(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 41 : பழந்தமிழும் தமிழரும்.1 தொடர்ச்சி)

பழந்தமிழும் தமிழரும் 2 

தமிழ்மொழி, முண்டா திராவிடம் ஆரியம் என்னும் மூன்றினாலும் உருவாயது என்று வையாபுரிப்பிள்ளை கூறுகின்றார். (It is clear that the Tamil Language is a Composite texture of three elements, viz, the Munda, the Dravidian and Aryan, the Dravidian elements predominating. History of Tamil language and literature-Page 5) வையாபுரியார் கருத்துப்படி, தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பது போலும். தமிழையும் தமிழைச் சார்ந்த மொழிகளையும் திராவிடம் என்று அழைத்தலை அவர் மறந்துவிட்டார் போலும்..

ஒராயன் (orayon) என்ற மொழி திராவிடக்குழு மொழிகளுள் திருத்தம் பெறாதனவற்றுள் ஒன்று, என்று அறிஞர் காலுடுவெல் நிலைநாட்டி இருப்பதை அறியாது, அதனை முண்டாமொழி என்று அழைக்கின்றனர். அழைத்ததோடு அமையாது மனிதன் என்ற பொருள் தரும் ஆள் என்ற சொல் முண்டா மொழியாம் ஒராயனைச் சேர்ந்தது என்று உரைக்கின்றார். ஆள் என்ற தமிழ்ச்சொல் திராவிட (தமிழ்) மொழிகளுள் ஒன்றான ஒராயனில் காணப்படுவதில் வியப்பென்ன?

  திராவிடமும் ஆரியமும் கலந்தது தமிழ் என்பது ஆரியம் வருவதற்கு முன்னர் இருந்த தமிழின் நிலை அறிவதால் பொருளற்ற கூற்று என்று தள்ளற்பாலதாகும். வையாபுரியார் கற்றறிந்த அறிஞர் போல் காணப்படினும் இவ்வாறு பொய்யொடுபட்ட புனைந்துரைகளைப் புகன்று வாழ்ந்தது ஏனோ?

            நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

            உண்மை அறிவே மிகும் (குறள். 373)

 என்ற வள்ளுவர் வாய்மொழியை மெய்ப்பித்து விட்டார்.

  மொழிநூல் ஆராய்ச்சியாளரில் சிலரும் வரலாற்று ஆராய்ச்சியாளரில் சிலரும், திராவிடர்கள் வெளி நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறினர் என்றும் அவர்கட்கு முன்னர் இங்கு வாழ்ந்த முண்டர்கள் அல்லது கொலேரியர்களை வென்றனர் என்றும் கூறுவது மரபாகிவிட்டது.

திராவிடர்கள் (தமிழர்கள்) இந்நாட்டில் தோன்றியவர்களே என்பதும் இங்கிருந்துதான் வெளி நாடுகட்குச் சென்றனர் என்பதும் இன்றைய ஆராய்ச்சியால் புலப்படும் உண்மையாகும்.

  வரலாற்றுப் பேரறிஞர்கள் முனைவர் ஆரோக்கியசாமி, வி.ஆர். தீட்சதர் முதலியோர் இவ்வாறு கூறுகின்றனர். 1

  காலப் போக்கில் நாகரிகமுடையராயும், நாகரிக மற்றவராயும் வாழ்ந்த ஓரின மக்களை வெவ்வேறு இனத்தவர் என்று கருதிவிட்டனர் போலும். பழங்குடி மக்களாம் திராவிடர்களில் நாகரிமடையாதிருந்தாரைத் திராவிடர்களினின்றும் வேறுபட்டவராகக் கருதி அவர்களை முண்டர்கள் என்றும். கொலேரியர்கள் என்றும், துரானியர்கள் என்றும் சிலர் அழைத்துவிட்டனர்.

           +++

1          நாமிருக்கும் நாடு    Pre Historic South India

       +++

  தமிழ்மொழியும் இலக்கியமும் அறிவிக்கும் உண்மை, திராவிடர்களுடன் முதல் முதல் கூட்டுறவு கொண்ட வேற்றவர் ஆரியர்தாம் என்பதே. ஆரிய மொழிச் சொற்கள்தாம் தமிழில் கலந்தனவேயன்றி, வேறு மொழியினர் சொற்கள் தமிழில் கலந்ததாகத் தெரியவே இல்லை. அன்றியும் அப்படியொரு அயலவர் கூட்டம் இந் நாட்டில் வாழ்ந்திருக்கு மேல் அவர்கள் இந்நாட்டு மரங்கட்கும், செடிகட்கும், மலைகட்கும், ஆறுகட்கும், விலங்குகட்கும், பறவைகட்கும் இட்டு வழங்கிய பெயர்கள் தமிழில் கலந்திருக்க வேண்டுமே, அவ்வாறு கலந்திருப்பதாகக் காணப்படவில்லையாதலால் பழந்தமிழர்கள் பண்டு வாழ்ந்தார்கள், அவர்களுடன் ஆரியர்கள் கலந்தார்கள். இக் கலப்பின் விளைவே இன்றுள்ள நிலைமை என்றுதான் முடிவு கட்ட வேணடும். ஆகவே ஆரியர் வருகைக்கு முன் இங்கு வழங்கிய மொழி தமிழே. அத் தமிழில் உயர்ந்த இலக்கியங்கள் தோன்றியிருந்தன என்று கூறுதலே உண்மையொடுபட்ட வரலாற்றுச் செய்தியாகும்.

