இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’ – 38
9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி
இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்றம் தரும் நோக்கோடு உட்பிணைப்பு மொழியே உயர் நாகரிகத்தைக் காட்டும் என்று கூறியதை அறிஞர் உலகம் ஏற்காது.
தமிழ்மொழி ஒட்டுநிலைக்குரியதாகக் காணப்படுவதால் தமிழர் நாகரிகத்தால் தாழ்ந்தவர் என்று கூறிவிடுதல் பொருந்தாது. தமிழில் ஒட்டுநிலையும் உள்ளது; உட்பிணைப்பு நிலையும் உள்ளது. தெளிவான முறையில் பொருளை விளக்கவும் சொற்களை உருவாக்கவும் துணைபுரிவது ஒட்டுநிலையேயாகும். தெளிவுக்கும் எளிமைக்கும் இனிமைக்கும் இருப்பிடமாய் உள்ள பழந்தமிழின் சொல்லமைப்புகளை இனி ஆராய்வோம்.
நகை, பகை, விருந்து, விருப்பு, வரவு, முடவு, நிலவு, பனுவல், உரை, சுனை, மறத்தல், பிரிதல், சாதல், உறை, நிறை, பிணையல், பூசல் என்பனவெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட பெயர்ச் சொற்களாகும். எல்லாம் ஓரசை அல்லது ஈரசைச் சொற்களாவே யுள்ளன.
பூண்க, காண்கும், மொழியலன், வாரார், ஆரார், உள்ளாள், அஞ்சாது, உயிர்க்கும், இரங்கேன், இலர், என்பனவெல்லாம் வினைச்சொற்கள்.
மாண், கொய், அயர், வாழ், முதிர், ஆடும், மலரும், மூது, கெடு, திருந்து, முழங்கு என்பன அடைமொழிகளாக வந்துள்ள சொற்கள்.
திராவிட மொழிச் சொற்கள், ஆசிய அல்லது ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்த மொழிச் சொற்கள் எல்லாவற்றைக் காட்டிலும் நீளமுடையன என்னும் கூற்றுப் பழந்தமிழ் மொழிக்குப் பொருந்தாது. வேர்ச்சொல்லோடு ஐ, வு, அல், தல், அம் போன்ற விகுதிகள் சேர்ந்து பெயர்ச்சொல் வடிவம் பெற்றுள்ளன. நகு என்பதனுடன் ஐ சேர நகை என ஆகியுள்ளது. இதனடியில் வினைச் சொற்கள் தோன்றுங்கால் நகைப்பான், நகைத்தான், நகைக்கின்றான் என்று பிற்காலத்தில் உருவெடுத்தன. பழந்தமிழில் நகு என்பதே நக்கான் என இறந்த கால வினையாகவும், நகும் என நிகழ்கால எதிர்கால வினையாகவும் உருவெடுத்துள்ளது.
பழந்தமிழ் பற்றி அறிவதற்கு நமக்குத் துணையாய் உள்ளன பாடல்களே. பாடல்களில் சுருங்கச் சொல்லும் முறையையே பின்பற்றியிருப்பர். ஆதலின் பாடலில் பயின்றுள்ள சொற்களைக் கொண்டு மட்டும் பழந்தமிழ் நிலை முழுவதும் அறிய இயலாது என்று கூறலாம். பழந்தமிழ்ச் சொற்களையே இன்றும் பயன்படுத்தி வருகின்றோம். இன்றுள்ள பேச்சு வழக்கிலும் பெரும்பாலான சொற்கள் ஈரசைகள் கொண்டுள்ளனவாகவே யுள்ளன. தமிழ்ச்சொற்கள் சுருங்கியும் விரிந்தும் பொருள் உணர்த்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன. ஆடு அரங்கு என்பது பழந்தமிழ் வழக்கு; இன்றும் அப்படியே கூறலாம். கூறுவோரும் கேட்போரும் புலமை மிக்கோராய் இருத்தல் வேண்டும். ஆடுகின்ற அரங்கு என்பன விரித்துக் கூறும் நிலையில் உள்ளவை. சுடுசோறு என்பது இன்றும் வழக்கில் உள்ளதே. வினை, பகுதியளவில் நின்று பெயருக்கு அடையாய்ப் பொருந்தி அதன் இயல்பை உணர்த்தும். இவ்வாறு வருவதை வினைத்தொகை என்பர் இலக்கண நூலார்.
