இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9 – தொடர்ச்சி)
பழந்தமிழும் தமிழரும் 10
களவொழுக்கத்தின்கண் மகளிருடன் விளையாட்டும் விழாவும் நீங்கிய வாழ்வு தலைவனுக்கு இல்லை என்பது இதன் பொருளாகும். பழந்தமிழில் மகளிர் விளையாட்டைக் குறித்த ஓரை என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் ஆடவர் மகளிர் எனும் இரு சாரார் விளையாட்டுக்குரிய பொதுச் சொல்லாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். மொழியியலில் சொற்பொருள் விரிதல் எனும் முறையாகும் இது.
இவ்வாறு விளையாட்டைக் குறித்துநின்ற ஓரை என்ற தூய தமிழ்ச்சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தீய இராசி என்று பொருள் கூறிவிட்டார். ஓரை என்ற சொல்லுக்குத் தீய இராசி என்ற பொருள் எங்ஙனம் கொண்டாரோ? ஓரை என்ற இத் தமிழ்ச்சொல் வடமொழியில் புகுந்து ஓரா, ஹோரா என்று மாறுதல் உற்று நாழிகையைத் குறித்தது போலும். வையாபுரியார் தமிழ்ச் சொல்லின் பொருளை நன்கு அறியமாட்டாது நச்சினார்க்கினியர் பொருளை நினைவிற்கொண்டு ஓரா என்ற கிரேக்க மொழிச் சொல் வடமொழி வழியாகத் தமிழுக்கு வந்தது என்று தவறுபட மொழிந்து கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டுக்குரியது தொல்காப்பியம் என்று நாட்டப் புகுந்து தம் அறியாமையை நாட்டிவிட்டார். (This accords well with the fact that its author used the word ‘orai’ (Sanskrit Hora) which is a Greek word borrowed in Sanskrit astrological works about third or fourth century A.D. -History of Tamil Language and Literature. Page.14).
உழவுத் தொழிலிலும் பிறவகைத் தொழில்களிலும் சிறப்புற்றிருந்த பழந்தமிழர் வாணிபத்திலும் சிறந்திருந்தனர். நாம் அறிந்துள்ள புலவர்களில் ஒருவர் பெயர் இளம்பொன் வாணிகன் என்று அறிகின்றோம். வாணிபத்தில் சிறப்புற்றோர்க்கு அளிக்கும் பட்டங்களுள் ஒன்றாகிய காவிதி எனும் பட்டம் பெற்ற புலவர்களும் உளர். கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனர், இளம் புலவர் காவிதி எனும் பெயர்களை நோக்குக.
உள்நாட்டு வாணிபமும் வெளிநாட்டு வாணிபமும் நடந்துள்ளன. வெளிநாட்டு வாணிபம் கடல் வழியாக நடந்துள்ளது. கடலைக் கடக்கும் கப்பல்களைப் பெற்றுள்ளர்.
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
என்று கூறுவதனால் பெருங் கப்பல்களைப் பெற்றிருந்தனர் என்று அறியலாம்.
கடலாழ் கலம் (குறுந்தொகை240) என்பதனால் ஆழ்ந்த கடலில் கப்பல் சென்றது என்றும் தெளியலாம். கப்பல் ஓட்டிக்கு மீகான் என்று பெயர் இருந்துள்ளது. பெரிய துறைமுகங்கள் இருந்துள்ளன.
கடல் வழியாகத் தொடர்பு கொண்ட வெளிநாடுகள் யாவை எனத் தெரியவில்லை. ஆனால், பொருள் ஈட்டுவதற்குக் கடல் கடந்து சென்றனர் என்பது மட்டும் உறுதி.
பண்டக மாற்று முறையே மிகுந்துள்ளது. என்றாலும் பொற்காசுகளும் வாணிபத்திற்குப் பயன்பட்டன. பொற்காசுகளைக் கம்பிகளில் கோத்து மகளிர் அணிந்துள்ளனர் (குறுந்தொகை67).
