“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!”
சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!
“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது.
அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு – ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Reply