சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 911 – 915
911. assistance international/International assistance | பன்னாட்டுதவி பன்னாட்டு உதவி ஒரு நாட்டிற்குப் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள். பன்னாட்டு உறவுகள் மூலமும் பன்னாட்டவை( UNO), பன்னாட்டுப் பண நிதியம் (International Monetary Fund) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலமும் கிடைக்கும் உதவிகள். 1923 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பன்னாட்டுக் காவல் துறை(The International Criminal Police Organization – INTERPOL) 184 உலக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் உதவியும் பன்னாட்டுதவியில் அடங்கும். |
912. assistance, invaluable /Invaluable assistance | விலைமதிப்புள்ள விலையுயர்ந்த அருமதிப்புள்ள உதவி / அருமதிப்பான உதவி விலைமதிக்க முடியாத உதவி விலைமதிக்கவியலாத உதவி விலைமதிப்பற்ற உதவி Invaluable – வெகுமதிப்புள்ள என்பர். costly என்பதற்குத்தான் அது பொருந்தும். குற்றஞ்சாட்டப்படுநருக்கு அல்லது குற்றஞ்சாட்டுநருக்கு, வாதிக்கு அல்லது எதிர்வாதிக்கு வழக்காடுதலில் விலைமதிப்பில்லா கருத்துதவி கிடைப்பது அவர்கள் வாகைசூட வாய்ப்பாக அமையும். நீதிமன்றங்களில் வழக்கு ஆய்வில் அல்லது புலனாய்வில் அருமதிப்பான உதவி புரியும் ஊழியர்கள் அல்லது வழக்குரைஞர்கள் இருப்பது செவ்விய தீர்ப்பு வழங்க உதவியாக அமையும். |
913. assistance, legal / Legal assistance | சட்ட உதவி சட்ட உதவி என்பது இலவயச் சட்ட உதவியையே (Free Legal Aid) குறிக்கிறது. வழக்குரைஞரை அமர்த்திக் கொள்ள வசதியற்ற ஏழையருக்கு அரசே நிதியுதவி வழக்குரைஞரை அமர்த்திச் சட்ட உதவி கிடைக்க வழி செய்வது. சட்ட உதவி கிடைக்காமல் யாரும் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக நலிந்த பிரிவினருக்கு அரசு சட்ட உதவி கிடைக்க வழி செய்கிறது. இந்தியாவில் மாநிலங்கள்தோறும் இலவசச் சட்ட உதவி அறிவுரைக்கழகம் (free legal advisory board) அமைக்கப்பட்டு அவை மூலம் சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. ஏறத்தாழ 47 நாடுகளில் சட்ட உதவி வழங்கப்படுவதில்லை. |
914. assistance. medical / Medical assistance | மருத்துவ உதவி மருத்துவம் சார்ந்த முதலுதவிகளையும் பிற நிலை உதவிகளையும் குறிக்கிறது. மருத்துவ [உதவி] உதவி என்பது குமுகப் பாதுகாப்புச் சட்டத்தின் தலைப்பு 19 (Title XIX of the Social Security Act) இன் கீழ் மாநிலத்தால் செயலாக்கப்படும் திட்டமாகும். இது தகுதியானவர்களும் குறைந்த வருமானம் கொண்டவர்களுமான தனியர்களுக்குத் தேவைப்படும் விரிவான மருத்துவ, உடல்நலம் தொடர்பான பிற நலக் கவனிப்புகளை வழங்குகிறது. |
915. assistance, mutual / mutual assistance | இருநிலை உதவி பன்மாற்ற உதவி ஒருவர்க்கொருவர் உதவி என்பது பொதுவான பொருள். என்றாலும் அரசுகளுக்கிடையே உதவி அல்லது மாநிலங்களுக்கு இடையே உதவி என்பதையே குறிக்கிறது. பரசுபரம் என்பது அயற்சொல். பல்வேறு அரசுகளுக்கு இடையே முறையான பிணைப்பு ஒப்பந்த அடிப்படையில் பரிமாற்ற அடிப்படையில் செயல்முறை சேவை, சான்றுகளைப் பெறுதலும் பயன்படுத்துதலும் ஆகியவற்றையே குறிக்கிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply