(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி)

பழந்தமிழும் தமிழரும் 7

  ஆனால், இன்றைய நிலைமை என்ன? பிசிராந்தையார் கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்?

யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல்

யாங்கா கியர் என வினவுதி ராயின்?

ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்;

பூண்டநம் பண்பு போலிய தாகின்று

நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில்

பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்;

தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை;

ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும்

அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்;

தமிழைக் கற்றோர் தாழ்நிலை உறுவதால்

தமிழைப் பயிலத் தமிழரே வந்திலர்;

ஆட்சி மொழியும் அன்னை மொழிஎனச்

சொல்லள வாக்கினர்; தூத்தமிழ் வெறுக்கும்

அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்;

உயர்கல் விக்குறு ஊடக மொழியாய்த்

தமிழ்மொழி அமையத் தடுப்பவர் தமிழரே!

ஆங்கில மொழிக்கே அளிப்பதில் பாதியும்

தமிழ்மொழிக் களித்திலர் தமிழைப்        போற்றுவோர்;

அல்லவை பெருகவும் நல்லவை குறையவும்

மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிதான் இன்றே

என்றுதான் இரங்கிக் கூறவேண்டியுள்ளது. சான்றோர், மக்கள் நல்வாழ்வுக்குரிய நல்லுரைகள் அவ்வப்போது புகன்றதோடு அமையாமல் அரசனையும் இடித்துரைத்து நல்வழி நிற்கச் செய்தனர். பிசிராந்தையர் பாண்டியன் அறிவுடை நம்பியைக் கண்டு கூறும் அறிவுரையைக் கேண்மின்:

          காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே

          மாநிறைவு இல்லதும் பல்நாட் காகும்

          நூறுசெறுவாயினும் தமித்துப்புக்கு உணினே

          வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்

          அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

          கோடியாத்து நாடு பெரிது நந்தும்

              மெலியன் கிழவ னாகி வைகலும்

              வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு

              பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

              யானை புக்க புலம்போலத்

              தானும் உண்ணான் உலகமும் கெடுமே

          (புறம் 184)

  அரசு வரி வாங்கும் முறைபற்றிக் கூறும் இவ் வறிவுரை எக்காலத்துக்கும் பொருந்துவதன்றோ?

  அறிவு மிக்குள்ள அரசன், வரி பெறும் முறையை அறிந்து குடிகளிடமிருந்து வரி பெறல் வேண்டும். அவ்வாறு பெற்றால் கோடிக்கணக்காக வரியும் பெருகும். நாடும் எல்லாத் திட்டங்களிலும்  மிகவும்  வளர்ச்சியுறும்.  பிசிராந்தையார் வரியையே ஒழித்துவிடக் கூறவில்லை. வரியில்லாது அரசு எவ்வாறு நடைபெறும்? வரி விதிக்காத அரசும் உண்டோ? வரி விதிக்கும் அரசு நெறிமுறையறிந்து விதித்தல் வேண்டும். அதனால் உண்டாகும் நன்மையைச் சிறந்த உவமையால் விளக்குகின்றார். யானை விலங்குகளில் பெரியது. அது அசைந்துகொண்டே தின்னும். யானைக்குத் தீனி போடுவது என்பது அவ்வளவு எளியதொரு செயலன்று. வயலில் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து சேர்த்து வைத்துக் கொண்டு அளவு முறையால் யானைக்கு உணவாக இடின், ஒரு மா அளவு இல்லாத நிலத்தில் விளைந்தனவும் பல நாட்காகும். அங்ஙனமின்றி யானையையே அவிழ்த்துவிட்டுத் தானே உண்ணுமாறு செய்துவிட்டால் நூறு வயல்களாய் இருப்பினும் சில நாட்களுக்குக்கூடப் போதுமானதாயிராது. உண்ணுவதினும் அழிவது மிகுதியாய் இருக்கும். அதுபோன்று, அரசனும் விதிக்கும் வரியை ஒழுங்குபடுத்தித் தவணைகளாகப் பெற முயன்றால் மக்களும் கொடுப்பர். வரித்தொகையும் மிகும்.

  இவ்வாறு கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ்ப் புலவர் ஒருவர் அரசனுக்கு அறிவுரை கூறவேண்டுமென்றால் நாட்டின் சிறப்பு எவ்வளவு உயர்ந்திருக்க வேண்டும்.

  அக்காலத்து வாழ்ந்த கணியன் பூங்குன்றனாரின் மெய்யுரை இன்றும் என்றும் பொருந்துவதாய் உள்ளது.

          யாதும் ஊரே! யாவரும் கேளிர்;

          தீதும் நன்றும் பிறர்தர வாரா

          நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

          சாதலும் புதுவ தன்றே; வாழ்தல்

          இனிதென மகிழ்ந்தன்றும்  இலமே; முனிவின்

          இன்னாது என்றலும் இலமே; மின்னொடு

          வானந் தண்டுளி தலைஇ யானாது

          கல்பொருது இரங்கும் மல்லல்பேர் யாற்று

          நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

          முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

          காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியின்

          பெரியோரை வியத்தலும் இலமே;

          சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(புறம்  192)

  உலகப் பொதுமைபற்றி இன்று மேடை தோறும் முழங்கக் கேட்கின்றோம்; இக்கால நாகரிக உரையாய்விட்டது, அக்காலத்தில் எல்லா ஊர்களும் எனது ஊர் போன்றனவே; எங்குள்ளவர்களும் என் உறவினர்களே, என்று கூறுவது என்பது எவராலும் நினைக்க முடியாத ஒன்று.

  மொழி, மதம், எல்லை, நிறம், கொள்கை யாவும் கடந்த ஒரு நிலையன்றோ உலகப் பொதுமை என்பது. இவ் வுயர்ந்த கொள்கையாம் உலகப் பொதுமைக்கு வித்திட்டவர் நம் கணியன் பூங்குன்றன் அன்றோ? ஆனால் இவ்வுண்மை யாரறிவார்? தமிழர்கள் ஊமையராய் செவிடர்களாய் வாழ்கின்றார்களே. இன்று உலகப் பொது மன்றத்தில் இருக்க வேண்டியது கணியன் பூங்குன்றன் உருவமன்றோ?

          பெரியோரை வியத்தலும் இலமே

          சிறியோரை இகழ்தலும் இலமே

ஏன்? ஒருவர் பெரியோராவதும் சிறியோராவதும் தோன்றும் சூழ்நிலையால் அன்றோ? சூழ்நிலை ஒத்துவரின் எவரும் பெரியவராகலாம். இல்லையேல் குடத்துள் விளக்குத்தான். ஆகவே பெரியோர் என்று வியக்கவும் சிறியோர் என்று இகழவும் காரணம் இல்லையன்றோ?

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்