(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம் – தொடர்ச்சி)

5. உயிர்த்தொண்டு

(சென்னை தொண்டைமண்டலம் துளுவவேளாளர் பாட சாலையில் ஆற்றிய சொற்பொழிவு)

மாணவ மணிகளே,

நீங்கள் வாழ்கின்ற காலம் இந்தக்காலமா? அந்தக்காலமா? எந்தக்காலம்? நீங்கள் வாழ்கின்ற காலம் நெருக்கடியான காலம். உடை கிடைப்பது, சோறு கிடைப்பது அரிதாயிருக்கிற காலம். சில மாணாக்கர்கள் பரிட்சை இல்லாத காலம் வருமா? என்றுகூட எண்ணலாம் பரிட்சை ஒழிந்தால் ஒரு பெரிய சனியன் ஒழிந்தது என்று எண்ணும் மாணாக்கரும் இருக்கலாம்.

மாணவ மணிகளின் உடல் பெரிதும் எலும்பும் தோலுமாகவே இருக்கக் காண்கிறேன். மாணவர்களின் உடல் நன்றாக இருக்கவேண்டும். எலும்பும் தோலுமாய் இருத்தல் கூடாது. அழகை விரும்பாத மாணாக்கர்கள் உண்டோ ? அழகை விரும்பாதார், யார்? தெய்வம் என்றால் அழகு எனலாம்.

அந்தக்காலம் போற்றற்கு உரியதா? இந்தக் காலம் போற்றற்குரியதா? வயது முதிர்ந்த என்னைப் போன்றோர் நாட்டுப் புற அழகைத்தான் பாராட்டிப் பேசுவார்கள். நாட்டுப் புறங்களிலே உள்ள சிறுவர்கள் அழகிய கட்டடங்களிலே கல்வி பயில்வதில்லை. சிற்றூரிலுள்ள சிறுவர்கள் கல்வி அறிவிலே சிறந்தவர்களாக இல்லா திருக்கலாம். ஆனால் உடலோம்பும் திறத்திலே அவர்கள் வல்லவர்கள். மாடு மேய்த்து, ஏர் உழுது, ஏற்றம் இறைத்து அழகிய உடலைப் பெற்றிருக்கிறார்கள் நாட்டுப்புறத்து மக்கள். உடலோம்பும் திறத்தினை அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவற்றை அவர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கலா சாலைக்கு வந்து மாணவர்களின் உடலைப் பரிசோதிக்கும் மருத்துவர் 100-க்கு 75 பேர் காசநோயால் எலும்புருக்கி நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றும் இவர்களின் நுரையீரல் சரியாயில்லை என்றும் அறிக்கையைத் தந்து செல்வார்.

சிற்றூர்களிலே உள்ள சிறுவர்களைப் பற்றி மருத்துவர்கள் அம்மாதிரியான அறிக்கையைத் தர மாட்டார்கள். யுனானி வைத்தியரிடம் சென்றால் அல்வா தருவார். தமிழ் வைத்தியரிடம் சென்றால் இலேகியம் தருவார். மருத்துவரிடம் சென்றால் டானிக் தருவார்.

உடல் உரம் பெறுவான் வேண்டிப் பெரும்பாலோர் டானிக்தான் சாப்பிடுகிறார்கள். இந்த டானிக் மூன்று வேளைகள் முறையாகச் சாப்பிட்டு விட்டு, பாதம் பருப்பு, பால் இவற்றோடு ஆறு வேளை உணவகத்தில் காநீர், தேநீர் சாப்பிட்டு விட்டால் உடலில் பலமேறிவிடும் என்று பலர் எண்ணுகிறார்கள் இது தவறு.

இன்றுள்ள இந்துக்களின் உடம்பைக் காட்டிலும், மிகப் பழைய காலத்தில் உள்ள இந்துக்களின் உடம்பு நல்ல நிலையில் தான் இருந்தது.

“வாழ்க்கை நிலையாமையை” அறிவுறுத்தி, விரதமிருங்கள், நோன்பிருங்கள், செத்துப்போங்கள் என்று சொல்வதைக் கண்டித்து அந்தக் காலத்து மக்கள் மட்டுமல்ல இந்தக் காலத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் கூடப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அது தவறு. அந்தக் காலத்து மக்களல்ல இப்படி எழுதிவைத்தது. மத்தியில் வந்த கூட்டத்தார்தான் வாழ்க்கை நிலையாமையைப் பற்றி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

உங்கு என்ற சொல் இப்பொழுது வழக்கில் இல்லை. உங்கு என்றால் மத்தியில் என்று பொருள்.

