர். திருந்திய திராவிட மொழிகளின் வரிசையில் ஈற்றில் நிற்பது. குடகு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மேற்கு என்று பொருள். தமிழ் வழங்கும் பகுதியோர் தமக்கு மேற்கில் உள்ள இடத்தைக் குடகு என்று அழைத்தனர். பின்னர் அப் பகுதியில் வழங்கும் மொழிக்கும் பெயராய்விட்டது. மலைப் பகுதியிடத்தில் உள்ள பழந்தமிழ் மக்கள், முதன்மைத் தமிழ்நாட்டோடு கூட்டுறவு கொண்டு அடிக்கடி பழகும் வாய்ப்பினைப் பெறாத காரணத்தால், இப் பகுதியில் வழங்கிய மொழி நாளடைவில் தமிழுடன் வேறுபடும் நிலையை அடைந்துவிட்டது.
இம் மொழியில் அஃறிணைப் பெயர்கட்குப் பன்மை இல்லை. பேச்சு வழக்குத் தமிழில் வரும் அஃறிணைப் பெயர்களைப் பன்மைப் படுத்துவதில்லை. பேச்சு வழக்குத் தமிழே குடகு மொழி என்பது பொருந்தும்.
அஃறிணை ஒருமை உருபேற்கும் முறை:
வேற்றுமை தமிழ் குடகு
எழுவாய் மரம் மர
செயப்படுபொருள் மரத்தை மரத்தன
கருவி மரத்தால் மரதிஞ்சி
கொடை மரத்திற்கு மரக்க்
உடைமை மரத்தினது மரத்ர
இடம் மரத்தில் மரத்ல்
இனிக் கருத இருப்பன திருத்தம் பெறாதன என அழைக்கப் படுவன. தமக்கென எழுத்துருவம் பெறாதன. எழுத்துருவம் பெறாத மொழிகள் அடிக்கடி மாறும் இயல்பின. ஆதலின் தாய்த் தமிழோடு பெரிதும் வேறுபடுவன. இம் மொழிக்குரியோர் முதன்மை நிலத்தில் வாழும் தமிழர் கூட்டுறவை இழந்து, மலைகளிலும் காடுகளிலும் ஒதுங்கி வாழ்ந்துவிட்டனர்; கல்வியறிவைப் பெற்றிலர். ஆகவே எழுதும் நெறியை அறிந்திலர். இவர்களுடைய பேச்சு வழக்கு மொழி நாளடைவில் பல பெயர்களைப் பெற்றுவிட்டன.
துதம்: தொத அல்லது துத என்றும் அழைக்கப்படும். நீலமலையில் வாழும் தோதவப் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழியாகும். நாகரிக வளர்ச்சி பெறாமல் வாழ்வதால் அவர்களைத் தமிழினத்தார் அல்லர் எனத் தள்ளிவிடுதல் சாலாது. தொதம் என்ற பெயர் தொகுதி என்னும் தமிழ்ச் சொல்லினின்றும் தோன்றியது எனப் போப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் தொகை எப்பொழுதும் ஆயிரத்துக்குமேல் போகவில்லை என்று அறிஞர் கால்டுவல் குறிப்பிட்டுள்ளார்.
கோதம் : இம் மொழியும் நீலமலையில் வாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் மொழியே யாகும். ஆயிரத்திருநூறு மக்களைக்கொண்ட அடிமைத் தொழிலாளர் எனப்படும் இனத்தவர் வழங்கும் மொழி என்பர் அறிஞர் கால்டுவல். இதுவும் தமிழின் சிதைவு மொழி என்பதில் ஐயமின்று.
கோண்டு : முன்பு கோண்டுவனம் என்று அழைக்கப்பெற்ற மலையும் காடும் மண்டிக்கிடக்கும் நடு இந்தியாவில் வாழும் பழங்குடி மக்கள் மொழியே கோண்டு. இம் மொழியைப் பேசுவோர் தொகை பல்லாண்டுகளுக்கு முன்னர் பதினைந்து நூறாயிரம் என்பர். குன்று என்னும் சொல்லே கோண்டு என உருமாறி இருக்கிறது என்பர்.