 உலகில் உள்ள பிறமொழிகள் எல்லாம் தமக்குத் தாமே வளர்ச்சியடைந்தில. தமிழ் ஒன்றுதான் பிற மொழிகளின் கூட்டுறவின்றி வளர்ச்சியடைந்ததாகும். ஆரியர் வருமுன்னரும் தமிழ் உயர்வளர்ச்சி பெற்றிருந்து என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களால் அறிய முடிகின்றது.

  இந்தியா முழுவதும் பரவி வழங்கிய தமிழில், வடவேங்கடம் தென்குமரியாயிடைப்பட்ட நிலப்பரப்பில் தோன்றிய இலக்கியங்கள்தாமே கிடைத்துள்ளன. பிற பகுதிகளில் தோன்றிய இலக்கியங்கள் எங்கே? புலவர்கள் யாவர்? என்று வினவலாம். ஆம். ஆய்வுக்குரிய வினாதான். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த வட நாட்டுத் தமிழர்கள்பற்றி மறைந்த மாநகரங்களாம் ஆரப்பாவும் மொகஞ்சதாரோவும் அறிவிக்கின்றன. அவை அழிந்தன போல அங்குள்ள அனைத்தும் அழிந்துவிட்டன. பின்னர், ஆரியர் வருகை தொடங்கித்தான் வடநாட்டு வரலாறு கிடைக்கப் பெறுகின்றது. இரு சாரார்க்கும் நடந்த போர்களும் பிறவும் வட நூல்கள் அறிவிக்கின்றன. மொழிக் கலப்பு உண்டாகி தமிழ் மறைந்து வடநாட்டு மொழிகள் தோன்றிய செய்திகளும் புலனாகின்றன. தென்னகத்தில் தமிழரசுகள் நிலைத்திருந்து புலவர்களைப் போற்றினமையால், புலவர்களும் தமிழுக்கென வாழ்ந்தமையால், தமிழகத்தின் முதன்மைப் பகுதியாம் வடவேங்கடம் தென்குமரி யாயிடைப்பட்ட நிலப்பரப்பில் தோன்றிய நூல்களில் சிலவேனும் கிடைத்துள்ளன. அவற்றுள் ஆரியர் வருகைக்கு முன்னர் இயற்றப்பட்டனவும் உள்ளன. அவற்றின் துணையால் பழந்தமிழர் நிலையைக் காண்போம்.

  இமயமலைபற்றியும் சோனையாற்றைப்பற்றியும் குறிப்பிடும் பகுதிகளால் தென்னகத் தமிழர் வடநாட்டைப்பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்று தெரியலாகும். தமிழகத்தின் வடபகுதிகளை மொழிபெயர்தேஎம் என்றும், வடக்கில்  உள்ள மலைகளை மொழி பெயர் மன்மலை என்றும் குறிப்பிடுகின்றமையால், ஆரியம் அங்கெல்லாம் பரவி பழந்தமிழ் வழக்கை அழித்துவிட்டது என்றும் அறியலாம்.

  தமிழகத்தில் சேரர் சோழர் பாண்டியர்கள் முறைவழி நின்று அரசு செலுத்தினர். அவர்கட்குரிய அடையாளப் பூக்கள் போந்தை வேம்பு ஆர் என்பனவாகும்.

            போந்தை வேம்பே ஆர்என வரூஉம்

            மாபெரும் தானையர் மலைந்த பூவும்

            (தொல்பொருள் 60)

என்னும் தொடர் இச் செய்தியைப் புலப்படுத்துகின்றது. முடியுடை வேந்தரன்றிக் குறுநில மன்னர்களும் வாழ்ந்துள்ளனர். அரசர்கள் ஆண்டாலும் ஊர்தோறும் அவை இருந்தன. வழக்குகளை நடுநின்று ஆராய்ந்து முறை வழங்குவதே அவ் வவைகளின் பெருங்கடனாகும். உறையூர் பெற்றிருந்த அவை உலகப் புகழ்பெற்றது.

            மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து

            அறங் கெட அறியா தாங்கு        (நற்றிணை400)

என்று ஆலங்குடி வங்கனார் புகழ்ந்துள்ளமை காண்க. அரசர் அரண்மனைகளிலும் இவ் வவையங்கள் இருந்துள்ளன. ஆயினும், அரசன் தலையீடு இருந்ததில்லை. இற்றை நாளில்தான் ஆளுநர் தொடர்பிலிருந்து வழக்கு மன்றங்கள் நீக்கப்பட்டுத் தனித்துச் செயலாற்றத் தொடங்கியுள்ளன என்று கருதற்க. பழந்தமிழ் நாட்டில் ஆளுநர் தொடர்பற்றே அறங்கூறு அவையங்கள் இருந்துள்ளன. அறங்கூறு அவையம், முறை வழங்கலில் தவறு கண்டால் அரசனிடம் முறையிடுவார்கள்.

  (தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்