பட்டினிப்போட்டுக் கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலக்கணமா?
விடுதலை ஒன்றே தீர்வு! எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு!
தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும் இணைந்து, பன்னாட்டுப் பெண்கள் நாளாகிய 2016 மார்ச்சு 08 அன்று வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூண் முற்றத்தில் காலையிலிருந்து மாலை 4.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர்.
‘விடுதலை ஒன்றே தீர்வு! வேண்டாம் இங்கு ஏமாற்றுப்பேச்சு’, ‘பட்டினிப்போட்டு கொல்வதுதான் நல்லாட்சி அரசின் இலட்சணமா?’, ‘அரசியல் கைதிகளுக்கு மரணப்படுக்கைதான் தீர்வா?’, ‘அரசியல் கைதிகளுக்கு மரணம்தான் விடுதலையா?’, ‘சிறைக்கதவுகளைத்திற! எங்கள் உறவுகள் தங்கள் சொந்த ஊர்களுக்குப்போகட்டும்’, ‘எங்கள் உறவுகளை எங்களோடு கூடி வாழவிடு’, ‘இரகசிய வதைமுகாம்களை அம்பலப்படுத்து!. சட்டவிரோதக் கைதுகளை உடன் நிறுத்து’, ‘நல்லாட்சி அரசே உன் தகுதி என்ன? தமிழ் தேசியக்கூட்டமைப்பே அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் என்ன?’
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், இவ்வாறு நல்லாட்சி அரசின் முகத்திரையைக்கிழிக்கும் முழக்க அட்டைகளைத் தாங்கியிருந்தனர்.
மாலை 4.00 மணியளவில், வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தின் சார்பாளர்கள் இரத்தினகாந்தன், சிவகசன் ஆகியோர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பேருவகையோடு பழச்சாறு வழங்கி உண்ணா நோன்பை முடிவுறுத்தி வைத்தனர்.
Leave a Reply