கூ அல்லது கோந்த் : கோந்தர் என அழைக்கப்படும் மக்கள் மொழியே கூ. ஒரிசாவின் மலைநாட்டில் வாழும் மக்கள் மொழி. குன்று என்ற சொல்லிலிருந்தே கோந்த் என்ற சொல்லும் தோன்றியுள்ளது. அயலவரால் கந்தர் என அழைக்கப்படுகின்றனர். தம் மொழியைக் கூ என்று அழைத்துக் கொள்கின்றனர்.
இராச்மகால் அல்லது மாலர்: வங்காளத்தில் உள்ள இராச்மகால் மலையின் பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும் இது. மொழிநூல் வல்லுநர் பலரின் ஆராய்ச்சிகள் இம் மொழி திராவிட அடித்தளத்தைப் பெற்றுள்ளது என்ற முடிவை அளிக்கின்றன என்பர் அறிஞர் கால்டுவல்.
ஒரயான்: இது சூடிய நாகபுரியிலும் அதை யடுத்துள்ள நாடுகளிலும் வாழும் ஒரயார்(ஒராவோர்) பேசும் மொழி. பழக்க வழங்கங்களால் கொண்கணத்தவரோடு தொடர்பு உடையவராய்க் காணப்படுகின்றனர். மாலர் மொழியோடும் தொடர்புடையது. மாலர்களும் ஒராவோர்களும் தொடக்கத்தில் ஓரினத்தவராய் இருந்திருத்தல் வேண்டும்.
இம் மொழிகள்பற்றி அறிஞர் கால்டுவல் கூறுவது இவையும் பழந்தமிழின் புதல்விகளே என்று நிலைநாட்டுகின்றது. அவர் கூறுவதாவது1:
துதம், கோதம், கோண்ட், கூ ஆகிய மொழிகள் நாகரிகம் நிலைபெறாத முரட்டு மொழிகளே எனினும் தமிழ், தெலுங்கு,
++
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பக்கங்கள் 52, 53
++
கன்னட மொழிகளைப் போலவே அவையும் உண்மையான திராவிட மொழிகளாகவே மதிக்கப் பெறும். ஆனால் பெரும்பாலும் கொலேரியன் இனத்தைச் சேர்ந்தவை என்று கருதத்தக்க வேறு மொழியினத்தின் வேர்ச்சொற்களையும் சொல்லுருவங்களையும் மிக மிக அதிகமாகக் கொண்டிருக்கும் இராச்மகால், ஒரயான் மொழிகளும் திராவிட இனத்தைச் சேர்ந்தனவே என்று கூறத் தயங்குகின்றேன் என்றாலும் அவை பெற்றிருக்கும் திராவிட மூலங்களும், இடப்பெயர்களும், எண்ணுப் பெயர்களும் இன்றியமையாச் சிறப்புடையனவாய் விளங்குதலிலிருந்து இம் மொழிகள் தொடக்கத்தில் திராவிட இனத்தைச் சேர்ந்தனவே என்பது பெறப்படுமாதலின் அம் மொழிகளைத் திராவிட முதன்மொழி வரிசையில் இடம் பெறுவனவாகவே துணிந்து மேற் கொண்டேன். கோல் இனமொழிகளையும் ஒன்று படுத்தும் இடைமொழியாக ஒரயான் மொழியையும், தமிழையும் ஒன்றுபடுத்தும் இடைமொழியாக மாலர் மொழியையும் கொள்வர் சில மொழிநூலாசிரியர். திராவிட இனத்தவரின் இன்றைய வாழிடத்திற்கு ஒரயார்களைக் காட்டிலும் இராச்மகால் மலைவாசிகளாகிய மாலர்கள் நனிமிகச் சேய்மைக்கண் வாழ்தலால், அம் மாலர் மொழி ஒரயார் மொழியைக் காட்டிலும் திராவிடத் தன்மையில் குறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும் வழங்கும் பழங்குடி மொழிகள் இரண்டில் தெளிவான திராவிடத் தன்மைவாய்ந்த மூலங்கள் இடம்பெற்றிருப்பது இவ்வாறு உறுதி செய்யப்படவே, திராவிட இனத்தவர், கங்கைக் கரைவரை இல்லை என்றாலும் வங்காளத்தின் எல்லைபோலும் வடதிசை நாடு வரையும் வாழ்ந்திருந்தமையைக் காணலாம். இதனால் திராவிட இனம் ஒரு காலத்தில் இந்தியப் பெருநிலப் பரப்பில் பரவி வாழ்ந்திருந்தது என்ற கொள்கையும் நிலைநாட்டப் பெற்றதாம்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply