(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 12 தொடர்ச்சி)

ஊரும் பேரும் –13

நாடும் நகரமும்

நாடு(தொடர்ச்சி)

      இவ்வாறு கங்கை கொண்ட சோழன் கண்ணெனக் கருதி வளர்த்த பெரு நகரம் இக் காலத்தில் உருக்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கின்றது. சிவாலயம் சிதைந்துவிட்டது. பெரிய ஏரி பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. அரண்மனை இருந்த இடம் மாளிகைமேடு என்ற அழைக்கப்படுகின்றது. நீரற்ற ஏரி பொன்னேரி என்று குறிக்கப்படுகின்றது. அந் நகரின் பெயரும் குறுகிக் கங்கை கொண்ட புரம் ஆயிற்று. தஞ்சைச் சோழர் ஆட்சியில் அந் நகரம் எய்தியிருந்த பெருமை எல்லாம் கனவிற் கண்ட காட்சி யெனக் கழிந்தது.

வஞ்சி

      இனிச் சேர நாட்டுத் தலைநகராக முன்னாளில் விளங்கிய வஞ்சி மாநகரம் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களில் மிகச் சிறப்பாகப் பேசப்படுகின்றது. செங்குட்டுவன் என்னும் சேரன், வடநாட்டு மன்னரை வென்று, பெரும் புகழ் பெற்று, வீரமாபத்தினியாய கண்ணகிக்கு வஞ்சி மாநகரத்தில் கோவில் அமைத்து வழிபட்டபோது பிறநாட்டு மன்னரும் அந்நகரிற் போந்து கற்புக் கடவுளின் அருள் பெற்றனர் என்று இளங்கோவடிகள் கூறுகின்றார். இவ்வாறு மன்னரும் முனிவரும் போற்ற வீற்றிருந்த கண்ணகியின் கோயிலும், அக்கோயிலைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய வஞ்சி மாநகரமும் இன்று தேடித்திரிய வேண்டிய நிலையில் உள்ளன. கொச்சி நாட்டிலுள்ள திருவஞ்சைக்களமே வஞ்சி மாநகரம் என்பார் சிலர். திருச்சி நாட்டைச் சேர்ந்த கருவூரே வஞ்சி என்பார் வேறு சிலர். இங்ஙனம் அலைகடலிற்பட்ட துரும்புபோல் ஆரய்ச்சி யுலகத்தில் அலமரும் நிலை இன்று வஞ்சி மாநகரத்திற்கு வந்துவிட்டது.

சென்னை

    இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் மேடு பள்ளமாகக் கிடந்தது அவ் விடம். இன்று சென்னையின் அங்கங்களாக விளங்கும் மயிலாப்பூரும்,    திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந் நாளில் காட்சி யளித்தன. மயிலாப்பூரிலுள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.7 திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது.8 அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. அங்கே, பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணியாயிற்று. திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும் பள்ளமுமாகப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு. இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அடியில் பெரும்பள்ளமாக அந்நாளிலே காணப்பட்டது.

     ஆங்கிலக் கம்பெனியார், கோட்டை கட்டி வர்த்தகம் செய்யக் கருதியபோது, ஒரு நாயக்கருக்கு உரியதாக இருந்த சில இடங்களை அவரிடமிருந்து வாங்கினர்; அவர் தந்தையார் பெயரால் அதனைச் சென்னப்பட்டினம் என்று வழங்கினர். அவ்வூரே இன்று சென்னப் பட்டினமாய் விளங்குகின்றது. கம்பெனியார் கட்டிய கோட்டை வளர்ந்தோங்கி விரிவுற்றது. மேடு பள்ளமெல்லாம் பரந்த வெளியாயின. நரி மேடு இருந்த இடத்தில் இப்பொழுது பெரிய மருத்துவ சாலை இருக்கின்றது.9

மண்ணடியின் அருகே இருந்த பெருமேடு தணிந்து பெத்துநாய்க்கன் பேட்டையாயிற்று. ஆங்கிலக் கம்பெனியார் ஆதரவில் பல பேட்டைகள் எழுந்தன. அவற்றுள் சிந்தாதிரிப் பேட்டை, தண்டையார்ப்பேட்டை முதலிய ஊர்கள் சிறந்தனவாகும்.

     இங்ஙனம் விரிவுற்ற நகரின் அருகே பல பாக்கங்கள் எழுந்தன. புதுப்பாக்கம், சேப் பாக்கம், கீழ்ப் பாக்கம், நுங்கம் பாக்கம் முதலிய சிற்றூர்கள் தோன்றி, நாளடைவில் நகரத்தோடு சேர்ந்தன. எனவே, சென்னையில் ஆதியில் அமைந்தது கோவில்; அதன் பின்னே எழுந்தது கோட்டை; அதைச் சார்ந்து பேட்டையும் பாக்கமும் பெருகின. அனைத்தும் ஒருங்கு சேர்ந்து சென்னை மாநகரமாகச் சிறந்து விளங்குகின்றது.

.

அடிக் குறிப்பு

7. “ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்கார்தரு சோலைக் கபாலீச்சுரம் அமர்ந்தான்.” – திருஞான சம்பந்தர், திருமயிலாப்பூர்ப் பதிகம், 4.

8. ………………‘நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்”- திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி, 35.

9. சென்னை வரலாறு (History of Madras, C.S. Srinivasachariar, p.190)

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்