உலகத்தில் உயர்ந்த பொருள் எது? சூரிய வெளிச்சம். ஐன்சுடன் என்ற பெரியார் “நாளுக்கு நாள் சூரிய வெளிச்சத்தின் சக்தி அதிகமாகிக்கொண்டே போகிறது” என்று சொல்லுகிறார். பசிய மரங்களில் உள்ள இலைகளின் மேல் படர்ந்து அதன் வாயிலாக நம்மீது படும் சூரிய வெளிச்சத்திற்கு அதிக சக்தி உண்டு. இம்முறையில் சூரிய வெளிச்சம் நம்மீது பட்டால் அழகொழுகும் முருகனாய் ஏன் இருக்கமுடியாது?

முனைவர் கூன் என்ற பெரியார் சூரிய வெளிச்சம் நம்மீது படுவதை நன் முறையில் பயன் படுத்திக் கொள்வதற்காகத் தலையில் பசுமையான நிறமுள்ள துணிகளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார். சூரிய வெளிச்சத்திலே உள்ள சக்தியை அறியாமல் இயற்கை வழியிலே நடவாமல் லேகியத்தையும், டானிக்கையும் சாப்பிடுவதால் பயன் என்ன? உடலுக்கு நல்ல காற்று ஏராளமாக வேண்டும். உமிழும்படியான காற்றை ஒரு வேளை உள்ளே ஈர்த்து நுரையீரலிலே நிரப்பினால் கறுப்புத் தெரியாது உடல் சிவந்த மேனியுடன் இருக்கும். உரோமம் கறுத்திடும்.

கிழவர்களுக்கு இருக்கும் வெள்ளை மயிரைக் கண்டுவிட்டு, சில இளைஞர்கள் கேலி செய்வது கண்டு அதற்காக சிலர் கறுப்புமையை அதன்மீது பூசிக்கொள்வதுண்டு. தவறி கைப் பட்டாலும், தண்ணீர் பட்டாலும் அந்தக்கறுமை மறைந்து வெண்மை தோன்றும். அதைக் கண்டோர் பின்னும் நகைப்பர். ஆதலின் மைபோடுதல் கூடாது.

நான்கு மணி நேரம் வரை நீரிலேயே இருந்து நல்ல பலன்களைப் பெற்றதாக ஒரு ஆங்கிலப் பெண்மணி சொல்லுகிறார். நீரிலும் ஓர் ஒளி உண்டு.

நல்ல காற்றிலே உலவி, நல்ல தண்ணீரை அருந்தி, சூரிய வெளிச்சம் நம் உடலிலே நன்கு படியும்படி வாழ்வோமானால் எந்த நோயும் வாராது.

தண்ணீரில் அடிக்கடி மூழ்கி நல்ல பயன்களைப் பெற்று 101 வயதுவரை இருந்த அம்மையாரைப் பார்த்து அவருடைய பேரன், 101 வயதிலே இளம் பெண்ணைப் போல் இருக்கிறாயே என்று கேலி செய்வானாம்.

நீங்கள் பெரியவர்களானால் எப்படி வாழ்வது? How to Live – என்ற ஆங்கில நூலை அவசியம் படிக்கவேண்டும். நாகரிகத்துடன் நாம் அரிசிச் சோறு சாப்பிடுவதாகச் சொல்லப்படுகிறதே அதில் நாகரிகமே இல்லை எனலாம். தவிட்டைப் போக்கி (Polished Rice) வெண்ணிற அரிசியைச் சாப்பிடுகிறோம். தீட்டிய நல்ல வெள்ளைப் பச்சரியிலே உணவாக்கி பூனை, நாயிடம் வைத்துப் பாருங்கள். மோப்பம் பிடித்துப் பார்த்து அது தொடவே தொடாது. பூனையும் நாயும் தொடாத அரிசியைத் தான் இன்று நாம் உண்கிறோம்.

இது போன்ற அரிசிகளைச் சாப்பிடுவதால் தான் குடல் வாதம் போன்ற நோய்கள் வருகின்றன. சப்பானிலே அரிசியைத் தீட்டுவதற் கென்றே சில சட்டங்கள் அமைத்திருக்கிறார்கள். நன்கு தீட்டப்பெறாத அரிசியில்தான் வைடமின் இருக்கிறது. கீரை தின்பதிலே நல்ல சத்துண்டு. கீரைகள் தின்பவனைப் பார்த்து கீரை தின்னி என்று கேலி செய்கிறார்கள். அது தவறு. இளம் மாணாக்கர்களாகிய நீங்கள் நல்ல கீரைகளை நாள் தோறும் புசிக்கவேண்டும்.

