azhai_Eerurulimanithaneyapayanam

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி

மனிதநேய ஈருருளிப் பயணம்

 நடைபெற இருக்கும் ஐநா மனிதவுரிமை அவையின் 30ஆவது அமர்வை முன்னிட்டுத் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் திங்கள் கிழமை பிரித்தானியாவில் இருந்து தொடங்கப்பட உள்ளது. பிரித்தானியா, தலைமையர் (தலைமையமைச்சர்) அலுவலகத்துக்கு முன்னால் தொடங்கிப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி (தென்ஃகாக்கு), செல்கிறது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தை(புருசெல்) அடைந்து, அங்கிருந்து இலக்சம்புர்க்கு நாட்டை ஊடறுத்து, ஐரோப்பிய பாராளுமன்றத்தை (ஃச்ரார்சுபுக்கு) நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ந்து இயேர்மன் நாட்டைக் கடந்து   பன்னாட்டு கவனத்தை ஈர்ப்பதற்காக ஐந்துகுறிப்பு வேண்டல்களை முன்வைத்து மனிதநேய ஈருருளிப் பயணம்   செனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் நோக்கிச் செல்ல இருக்கின்றது.

 

  ஈருருளிப் பயணம் செல்லும் வழிகளில் முதன்மையான அரசியல் சந்திப்புகள் இடம்பெறுவதோடு, தமிழின அழிப்பைப் பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் துண்டு வெளியீடுகளும், விளக்கங்களும் கொடுக்கப்படும்; எமக்கான நீதியை நாம் பெறும் வரை ஐநா நோக்கிய பயணம் என்றும் ஓயாது என்பதன் குறியீடாக இம் முறையில் மனிதநேய ஈருருளிப் பயணம் அமைகின்றது.

  தாயகத்தில் எங்கள் உறவுகள் எதிரியின் ஆக்கிரமிப்புக்குள் அடிமைப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். எங்களை அழித்தவன், எங்கள் பரம்பரையை – கலை-பண்பாட்டு விழுமியங்களை – எங்கள் தொன்மையான தூய தமிழ்மொழியை – படிப்படியாக நுட்பமாகத் திட்டமிட்டு தொடர்ந்து அழித்துவருவதோடு, எங்கள் நிலத்தையும் நிலையாக வன்கவர்ந்து தன்னகப்படுத்திவருகிறான். பத்து அல்லது இருபது ஆண்டிற்குள் தமிழரின் பண்டையத் தாயக நிலத்தில் தமிழர்கள் உரிமைகூற ஏதுமற்ற நிலை உருவாகக்கூடிய கமுக்கமான செயற்றிட்டத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறான ஒரு பெரும்படியான திட்டமிட்ட மென்தீவிர இனவழிப்பு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

  இவ்வாறு திட்டமிடப்பட்ட ஒரு மென்தீவிர இனவழிப்பிலிருந்து எமது உறவுகளை, எமது தாய்நிலத்தை – மொழியை – தமிழரின் கலை-பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

  உலகெங்கும் தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளில் தமிழர்கள் ஓரணியாக எழுச்சிபெற்று ஆற்றல்வாய்ந்த போராட்டங்களைச் செய்யவேண்டும். நீதியின் கதவுகள் திறக்கப்படும்வரை நாம் ஓய்ந்துவிடாது தொடர்ந்து எங்கள் உரிமைக்காக ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும். இளைஞர்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டும். தமிழ் எங்கள் உயிருக்கு நிகர்! எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் பண்பாடு – உலகிலேயே மிகவும் தொன்மையானது, வீரமானது, தனித்துவமானது!

  ஆகவே, எமது உரிமைகளை மீட்டெடுக்கும் வரை நாம் தொடர்ந்து முனைப்போடு போராடுவோம்!

  ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவரும்  புரட்டாசி 04, 2046 (21. 09. 2015) ஐ.நா. வாசல் நோக்கி அணிதிரள்வோமாக! ஒன்றுபட்ட தமிழரின் எழுச்சியாக, எங்கள் தொன்றுதொட்ட உரிமை நிலம், இனம், மொழி, கலை-பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக, எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள மென்தீவிர இனப்படுகொலையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஐரோப்பா எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓரணியாக நின்று எமக்காக நீதி கோரும் ஆற்றல்வாய்ந்த போராட்டமாக மாற்றுவோமாக!

 காலத்தின் கட்டாய வரலாற்றுக் கடமையை உணர்ந்து சுவிசு எங்கும் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் பேரணியாக ஒன்றுகூடுமாறு மிகவும் பணிவன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்.

ஐந்து வேண்டல்கள்

  1. பல பத்தாண்டுகளாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச்சு, 2011இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலகக் குமுகாயம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

  1. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் உரிமையுடன் வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு வன்முறையில்நிலைகொண்டுள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

  1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பரம்பரை நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) ஏற்க(அங்கீகரிக்க) வேண்டும்.

  1. பேச்சு மற்றும் ஊடக உரிமை வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

  1. மூன்று பத்தாண்டுகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலகக் குமுகாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

http://www.pathivu.com/news/42584/57//d,article_full.aspx