(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி)

பழந்தமிழ்’ – 40

பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

  சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை  அறிவிக்கும். குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும்.

       மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது.

       காண் என்பது கண் என்று ஆகியுள்ளது.

       கெடு என்பது கேடு என்றும், உண் என்பது      ஊண் என்றும் வந்துள்ளமை காண்க.

               தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்குங்கால் மூல உயிர் வேறுபடும்.

  யான், என் என்றும் யாம், எம் என்றும், நீ, நின் என்றும், நீயிர், உம் என்றும் குறுகி வேற்றுமை உருபுகளை ஏற்கும். இவ்வாறு உயிர் குறுகுவதனால் சொல்லுவதில் ஆற்றலும் அழுத்தமும் பொருந்துகின்றன.

       யானுகு என்பதைவிட எனக்கு என்பதும்

       யாமுகு என்பதைவிட எமக்கு என்பதும்

       நீக்கு என்பதைவிட நினக்கு என்பதும்

       நீயிருக்கு என்பதைவிட நுமக்கு என்பதும்

ஆற்றலும் அழுத்தமும் பெற்று விளங்குகின்றன அன்றோ!

  வேர்ச் சொல்லிலிருந்து பண்பையும் தொழிலையும் உணர்த்தும் சொற்கள் தோன்றி அடைகளாக வருங்காலத்தில் மீண்டும் வேர்ச்சொல் தன்மையை அடைந்து அடைகளாக நிற்கின்றன. இம் முறையால் எளிமையும், சுருக்கமும், இனிமையும் பெருகும்.

       வளைவாய்ச் சிறுகிளி விளைதினை கடீஇயர்

       செல்கஎன் றோளே அன்னை யெனநீ

       சொல்லின் எவனோ தோழி! கொல்லை

       நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த

       குறுங்கை இரும்புலிக் கொலைவல் ஏற்றை

       பைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும்

       ஆர்இருள் நடுநாள் வருதி

       சாரல் நாட வாரலோ எனவே1

  இப்பாடலுள் வந்துள்ள வளை, சிறு, வினை, நெடு, வன், கடு, குறு, இரு, வல், பைம், செம், படு, ஆர், நடு என்பன வேர்ச்சொல்லளவே நின்று பொருட்சிறப்பைத் தந்துள்ளன.

++

1 இப் பாடல் மதுரைப; பெருங்கொல்லன் என்பவரால் பாடப்பட்டதாகும்.    

    குறுந்தொகை 141.

++

  இவ்வாறு வருவன பண்புத்தொகை என்றும், வினைத்தொகை என்றும் அழைக்கப்பெறும். பண்பை விளக்கும் சொல்லுருபு மறைந்து நிற்பது பண்புத்தொகை என்றும், காலம் காட்டும் இடைநிலை முதலியன மறைந்து நிற்பது வினைத்தொகை என்றும் சொல்லப்பெறும்.

  இப் பாடலுள் பயின்றுள்ள வளை, வினை, படு முதலியன வினைத்தொகைகளாம். ஏனைய சிறு, நெடு, வன், கடு, குறு, இரு, பைம், செம், ஆர், நடு முதலியன பண்பை அறிவிப்பனவாம்.

 இவ்வாறு சொற் சுருங்க உரைப்பதனால் இனிமையும் அழகும் பெருகுவதனால் வேற்றுமை உருபு, உவம உருபு, உம்மை இடைச்சொல் முதலியன மறைந்து நிற்கச் சொற்றொகைகளை உருவாக்கும் சிறப்பும் பழந்தமிழுக்குண்டு.

  பொன்னாற் செய்யப்பட்ட குடத்தைப் பொற்குடம் என்றாலும், பொன் போன்ற மேனியைப் பொன்மேனி என்றாலும், தூணியும் பதக்கும் என்பதைத் தூணிப் பதக்கு என்றாலும் யார்தாம் அறியார்.

 வெள்ளையாடையை உடுத்த பெண்ணை வெள்ளாட்டி என்றும், பொன்னால் செய்யப்பட்ட தொடியை அணிந்தவளைப் பொற்றொடி என்றும் அழைத்தல் தமிழில் தொன்றுதொட்டு வரும் மரபாகும். இவ்வாறு சுருக்கிச் சொல்லப்படும் தொடர் அன்மொழித்தொகை எனப் பெயர் பெறும்.