கடிதங்கள், கடிதங்களை முத்திரையிட்டு விடுத்தல், ஆவணங்கள்(Records), ஆவணக் களரிகள் முதலியனவும் இருந்துள்ளன. (அகம்.77).
கரும்பு ஆலைகள் இருந்துள்ளன. எந்திரம் என்ற சொல் Machine ஐக் குறித்துள்ளது. இயன்திறம் (இயங்கும் தன்மையது) என்பதுவே எந்திரம் என்று மாறியுள்ளது (புறம் 322.)
உலகத்தை ஞாலம் என்ற சொல்லால் அழைத்துள்ளனர். ஞாலம் என்றால் தொங்குவது என்று பொருள். உலகம் வானவெளியில் ஒரு பற்றின்றித் தொங்கிக் கொண்டிருக்கின்றது என்று அறிந்திருந்தனர் போலும்.
எல்லா வகையாலும் சிறந்திருந்த அவர்கள் கடவுளுணர்வு உடையவர்களாகவும் வாழ்ந்தார்கள். கடவுள் என்ற சொல்லே கடவுளைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கொள்கையை வெளிப்படுத்தும். கடவுள் என்பது கடந்தது என்னும் பொருள் தரும். யாவற்றையும் கடந்த ஓர் ஆற்றலே கடவுள் ஆகும். இவ் வுணர்வு மக்களுக்குத் தலைப்பட வேண்டுமென்றால் பல நூறு ஆண்டுகள் நாகரிக வாழ்வில் திளைத்தவர்களாய் இருத்தல் வேண்டும். உலகியலை நன்கு அறிந்த, பண்பட்ட மக்களாய் இருத்தல் வேண்டும். ஆதலின் கடவுள் எனும் இவ்வொரு சொல்லே பழந்தமிழரின் மெய்யுணர்வுக் கொள்கையை வெளிப்படுத்தும். பின்னர்க் கடவுளைத் திணைகள் தோறும் வெவ்வேறு பெயரிட்டு அழைத்துள்ளனர். குறிஞ்சி நிலத்தார் சேயோன் என்றும், முல்லை நிலத்தார் மாயோன் என்றும், மருத நிலத்தார் வேந்தன் என்றும், நெய்தல் நிலத்தார் வண்ணன் என்றும் அழைத்தனர். எல்லாப் பெயர்களும் ஒரே ஒப்பற்ற தனிப்பெரும் பொருளைக் குறித்தன. ஆனால், பிற்கால உரையாசிரியர்கள் வடமொழி நூல்களைக் கற்றிருந்ததன் பயனாய் இச் சொற்களுக்கு வெவ்வேறு பொருள் கூறித் தடுமாற்றம் உற்றனர். சேயோனைச் சுப்பிரமணியர் என்றும், மாயோனைத் திருமால் என்றும், வேந்தனை இந்திரன் என்றும், வண்ணனை வருணனாக்கி மழைக் கடவுள் என்றும் கூறியமை தவறுடைத்தாகும்.
போரில் இறந்தோர்க்கு நடுகல் இட்டு வழிபட்டனர். அவர்களுடைய பெயரும் பீடும் எழுதிவைத்தனர் (அகம் 131, ஐங்குறுநூறு352). பின்னர் அதனைத் தொழுது வணங்கி வேண்டினர் (புறம்306).
இவ்வாறு சிறக்க வாழ்ந்த பழந்தமிழர்கள் ஆரியர் வருகைக்கு முன்னர் நாகரிக வாழ்வுக்கு வேண்டிய இன்றியமையாச் சிறப்புகள் மட்டும் பெற்றிருந்தனர் என்று அறிஞர் கால்டுவல் கருதுவது போலன்றி உயர்ந்த நாகரிக வாழ்வையே பெற்றிருந்தனர் என்று கூறலாம். இன்று இந்திய நாகரிகம் என்று அழைக்கப்படுவதில் பெரும் பகுதி பழந்தமிழர் நாகரிகமேயாகும். பழந்தமிழும் அதன் இலக்கியமும் அறிவிக்கும் இவ் வுண்மையை எவர்தாம் மறுக்க இயலும்; மறைக்க இயலும்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்
Leave a Reply