தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
அமித்துசா வாயால்
இனவழிப்பு பேசப்பட்டதா?
வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான்.
இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து விடுகிறது.
அதிலும் இந்தியப் பேரரசின் உள்துறை அமைச்சர் என்ன காரணத்துக்காக அப்படிப் பேசியிருந்தாலும் இந்தியாவின் பார்வையில் ஒரு மாற்றம் வந்து விட்டதோ என்ற எண்ணம் அலைமோதத் தொடங்கி விடுகிறது. அண்மையில் இராமேசுவரத்தில் பாசக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பேச்சு தாயகம் உட்பட உலகெங்கிலும் பாரிய பேசுபொருள் ஆகி விட்டது.
தமிழ்நாட்டில்தான் இது பற்றி யாரும் அவ்வளவாக விவாதிக்கவில்லை. இங்கு யாரும் அமித்துசாவின் பேச்சைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை போலும். ஆனால் புலம்பெயர் தமிழர் சிலர் “அமித்துசா இப்படிப் பேசி விட்டாரே? அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?” என்று என்னைக் கேட்டு வருகின்றனர்.
ஐரோப்பியாவிலிருந்து அன்பர் ஒருவர் அமித்துசாவின் பேச்சு குறித்தும், அதையொட்டி வேறு சில செய்திகள் குறித்தும் எனக்கு அனுப்பிய வினாக்களையும் அவற்றுக்கு நான் தந்த விடைகளையும் (சில கூடுதல் விளக்கங்களோடு) ஈண்டு பகிர்கிறேன் –
வினா:
மக்களையும் மக்களையும் இணைத்தல் என்ற திட்டம் சிங்களச் சந்தையைப் பலப்படுத்திச் சிறிலங்காவை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவுமே தவிர ஈழத் தமிழர் தேசியச் சிக்கலுக்கு எப்படி உதவும்?
விடை:
இந்தத் திட்டத்தின் உட்பொருள் இந்தியப் பெருங்குழுமங்களான அம்பானிகள் – அதானிகளுக்கு இலங்கைத் தீவை அங்காடி (சந்தை) ஆக்குதல், முதலீட்டுக் களமாக்குதல் என்பதே தவிர எந்த மக்களை எந்த மக்களோடு இணைக்கப் போகிறார்கள்?
சிறிலங்காவைப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்பது என்றால் இனவழிப்புக் குற்றம் புரிந்த சிங்களப் பேரினவாத அரசை நிலைப்படுத்தி வலுப்படுத்தல் என்று பொருள். இந்தப் பொருளியல் நெருக்கடிக்கே சிறிலங்கா அரசு நடத்திய போருக்கான படைச் செலவு முதன்மைக் காரணமாக இருக்கும் போது, இனவழிப்புப் பொறிக்கு இந்தியா சாணை பிடித்துக் கொடுப்பதாகப் பொருள்.
இந்தியா இலங்கைக்குத் பொருளியல் வகையில் முட்டுக் கொடுப்பது ஈழத் தமிழர் தேசியச் சிக்கலுக்குத் தீர்வு காண உதவாது என்பது மட்டுமல்ல, அப்படி ஒரு சிக்கல் இருப்பதையே அறிந்தேற்க மறுப்பதும் ஆகும். எல்லாவற்றையும் மறந்து விடச் சொல்கிறார்கள். நம்மவர்கள் சிலரும் மறந்து விட அணியமாய் இருக்கின்றார்கள். எப்படியும் இந்தியாவின் குற்ற வகிபாகத்தையாவது மறந்து விடுவதுதான் நல்லது என்கின்றார்கள். மறப்பதற்கு விலையாக சில சொற்களை உச்சரித்து உங்களை ஆற்றுப்படுத்துவார்கள்.
தேசிய இனச் சிக்கல் என்ற ஒன்று இருப்பதையே அறிந்தேற்காமல் அதற்குத் தீர்வு காண்பது எப்படி? இனவழிப்பையே அறிந்தேற்காமல் அதற்கு நீதிபெற்றுத் தருவது எப்படி? இனவழிப்பை அறிந்தேற்றல் என்றால் போகிற போக்கில் ஒரு சொல் வீசி விட்டுப் போவதன்று. பேசும் வார்த்தைக்கும் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
1983 சூலைப் படுகொலையின் போதே அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி இந்திய நாடாளுமன்றத்திலேயே இலங்கையில் நடக்கும் இனக்கொலை பற்றிப் பேசினார். ஆனால் இனக் கொலைக்கு ஆளாகும் தேசத்தின் இறைமை குறித்தும் விடுதலை குறித்தும் பேசினாரில்லை. இது வரை இந்திய அரசு எந்தக் கட்டத்திலும் தமிழீழத்தின் தன்-தீர்வுரிமையை (சுய நிர்ணய உரிமையை) அறிந்தேற்றதில்லை.
இப்போது அமித்துசா மெய்யாகவே தமிழர் இனவழிப்பு பற்றிப் பேசுவாராயின் அவர் முகன்மை உறுப்பு வகிக்கும் அரசானது இனவழிப்புக்கு ஈடுசெய்நீதி பெறுவதற்கேனும் தமிழீழத்துக்கு உரித்தான தன்-தீர்வுரிமையை அறிந்தேற்கட்டும். மற்ற உலக நாடுகளும் இனவழிப்பு நடந்ததென்னும் உண்மையை அறிந்தேற்கும் படி கோரட்டும். ஒன்றுபட்ட இலங்கை என்னும் பெயருக்குள் மறைந்திருக்கும் ஒற்றையாட்சி இலங்கையே நேற்றைய நேர் இனக்கொலைக்கும் இன்றைய கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் வழிசெய்திருப்பதைப் புரிந்து கொண்டு, ஐநா உள்ளிட்ட பன்னாட்டு அரங்குகளில் தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கைக்கு ஆதரவு நல்கட்டும்.
வினா:
தமிழ்நாட்டுக்கு மின்சாரத் தட்டுப்பாடு உள்ள நிலையில் இலங்கைக்குத் தமிழ்நாட்டு மின்சாரத்தை வழங்குவது முறையா?
தமிழ்நாட்டுக்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை என்றுதான் அரசு சொல்கிறது. இது மின்மிகை மாநிலம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். தோற்றத்துக்கு இது சரியாகவும் இருக்கலாம். ஆனால் இன்னும்கூட மின்சாரம் பார்க்காத குக்கிராமங்கள், மலைக் கிராமங்கள் இருக்கவே செய்கின்றன. காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் உரிமைகளை இழந்து நிற்கும் நிலையில் மின் இறைவைப் பொறிகளை நம்பியே உழவுத் தொழில் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது. பயிர்த் தொழிலுக்கு இலவய மின்சாரம் என்று சொல்லப்பட்டாலும் அது தேவையான நேரங்களில் தேவையான அளவுக்குக் கிடைபப்தில்லை. சிறு குறு நடுத் தொழில்கள் ஏராளமாக மூடிக் கிடக்கின்றன. இவற்றில் சில சொந்தமாக மின்னியற்றிகளை வைத்து இயங்க வேண்டிய நிலை. இதை எல்லாம் சரி செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவையான மின்சாரம் அனைத்தும் பொதுத் தொகுப்பிலிருந்து வழங்குவதனால், தமிழ்நாட்டின் மின் தட்டுப்பாடு அப்போதுதான் வெளிப்படையாகத் தெரிய வரும்.
மின் தட்டுப்பாடே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டு மின்சாரத்தை இலங்கைக்கு ஏன் தர வேண்டும்? இப்படித் தருவதற்கு இந்தியா தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்டதா? கேட்காது, ஏனென்றால் தமிழ்நாட்டுக்குத் தன் இயற்கை வளங்கள் மீது – அந்த வளங்களைக் கொண்டு ஆக்கப்பெறும் மின்சார ஆற்றலின் மீது – இறைமை ஏதும் இல்லை. தமிழ்நாட்டின் அனல் மின்சாரம் (நெய்வேலி), அணுமின்சாரம் (கல்பாக்கம், கூடங்குளம்) எதிலும் தமிழ்நாட்டுக்கு உரிமை வழிப்பட்ட பங்கு ஏதுமில்லை. இந்த மின்சாரத்தை வெளி மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ அனுப்புவதா, எவ்வளவு அனுப்புவது என்பதெல்லாம் தமிழ்நாட்டின் முடிவுக்கு உட்பட்டதன்று.
இந்தியாவை ஐரோப்பாவின் அணுவுலைகளுக்கு அங்காடியாக்குவது போலவே தெற்காசியாவை இந்தியாவின் மின் அங்காடியாக மாற்றுவதும் இந்திய ஆளும் வகுப்பின் நெடுங்காலத் திட்டம். இலத்தீன் அமெரிக்க நாடுகளை வட அமெரிக்க வல்லரசியம் பார்த்தது போலவேதான் இலங்கையையும் இந்திய வல்லரசியம் பார்க்கிறது என்பதற்கே இது மீண்டும் சான்றாகிறது.
இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசின் நேர் இனக்கொலைக்கு உதவியது போலவே தொடரும் கட்டமைப்பியல் இனவழிப்புக்கும் உதவி வருகிறது. இந்தியா இலங்கைக்கு வழங்கும் மின்சாரமும் இவ்வகையான உதவி என்றுதான் பார்க்க வேண்டும். இலங்கை இயல்பு நிலையில் இல்லை என்பது பொருளியலின் பாற்பட்ட உண்மை மட்டுமல்ல. அது அந்நாட்டில் நிலவும் இனப்பூசலின் பாற்பட்டதுமாகும். இனவழிப்பு வரை போய் விட்ட இனப் பூசலுக்குத் தீர்வு இல்லாமல் எல்லாம் இயல்புநிலையில் இருப்பது போல் இந்தியா நடந்து கொள்வது தமிழ்மக்களுக்கு நீதி செய்வதாகாது என்பது மட்டுமல்ல, தொலைநோக்குப் பார்வையில் சிங்கள மக்களின் குடியாட்சிய நலன்களுக்கும் உதவாது.
கேள்வி:
‘நரமனுச சங்கார’ என்னும் அமித்சாவின் உச்சரிப்பை இனவழிப்பு
என எப்படித் தமிழ்ப்படுத்தலாம்?
“இதே UPA கூட்டணிதான் இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்படக் காரணமாக இருந்தார்கள்” என்று இராமேசுவரத்தில் அமித்துசா பேசியதாகத் தமிழ்நாட்டுத் தமிழ் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. “Genocide of Tamils in Sri Lanka” என்று அவர் பேசியதாக ஆங்கில ஊடகங்கள் கூறுகின்றன. எனவே அவர் இனவழிப்பு என்று சொன்னதாகவே நாம் பொருள் கொள்ளலாம். இந்தியாவை ஆளும் பாரதிய சனதா கட்சியின் அனைத்திந்தியத் தலைவர், நாட்டின் உள்துறை அமைச்சர் இப்படிப் பேசியிருப்பது முக்கியமானது.
நமது கவலையெல்லாம் இது தமிழர்களை ஏமாற்றும் வெற்றுப் பேச்சாகவே இருந்து விடக் கூடாது என்பதுதான். நடந்தது இனவழிப்புதான் என்றால் இனவழிப்பு ஆளான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய அமித்துசாவும் இந்திய அரசும் செய்யப் போவதென்ன? இனவழிப்புக்கு நீதி பெறத் தமிழர்கள் எழுப்பும் கோரிக்கைகளை இனியாவது இந்திய அரசு ஆதரிக்குமா? ஆதரிக்க வேண்டும் என நாம் கோரத் தயங்கக் கூடாது.
கேள்வி:
திமுகவின் ஈழத்தமிழர் குறித்த அக்கறையின்மை அண்ணாமலையின்
கச்சத்தீவு மீட்பு கோசத்திற்கு வழிவகுத்து தமிழரிடை இந்துத்துவ விரிவாக்கத்திற்கு உதவுகிறது எனலாமா? திமுகவினரிடை ஈழத்தமிழர் தேசியம் குறித்துப் பேச உட்கட்சித் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்ளும். இந்தச் சிக்கலில் மட்டுமல்ல, தமிழர் நலவுரிமை சார்ந்த எல்லாச் சிக்கலிலும் இப்படித்தான் நடந்து கொள்ளும். பதவி அரசியலுக்குப் போராட்ட அரசியலைப் பலிகொடுப்பதன் விளைவு இது. அதே போது திமுக அணிகளும் திமுக பக்கமிருக்கும் வெகுமக்களும் நமக்குத் தேவை என்பதை மறந்து விடக் கூடாது. அதே போல் திமுக அரசை நமக்கு ஆதரவாக நிலை எடுக்க வைப்பதும் தமிழ்நாட்டளவிலும் இந்திய அளவிலும் பன்னாட்டளவிலும் முகன்மையானது. இதை அலட்சியம் செய்து விட வேண்டா.
கச்சத்தீவு மீட்பு முழக்கமெல்லாம் வெறும் கேலிக் கூத்து. வாக்கு வேட்டை அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள். இந்திய விரிவாதிக்க அரசு என்றாவது இலங்கையை வன்பறிப்பு செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தால் அப்போது வேண்டுமானால் கச்சத் தீவு முழக்கம் மெய்ப்படக் கூடும். இதனை உடனடி வாய்ப்பாக நான் பார்க்கவில்லை.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 287
Leave a Reply