  இக்காலத்தில் வினா, வியப்பு முதலியவற்றைக் குறிப்பதற்கு

? ! ஆய குறியீடுகளைப் பெற்றுள்ளோம். இம் முறை ஆங்கில மொழியின் உறவால் நமக்குக் கிடைத்துள்ளதாகும். கருத்துகளை வெளிப்படுத்துங்கால் இவை இரண்டுதானா உள? கழிவு, ஆக்கம், ஒழிஇசை, விழைவு, காலம், அச்சம், பயனின்மை, பெருமை, எச்சம், சிறப்பு, ஐயம், எதிர்மறை, முற்று, எண், தெரிநிலை, பிரிநிலை, வினா, தேற்றம், முதலியனவற்றையும் உணர்த்துவதற்கு அடிச் சொற்களையே சொற்றொடரில் நிறுத்தி வந்துள்ள முறைமை பழந்தமிழில் காணலாம். இவ்வாறு பயன்படுத்தப்படுபவன வற்றை இடைச்சொல் வரிசையில் சேர்த்துச் சிறப்புடையன வற்றைத் தொல்காப்பியர் தொகுத்துக் கொடுத்துள்ளமையை முந்திய இயலில் சுட்டிக்காட்டியுள்ளோம். பொருள்களின் இயல்புகள் நிலைமைகட்கு ஏற்பப் பெயரிடும் முறையும் பழந்தமிழில் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆண், பெண் எனும் இரு சொற்களை எடுத்துக்கொள்வோம். ஆண்மைக்குரியவனை ஆண் என்றும், விரும்பும் அழகுக்குரியவளை பெண் என்றும் பெயரிட்டுள்ளமை எவ்வளவு பொருத்தமானது. இல்லற வாழ்வில் கணவனே தலைவன் என்றாலும், மனைவியும் தலைவி தான் என்று  கருதி தலைவனுக்குரியவள் தலைவி என்று பெயரிடப்பட்டுள்ளார். தலைவனுக்குரியவள் அடிமை என்று கருதப்படவில்லை. இல்லறம் நடத்தும் வீட்டுக்கு உரியவர்கள் இருவரும் என்றாலும், மனைவிக்குத்தான் மிகுந்த பொறுப்பு என்பதனை உணர்த்த அவளை மனைவி (மனை+வி=மனைக் குரியவள்) என்றனர். கணவனை மனைவன் என்று அழைத்திலர். கிழவன், கிழத்தி என்ற சொற்களை நோக்குவோம். கிழவன் என்றால் உரியவன் என்று பொருள். யாருக்கு உரியவன்? அவளுக்கே உரியவன். பிற பெண்களுக்கல்லன். கிழத்தி என்றாள் உரியவள். யாருக்கு? அவனுக்கே உரியவள். பிற ஆடவர்க்கு உரியவள் அல்லள்.

  ஆடவர்களின் பல பருவநிலைகளைக் குறிக்கவும் பெண்களின் பல பருவநிலைகளைக் குறிக்கவும் தனித்தனிச் சொற்கள் உள.

  தமிழில் வழங்கும் அம்மை, அப்பன் என்ற சொற்கள் உலகில் உள்ள மொழிகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டும் அகரத்தை முதலாக உடையன. தாயின் மென்மை அழகுக் கேற்ப மெல்லெழுத்துச் சேர்ந்தும், தந்தையின் வன்மைப் பற்றுகட்கு ஏற்ப வல்லெழுத்துச் சேர்ந்தும் உருவாகியுள்ளமை தனிச்சிறப்பாகும்.

  இவ்வாறு தமிழில் சொற்கள் உருவாகி கருத்து அறிவிக்கும் கருவிகளாகப் பயன்பட்டு வருகின்ற இயல்பினைப் பழந்தமிழ் மொழியின் தொடக்க காலத்திலிருந்தே பெற்று வந்துள்ளோம். பழந்தமிழ் சொல்லமைப்பு முறையைப் பாரில் எம்மொழியும் பெற்றிடக் கண்டிலோம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே   பாரதியார்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்