வேர்ச்சொற்களை ஆராயின் பெரும்பாலன வினையடிகளாகவே உள்ளமை தெளியலாம். அவ் வினையடிகள் முன்னிலை ஏவலாகவும், பெயர் அடையாகவும், வினைச் சொல்லின் அடியாகவும், முதனிலைத் தொழிற்பெயராகவும், விகுதிகள் இணைந்த பின்னர்ப் பெயர்ச்சொல்லாகவும் உருப்பெறும்.
காய் என்ற வேர்ச்சொல் நீ வெறு, சூடாகு, சூடாக்கு என்ற பொருளைத் தரும் முன்னிலை ஏவலாக வரும். அச் சொல்லே பெயர்ச்சொல்லாக நின்று, ஒன்றின் காய் (மாங்காய்) என்ற பொருளிலும் வரும். காய்கொம்பு என்றால் காய்ந்த, காய்கின்ற, காயும் கொம்பு என்று பொருள் தரும். காய்க்கொம்பு என்றால் காய்த்திருக்கும் கொம்பு என்று பொருள் தரும். காய்ந்தது, காய்த்தது என்ற சொற்களில் பகுதியாகவும் வந்துள்ளது. இனி காய்தல், காய்ச்சல், காயல் என விகுதிகள் பெற்ற பெயர்களாகவும் வரும். இவ்வாறு ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தனர் போலும். அதன் இயல்பைப்பற்றிக் கூறுங்கால் பெயரினும் வினையினும் மெய் தடுமாறி வரும் என்று கூறியிருப்பது உண்மை நிலையை அறிவிக்கும் பொருட் செறிவு மிக்கக் கூற்றாகும் அன்றோ.
சில வேர்ச்சொற்கள் உயிர்க்குறிலை இறுதியில் பெற்றிருப்பின் அவ்வுயிர் நீண்டு அளபெடுத்துப் பெயராகிவிடும் இயல்பின. ஆடு, மகடு, என்பன ஆடூஉ, மகடூஉ எனவாகி ஆண், பெண் எனும் பொருள் தந்து நிற்கின்றன.
சில வேர்ச்சொற்கள் அளபெடுத்து வினையெச்சங்களாகி நிற்கின்றன; மறைஇ, கொளீஇ, தழீஇ. இவை முறையே மறைத்து, கொளுவி, தழுவி என்னும் பொருள் தரும். பிற்காலத்தில் விளக்கந்தரும் வகையில், மறைத்து, கொளுவி, தழுவி எனும் சொற்களைப் பயன்படுத்தி அவற்றை மறக்கத் தொடங்கிவிட்டனர்.
வேர்களாக நின்று பலவகையிலும் பயன்பட்ட மூலங்கள் சொல்லாக்க விகுதிகளைப் பெற்று அவ் விகுதிகளோடு இணைந்து சொல்வடிவம் பெற்ற பின்னர் அச் சொற்களாகவே என்றும் நிலைத்துவிட்டன. நினை என்னும் வேர் முன்னிலை ஏவலாகவோ, நினைஇ என எச்சமாகவோ, நினை நாள் என வினைத்தொகையாகவோ, நினைத்த, நினைக்கும், நினைப்ப எனச் சொற்களில் பகுதியாகவோ வரும். ஆனால் நினைதல் எனத் தல் விகுதி பெற்ற பின்னர்த் தொழிற்பெயராகவே நின்று விடுகின்றது. நினைதல் நினைதலாகவே நிற்பினும் நினை இன்னும் முன்னிலை ஏவலாகவும், வினைத்தொகையாக நின்று பெயர் அடையாகவும் பயன்படுகின்றது. பல வேர்ச்சொற்கள் அவ்வாறு பயன்படுவதில்லை. வரவு, முடவு, சுறா, முதலை, கணம், விருந்து, புரவி, குவளை, சோலை, வரை, விழவு போன்றனவெல்லாம் வேர்ச்சொற்களோடு விகுதிகள் பெற்ற பெயர்ச்சொற்களே. பெயர்ச்சொல் தன்மை அடைந்த பின்னர் அவற்றின் பழைய நிலையும் அறிந்தோமிலை. உயர்வு பெற்ற சிலர் தம் பழைய நிலையை மறந்துவிடுதல் போன்று இவையும் மறந்துவிட்டன.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply