காணாமல்போனவர்தேடுசங்கம்01 : FFSHKFDR01

இடைத்தரகர் அமைப்புகள் தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும்! இல்லையேல் அம்பலப்படுத்தப்படும்!
தேடு குடும்பம்
– கை.க.கா.ஆ.உ.தே.க.கு.

சங்கத் தலைவி எச்சரிக்கை!

  இலங்கை அரசின் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல், தடுத்து வைத்தல்’ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் ‘கழுவாய் (பரிகார) நீதியும் – முறையான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, உண்மையாகவும் ஒப்படைப்பாகவும்(அர்ப்பணிப்பாகவும்) பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்; காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலை வெளிநாட்டுத் தூதரகங்களிடமிருந்து நிதி பெறுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை என்பதைக் கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் தம்மால் அறிந்தும் தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ள ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Vavuniya District) வவுனியா மாவட்டச் சங்கத் தலைவர் திருமதி கா.செயவனிதா, “தாங்கள் பணம் ஈட்டுவதற்கும் – தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் சிக்கலைப் பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்புச் செய்து கொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளைத் தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என்றும், இனியும் இவ்வாறான “நாகரிகமற்ற நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள், அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு அம்பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை தமக்கு ஏற்படும்” என்றும் தெரிவித்தார்.

அரசை விடவும் இடைத்தரகர்அமைப்புகளே பெருந் தடைக்கல்!

  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப் போகின்றோம் – இது செய்யப் போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகளிடமிருந்து பெருந்தொகை நிதியைப் பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் வேலைத்திட்டமாகவும் எடுத்துக் கொண்டு இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து, மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், இதனால் நீதியைக் கோரும் கவன ஈர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் செயவனிதா கவலை தெரிவித்தார்.

 பெருந்துயர் தோய்ந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை வணிகமாக்கிப் பணம் ஈட்டத் துடிக்கும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளைத் தாங்கள் நன்கு இனங்கண்டு வகைப்படுத்தியுள்ளதாகவும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டச் சங்கங்களும் ஒன்று கூடி, ‘தேசிய அளவில் ஒரு கூட்டு இயக்க’மாகச் செயல்பட்டு வரும் நிலையிலும், (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) தம்மைக் கூட்டு இயக்கமாகச் செயல்பட விடாமல் இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தமக்கான நிதி வரத்துகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகச் சங்கத்தின் உறுப்பினர்களைச் சிறு சிறு குழுக்களாக உடைத்துக் கையாள்வதாகவும், தமது சிக்கலுக்குத் தாங்களே சொந்தமாகத் தீர்மானங்களை எடுத்து இலக்கு நோக்கி நகருவதற்கு, அரசாங்கத்தை விடவும் பெரும் தடைக்கல்லாக இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் இருப்பதால், இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மேலெழுந்து வருவதற்கே தமது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதி கழிந்து விடுவதாகவும் தெரிவித்தார்.

  கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கச் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் திருமதி கா.செயவனிதா, செயலாளர் திருமதி பே.பாலேசுவரி ஆகியோர் தலைமையில் 16.07.2016 – காரிக்(சனிக்)கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்றது. கலந்துரையாடல் செயலணியானது மாவட்டந்தோறும் வருகை தரும்பொழுது, அதற்கு ஏற்பிசைவு அளிக்கத்தக்கவாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆயத்தப்படுத்தி – வழிப்படுத்தும் நோக்கத்தில் கலந்தாய்வு இடம்பெற்றது.

  சங்கத்தின் அழைப்பின்படி, குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் தலைவர் கோ.இரா சுகுமார், ஊடகப் பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக் குழு உறுப்பினர் சு.வரதகுமார் ஆகியோரால் உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி, கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கம் – தமிழர் தாயகம் (FFSHKFDR – Tamil Homeland) அமைப்பின் ஒத்திசைவோடு, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவால் கலந்துரையாடல் செயலணியிடம் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள், முன்மொழிவுகள் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டதோடு கருத்துகளும் பெறப்பட்டன.

  கூடவே, காணாமல் போனோர் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்கான அலுவலகத்தை  (Office for Missing Persons – OMP) அணுகுவது தொடர்பில் உள்ள நன்மை தீமைகள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்திடம் எதைக் கேட்க வேண்டும்? காணாமல் ஆக்கப்படும் நிகழ்வுகள் மீள நிகழாமையை எப்படி உறுதிப்படுத்தலாம்? இன்றைய உலக ஒழுங்கில் உச்சளவு நீதியை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம்? சான்றுரைஞர்களின் பாதுகாப்புக்கு உறுதி உண்டா? – இவை தொடர்பிலும், நிலைமாறு காலக்கட்ட நீதியின் பெயரால் நாட்டுக்கு உள்ளே வரவழைக்கப்படும் அமெரிக்க தாலர்கள் (dollars), அந்த நிதியைப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள மக்களை ‘மூளைச்சலவை’ செய்து வரும் அமைப்புகளின் போக்குகள் தொடர்பிலும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

 கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கம் – தமிழர் தாயகம் அமைப்பின் தலைவர் திருமதி செ.நாகேந்திரன் (ஆயிசா) அவர்களும், அதன் உறுப்பினர்களும் இந்தக் கலந்தாய்வில் கலந்து கொண்டிருந்தனர்.

தரவு : பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் - peyar_name_e.bhu.gnanaprakasan02