செந்தயிர் கண்டம் கண்டமாக‘ என்று கம்பன் சொல்லுகிறான். இப்பொழுது பலர் தயிர் சாப்பிட்டால் அசீரணம் வருகிறதென்று சொல்லுகிறார்கள். அது தவறான கருத்து. எலும்புகளுக்கு நல்ல பலனைத் தருவது தயிர் ஒன்றே. பழங்காலத் திலே உடலோம்பல் மிகவும் சிறந்திருந்தது. அதை நீங்கள் கைக்கொள்ள வேண்டும்.

காலம் செல்லச் செல்ல இந்தச் சாதி, மதம், நிறம் போய்விடும். இதற்காக எவ்வளவோ சண்டைகள். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இதற்காகச் சண்டை. இந்தக் காலத்திலே உலகத்தோடு தொடர்பில்லாமல் ஒரு மனிதனும் வாழ முடியாது. ஒரு பொருளை எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து பார்த்தால் உலகத் தொடர்பு இல்லாமல் இராது.
என் சாதி, என் மதம் என்ற வெறி ஒழிய வேண்டும். இவை ஒழியும் காலம் வந்துகொண்டே இருக்கிறது. காலையில் எழுந்தவுடன் “உலகம் வாழ்க” என்று சொல்லவேண்டும். உலகம் வாழ வேண்டும் என எண்ணி வழிபட வேண்டும். “உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு” என்று திருமுருகாற்றுப் படையில் வருகிறது. உலகு என்ற அடியை முதலில் வைத்துப் பாடுகின்ற பெருமை பழம் புலவர்களுக்கு உண்டு.
சில மக்களுடைய எண்ணம் கேவலம் இழிந்த நிலையிலே என் சாதி, என் மதம் என்று இறுமாப் புடன் செல்கிறது.

இந்தக் காலத்திலே மக்களுடைய குறிக்கோள் எங்கே போகிறது? பதவி, பதவி, பதவிமேல்தான் போகிறது. கவுன்சிலராக வேண்டும், மேயராக வேண்டும், மந்திரியாக வேண்டும், பின்னர் கவர்னராக வேண்டும், இராசாவாக வேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள். தலைமை, பதவி இவற்றிலேதான் பலர் ஆசை வைக்கிறார்கள்.

‘Scout Movement’ என்ற சாரணர் இயக்கம் என்ன சொல்கிறது? (Service, Service) தொண்டு , தொண்டு, ஒருவருக்கொருவர் தொண்டு செய்யுங்கள் என்று சொல்லுகிறது. இறைவனை மட்டுமல்ல; மக்களையும் தொண்டால் வழிபடுங்கள். எல்லோரும் தலைவராக வேண்டுமென்றால் சண்டைதான். பிற்காலத்தை உண்டாக்கப் போகிற நீங்கள் தொண்டு செய்யுங்கள். மேயராக வேண்டும், மந்திரியாக வேண்டும் என்று ஆசை வைக்காதீர்கள். மேயராகவும், மந்திரியாகவும் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. நான் கண்டிப்பது பதவிப் பித்தை …. அந்தப் பதவி ஆசையைத்தான்.

அதிகாரம் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவதும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து கொண்டு பெரும் பதவியில் இருக்கிறோம் என்ற ஆணவ அதிகாரத் தோரணையில் இறுமாப்புடன் கட்டளை-யிடுவதும் கூடாது. அதிகாரத்திலும் பண்பும், பணிவும் இருக்கவேண்டும். இன்றேல் அதிகாரமும் நிலைக்காது. தொண்டு செய்யவும் இயலாது. நீங்கள் செய்யப்போகும் தொண்டால் தான் உலகம் பண்படைய வேண்டும்.

”அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கொல்லாநா னன்பு செயல் வேண்டும்
எப்பாரு மெப்பதமு மெங்கணு நான் சென்றே
எந்தைநின தருட்புகழை யியம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க வருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினு நீ பொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.”

என்று இராமலிங்கர் சொல்லியுள்ளார். நீங்கள் அதை நினைத்து சாதி, மதம் கடந்து தொண்டு புரிய வேண்டும். உலகத்தோடு ஒத்துத் தொண்டு செய்ய வேண்டும்.
நீண்ட நாட்கள் உயிர் வாழவேண்டுமென்று கவிகள் கனவு கண்டார்கள். அந்தக் கனவை நினைவாக்கி நீங்களெல்லாரும் நீண்ட நாட்கள் வாழவேண்டும். நீண்ட நாட்கள் உயிர்த்தொண்டு செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

(தொடரும்)
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்)

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார்