கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை!
யாராக இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றத் தெரியவேண்டும்; காலமறிந்து பணியாற்றத் தெரிய வேண்டும். இருப்பினும் மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துநருக்கு மிகவும் இன்றியமையாதனவாக இவை உள்ளன. அவற்றில் பங்கேற்குநருக்கு அவையறிதலும் தேவை.
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 640)
ஆளுமையில் சிறந்து விளங்க விழைவோர் திருவள்ளுவா் கூறும் வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, காலமறிதல் முதலியவற்றை நன்கறிந்து செயலாற்றுநராக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பவர்கள் இவற்றில் கோட்டை விட்டு விடுகின்றனர்.
திட்டமிட்டுத்தான் நிகழ்ச்சி நிரலை வகுக்கின்றனர். அதற்கேற்ப அழைப்பிதழ் அடிக்கின்றனர். ஆனால், “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தொடக்க நிழ்ச்சியைக் காலந் தாழ்த்தி தொடங்குவர் அல்லது காலம் நீட்டித்து முடிப்பர். பேச்சாளர்களும் ‘அவையறிதல்’ என்றால் என்ன என்பதை உணராதவர்களாக இருப்பார்கள். பேச்சாளர்களும் தாங்கள் எண்ணியவற்றை எல்லாம் கொட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியில், உலகமே அழிந்து விடும், அதற்கு முன்னதாகப் பேச வேண்டும் என்ற எண்ணத்தில், நிகழ்ச்சிக்குத் தொடர்பில்லாதவற்றை யெல்லாம் பேசித் தீர்ப்பவர்களாக இருப்பார்கள்.
இத்தகைய கால நீட்டிப்பால், அடுத்துப் பேச உள்ளவர்களின், அடுத்த அமர்வில் பங்கேற்பவர்களின் நேரம் குறைந்து விடுகிறது. அடுத்தவன் நேரத்தை எடுத்துக் கொள்பவன் திருடன் என்கிறார் காந்தியடிகள். எனவே, உரிய நேரத்திற்கும் மேலாகப் பேசுபவர்கள் அடுத்தவர்கள் நேரங்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதுதானே உண்மை. இதனைக் கருத்தரங்கத்தைத் திட்டமிடாமல் நடத்துபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக எல்லாக் கருத்தரங்கங்களிலும் சொல்லப்படும் பொன்மொழி என்ன தெரியுமா? “உங்களின் பேச்சு நேரத்தைக் குறைத்து விட்டோம் என்று எண்ணாதீர்கள். கருத்தரங்க மலரில் உங்கள் கட்டுரை அப்படியே வரும். ஒரு வரியும் குறைக்கப்படாது. எந்தச் சொல்லும் விடுபடாது. நீங்கள் அதில் பார்த்துக் கொள்ளலாம்.” என்பார்கள். அவ்வாறு கருத்தரங்க மலரில் படித்துக் கொள்ளலாம் என்றால் எதற்குப் பணத்தையும் நேரத்தையும் செலவழித்துக் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு வர வைக்க வேண்டும்? தேவையில்லையே! எனவே, இத்தகைய பொன்மொழிகளை உதிர்க்காமல் பங்கேற்பாளர் அனைவருக்கும் உரிய சம வாய்ப்பு நல்குவதுதானே கருத்தரங்க நோக்கமாக இருக்க வேண்டும்? இதனை எப்பொழுது கருத்தரங்கத்தினர் உணருவார்கள்?
“தொடக்க விழாவிற்கு அழைக்கப்பெற்ற அமைச்சர் பெருமக்கள் அல்லது சிறப்பு அழைப்பாளர்கள் காலந்தாழ்த்தி வந்தமையால் நிகழ்ச்சியை உரிய நேரத்தில் தொடங்க இயலவில்லை. என் செய்வது” என்பார்கள். தொடர் நிகழ்ச்சிகள் உள்ளமையைக் குறிப்பிட்டு “உரிய நேரத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். நீங்கள் உரிய நேரத்தில் வர வேண்டும்” எனத் தெரிவித்தால் கட்டாயம் உரிய காலத்திற்கு வந்து விடுவார்கள். அரசியல் கூட்டங்கள், வேறிடங்களிலும் பங்கேற்பதற்குரிய கூட்டங்கள் உள்ள மாலை நேரங்கள், எதிர்பாராத அலுவல் பணி போன்றவற்றால் காலத்தாழ்ச்சி ஏற்படலாமே தவிர இவ்வாறு காலந்தாழ்த்தி வரவேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கமல்ல. நான் அமைச்சர் பெருமக்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடததியுள்ளேன். எந்த நிகழ்ச்சியும் காலந்தாழ்த்தி நடந்ததில்லை. கூட்டத் தொடக்கத்திற்கு முன் நினைவூட்டினால், சில நேரங்களில் “நீங்கள் நிகழ்ச்சியைத் தொடங்கிவிடுங்கள். நான் வந்து இணைந்து கொள்கிறேன்” என்பார்கள். நாமும் உரிய நேரத்தில் தொடங்கி விடலாம். அவ்வாறு இல்லாமல் வெறுமனே காத்திருந்து அவர்கள் மேல் பழியைப்போடுவதும் சரியல்ல.
பங்கேற்கும் பிற உரையாளர்களிடமும் “ஒவ்வொருவருக்கும் இவ்வளவு நேரம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதற்குள் சிறப்பாகப் பேச வேண்டுகிறோம்” என்றால் நீண்ட நேரம் பேசக்கூடியவர்கள்கூடச் சுருக்கமாக உரையை முடித்து விடுவார்கள். ஆனால், அழைப்பிதழைக் கொடுத்து விட்டுப் பேச வாருங்கள் என்றால் அவர்கள் அப்படித்தான் விரிவாகப் பேசுவார்கள். ஆனால், அவர்களே பேச்சு நேரத்தை வரையறுத்துத் தெரிவித்தால் அதற்குள் முடித்து விடுவார்கள். எனவே, நிகழ்ச்சி நடத்துநர் நிகழ்சசிக்கு முன்னரே திட்டமிடலைத் தொடங்கி உரியவாறு செயற்படவேண்டும்.
அண்மையில் நடைபெற்ற கருத்தரங்க நிறைவு விழாவில் உரையாளர் ஒருவர், தமிழ் மருந்து ஒன்றின் சிறப்பைக் குறிப்பிட்டு அதன் செய்முறை பற்றியெல்லாம் குறிப்பிடத் தொடங்கினார். அவையோர் “மருத்துவ மாநாடுபோல் பேசி நேரத்தை வீணடிக்கிறார்களே” என்று முணுமுணுத்தனர். நான் எழுந்து, “ஐயா உங்களின் உரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் திராவிட உணர்வை வெளிப்படுத்தும் கருத்துகள் சிறப்பானவை. ஆனால், இது தமிழ் ஆராய்ச்சி மாநாடு. மருத்துவ மாநாடு அல்ல. மருத்துவ அமர்வில் வேண்டுமென்றால் இவ்வாறு பேசலாம். அடுத்த அமர்வுகள் தொடர்ந்து உள்ளமையால், அதற்கேற்பப் பேசுவது நன்று” என்றேன். அஃதாவது பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொன்னேன். அவர் திகைத்து அமைதியாக நின்றார். அவையில் ஒருவர், “தலைவர் அதைச்சொல்வார். நீங்கள் ஏன் நிறுத்தச் சொல்கிறீர்கள். அவர் பேசட்டும்” என்றார். தலைவர் வாய்மூடி இருக்கும் போது, அவையில் யாரும் வாய் திறக்கலாம் என்றேன். அமைப்பாளர் ஒருவர், “அவர் விரும்பும் வரை பேசட்டும். அவருக்கு எப்படி அடுத்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் தெரியும். நீங்கள் யார் அவர் பேச்சை நிறுத்தச் சொல்வது” என்றார். “அழைப்பிதழில் தொடர் நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளமையால் அதை உணர்ந்து அவையறிந்து பேச வேண்டாமா? பேச்சாளர்கள் மிகுதியாகப் பேசுவதால் பங்கேற்பாளர்கள் நேரம் குறைவதால் நான் குரல் கொடுத்ததில் தவறில்லை” என்றேன். பேச்சாளரும் பேச்சை உடன் முடித்துக் கொண்டார். அதன் பின் அந்த அமைப்புக் குழு நண்பர் , “நான்தானே இதற்குப் பொறுப்பு? நீங்கள் எப்படி இது குறித்துக் கூற முடியும்?” என்றார். “நீங்கள்தான் பொறுப்பு என்பது எனக்குத் தெரியாது. யார் பொறுப்பாக இருந்தாலும் பொறுப்பானவர் பொறுப்பாக நடக்காத பொழுது அந்தப் பொறுப்பை வேறு யாரும் எடுத்துக்கொள்ளலாம். எனவே, நான் கேட்டதில் தவறில்லை” என்றேன். உடன் அந்த நண்பர் அமைதியாக இருந்து விட்டார்.
கருத்தரங்க அமர்வுகளிலும் நேர வீணடிப்பு நடைபெறுகிறது. பார்வையாளர்கள் வினா நேரத்தில் பேசத் தொடங்கி விடுவார்கள். அவைத்தலைவர்கள் அதனைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். நான் அமர்வின் பொழுது பார்வையாளர் யாரும் வினா தொடுப்பதாக எழுந்து சொற்பொழிவாற்றத் தொடங்கினால் உடனே நிறுத்திவிடுவேன். இதனால் அவர்கள் சினந்தாலும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், பலர் அமைதியாக இருந்து பேச விட்டுவிடுகிறார்கள். இதனாலும் கால நீட்டிப்பு ஏற்படுகிறது.
எந்தப்பேச்சாக இருந்தாலும் அது முடிந்த பின் 5 நிமையமேனும் அது குறித்த உரையாடல் நிகழ வேண்டும் என்பார் நாவரசர் ஒளவை நடராசன். ஆனால், பேச்சிற்கே 3 அல்லது 5 நிமையம் ஒதுக்கும் பொழுது உரையாடலுக்கு எங்கே வாய்ப்பு கிடைக்கும்? இதுவும் தவறே.
கருத்தரங்கம் நடத்துவோர் சுருக்கக்கட்டுரை அனுப்பும் அனைவரிடமும் விரிவுக்கட்டுரை கேட்டுப், பின் வடிகட்டுவதாலும் குழப்பங்கள் எதிர்ப்புகள் வருகின்றன. சிலர் மேலும் மேலும் கட்டுரைகளை அனுப்புமாறு அறிக்கை விட்டு, இறுதியில் முதலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் குறைவான எண்ணிக்கை யினரையே பங்கேற்க அழைக்கின்றனர். இவ்வாறெல்லாம் இல்லாமல், எத்தனை அமர்வுகள் நடத்த வாய்ப்புகள் உள்ளன? ஒவ்வோர் அமர்விலும் எத்தனைபேரைப் பேச அழைக்க இயலும்? என்றெல்லாம் திட்டமிட்டு அதற்கேற்ப எண்ணிக்கையை வரையறை செய்து கட்டுரையாளர்களை அழைக்க வேண்டும். அவ்வாறெல்லாம் இல்லாமல் பேச வைக்க இடமில்லை, நேரமில்லை என்று சொல்லிக் குளறுபடி செய்வது ஏற்புடைத்து அல்லவே!
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 673)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல-இதழுரை
Leave a Reply